Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |
உலகம் ஆல்பம்

தினமலர் : இந்தியா கொடுத்த ஆதாரங்கள் போதுமானதல்ல : விமர்சிக்கிறது பாகிஸ்தான்

இந்தியா கொடுத்த ஆதாரங்கள் போதுமானதல்ல : விமர்சிக்கிறது பாகிஸ்தான்

ஜனவரி 07,2009,00:00  IST

இஸ்லாமாபாத் : மும்பை தாக்குதல் தொடர்பாக இந்திய அரசு கொடுத்த ஆதாரங்கள் போதுமானதல்ல. அந்த ஆதாரங்கள் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என, பாகிஸ்தான் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு உள்ளது. அந்நாட்டைச் சேர்ந்தவர்களே தாக்குதல் நடத்தினர். அங்கிருந்துதான் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன என்பதற்கான ஆதாரங்களை, பாகிஸ்தான் ஹை கமிஷனரிடம் இந்திய வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன் நேற்று முன்தினம் வழங்கினார்.



இந்நிலையில், "மும்பை தாக்குதல் தொடர்பாக இந்தியா கொடுத்த ஆதாரங்கள் போதுமானதல்ல. அந்த ஆதாரங்கள் அடிப்படையில் எந்த நடவடிக்கையையும் பாகிஸ்தான் அரசு எடுக்க முடியாது. கைதான பயங்கரவாதி அஜ்மல் அமீர் கசாப்பின் வாக்குமூலங்கள் திரித்துக் கூறப்பட்டுள்ளன' என, இஸ்லாமாபாத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் ரிச்சர்டு பவுச்சரிடம் பாக்., நிர்வாகத்தினர் தெரிவித்ததாக, அந்நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இருந்தாலும், அமெரிக்க துணை அமைச்சரிடம் யார் இந்தத் தகவலை தெரிவித்தது என்பதும், இந்தியா கொடுத்த ஆதாரங்கள் எந்த அடிப்படையில், குறைபாடு உடையதாக உள்ளன என்பதும் தெரிவிக்கப்படவில்லை.



இதுதொடர்பாக பாக்., உள்துறை அமைச்சக வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: இந்திய அரசு கொடுத்த ஆதாரங்கள் எல்லாம், பாகிஸ்தான் மீது பழி சுமத்தும் வகையில் வேண்டுமென்றே தயாரிக்கப்பட்டவை. அதில், ஏற்கனவே வெளியான தகவல்கள் தவிர புதிய தகவல்கள் எதுவும் இல்லை. பாகிஸ்தானின் பழங்குடியின பகுதிகளிலும், பலுசிஸ்தானிலும் நடந்து வரும் பயங்கரவாதத்திற்கு இந்தியா உதவி வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் இதுதொடர்பான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது.இதுகுறித்த விவரங்களை எல்லாம் சேகரித்து விரைவில் அமெரிக்காவுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் அனுப்புவோம். அப்போதுதான், தெற்கு ஆசியாவில் எந்த நாடு பயங்கரவாதத்திற்கு ஆதரவு தந்து கொண்டிருக்கிறது என்பது உலகத்திற்கு தெரியும்.



மேலும், ஆதாரங்களை கொடுத்த இந்தியா, மும்பை தாக்குதலுக்கு மூல காரணமாக இருந்துள்ள லஷ்கர் - இ- தொய்பா கமாண்டர்கள் ஜாகீர் ரகுமான் லக்வி மற்றும் சரார் ஷாவை பிடித்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. அதனால், ஆதாரங்கள் தொடர்பாகவும், இந்த கோரிக்கை தொடர்பாகவும் அடுத்த ஓரிரு நாட்களில் பாகிஸ்தான் அரசு தரப்பில் பதில் அளிக்கப்படும்.இவ்வாறு பாக்., உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.



இதற்கிடையில், டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்தியாவுக்கான பாகிஸ்தான் ஹை கமிஷனர் ஷாகித் மாலிக் கூறுகையில், "மும்பை தாக்குதல் தொடர்பாக இந்திய அரசு கொடுத்த ஆதாரங்களை பாகிஸ்தான் அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதற்காக புலனாய்வு நிறுவனங்களின் அதிகாரிகள் அடங் கிய குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. ஆதாரங்களை பரிசீலித்த பின், அந்தக் குழு அறிக்கை தயாரித்து வெளியிடும்' என்றார்.



மறுக்கிறது பாக்., அரசு :"இந்தியா கொடுத்த ஆதாரங்கள் போதுமானதல்ல என, பாக்., நிர்வாகத்தினர் கூறியதாக பத்திரிகைகளில் வெளியான செய்திகள் அவசரப்பட்டு முதிர்ச்சியற்ற வகையில் வெளியிடப்பட்டவை. அதில், எந்த உண்மையும் இல்லை' என, அந்நாட்டின் அதிபர் அலுவலக தகவல் தொடர்பாளர் பர்கதுல்லா பாபர் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "இந்திய அரசு நேற்று முன்தினம் தான் ஆதாரங்களைக் கொடுத்துள்ளது. அதை முறைப்படி பரிசீலித்த பின்னரே, பாக்., அரசு தன் பதிலை தெரிவிக்கும். இந்தியா கொடுத்த ஆதாரங்கள் தொடர்பாக அரசு தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை' என்றார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font        | 
  மின்னஞ்சல்  |   |  Bookmark and Share


No Comments Found!
மேலும் உலகம் செய்திகள்

முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in