sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

2


PUBLISHED ON : நவ 02, 2025

Google News

PUBLISHED ON : நவ 02, 2025

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்பு சகோதரிக்கு -

நான், 55 வயதான விதவை. என், 20வது வயதில் எனக்கு திருமணமானது. எனக்கு, இரண்டு மகன்கள், ஒரு மகள். என் கணவர் இறந்து விட்டார். அவர், சொத்து எதுவும் எனக்கு வைத்து விட்டு போகவில்லை.

என் மூன்று குழந்தைகளையும், படிக்க வைத்து, ஆளாக்க நான் பட்டபாடு சொல்லி முடியாது. வீட்டு வேலை, சமையல் வேலை என்று சகல வேலைகளையும் செய்துதான் அவர்களை வளர்த்தேன். என் மாமனார் வீட்டிலிருந்து, ஒரு நயாபைசா கூட தர மறுத்து விட்டனர்.

என்னை, 'சின்ன வீடாக வைத்துக் கொள்கிறேன்; உன் குழந்தைகளையும் காப்பாற்றுகிறேன்...' என்றான், என் கணவரின் தம்பி. அதைவிட இறப்பதே மேல் என்று தனியாக வந்து விட்டேன்.

என் பெற்றோருக்கும் அதிக வசதி இல்லை. நல்லவேளை, என் பிள்ளைகள் படிப்பில் முதன்மையாளர்களாக இருந்ததால், 'ஸ்காலர்ஷிப்' மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் நன்றாக படித்தனர்.

இன்று, என் மூத்த மகன், மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில், பெரிய நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறான்.

சின்னவன், மேற்படிப்புக்காக, ஆஸ்திரேலியா சென்றுள்ளான். மகள், இன்ஜினியரிங் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாள்.

பெரியவனுக்கு, எட்டு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து வைத்தேன். மருமகளும், மாதம், 50 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறாள். என்னிடமும், மகளிடமும் பிரியமாக இருக்கிறாள். ஆனால், கொஞ்சம் சுயநலமாக நடந்து கொள்வது தான் மனதை உறுத்துகிறது.

நான், மருமகளுக்கு எந்த குறையும் வைப்பதில்லை. நான் எந்த பலகாரம் செய்தாலும், அனைவருக்கும் சமமாகத்தான் பகிர்ந்தளிப்பேன். மருமகள், அவள் அம்மா வீட்டுக்கு செல்லும் போதெல்லாம், இனிப்பு மற்றும் கார வகைகளை நிறைய செய்து கொடுத்தனுப்புவேன். அவர்களுக்கும் சந்தோஷம் தான்.

ஆனால், என் மருமகள், அவள் அம்மா வீட்டிலிருந்து எது கொண்டு வந்தாலும், யாருக்கும் தெரியாமல், அதில் பாதி அளவு, தனியாக தன் அறையில் வைத்துக் கொண்டு, மீதியை எடுத்து வந்து தருவாள். என் மகன் வாங்கி வருவதிலும், பாதியை பதுக்கிக் கொள்வாள். மகன், தன் தங்கைக்காக, டிரஸ், ஹேண்ட்பேக், கொலுசு போன்று ஏதாவது வாங்கி வந்தால், 'இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நான் வைத்துக் கொள்கிறேன்...' என்று எடுத்து சென்று, தன் அறையில் வைத்துக் கொள்வாள்.

என் மகளும் இவள் வயதுள்ளவள் தான். இன்னும் கொஞ்ச நாளில், திருமணமானால், வேறு வீட்டுக்கு போய் விடுவாள். அவளிடம் எதற்கு இந்த பாகுபாடு காட்டுகிறாள் என்று புரியவில்லை.

சின்ன விஷயத்துக்கு வஞ்சனை செய்பவள், என் காலத்துக்கு பின், என் குழந்தைகளை பிரித்து விடுவாளோ என்று பயப்படுகிறேன். என் மகனிடம் இதை சொன்னால், தவறாக எடுத்துக் கொள்வானோ என்று பயமாக இருக்கிறது.

என் பிள்ளைகள், எப்போதும் எக்காலத்திலும் பிரியாமல், ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. மகளுக்கு கூட, வீட்டோடு இருக்கும் மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன்.

என் மகன்களும், என் விருப்பத்தை புரிந்து, நிலம் வாங்கி, பெரிய வீடாக கட்ட முடிவெடுத்துள்ளனர். மூத்த மகனுக்கு குழந்தை பிறந்தால், மருமகளின் போக்கில் மாற்றம் வந்து விடுமோ என்றும் பயப்படுகிறேன்.

மருமகள், தன் சம்பள பணத்தை மகனிடம் தருவதில்லை; என்னிடமும் தருவதில்லை. என் மருமகளின் போக்கை மாற்ற முடியுமா, சகோதரி?

- இப்படிக்கு, உங்கள் சகோதரி.

அன்பு சகோதரிக்கு -

சிலர் மருமகனை, 'மறு-மகன்' என்பதும், சிலர் மருமகளை, 'மறு-மகள்' என்பதும் அபத்தமான அணுகுமுறை. மருமகளின் பெற்றோர் இருக்க, உங்களை எப்படி அவர்கள் தாயாக, தந்தையாக வரித்துக் கொள்வர்? நீங்கள் தயாரித்து கொடுத்த பொருட்களை பயன்படுத்தும் நுகர்வோர் அவர்கள். உன், 30 ஆண்டு தவ வாழ்க்கையை பற்றி உன் மருமகளுக்கு தெரியாது. இளம் தலைமுறையினரிடம் ஒரு மில்லி கிராம் பச்சாதாபம் கூட எதிர்பார்க்க முடியாது.

உன் இளைய மகன் ஆஸ்திரேலியாவில் மேற்படிப்பு படிப்பதற்கும், உன் மகள் இன்ஜினியரிங் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படிப்பதற்கும் கல்விச்செலவு செய்வது யார்? உன் மூத்த மகன் தானே! அதற்கு, உன் மருமகளிடமிருந்து தடை வரவில்லையே என சந்தோஷப்படு.

இன்று வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களின், அம்மாவை அல்லது மாமியாரை விலையில்லா ஆயாவாக தான் பாவிக்கின்றனர்.

வீட்டிலிருந்து வரும் தின்பண்டங்களில் பாதி பதுக்கி, மீதியை புகுந்த வீட்டின் அங்கத்தினர்களுக்கு தரத் தானே செய்கிறாள், உன் மருமகள். கிடைக்கும் பாதியில் திருப்திபடு.

உன் மகன், தன் தங்கைக்கு எது, வாங்கினாலும் இரண்டு, 'செட்' வாங்கி வரட்டும். ஒன்று மனைவிக்கு, இன்னொன்று, தங்கைக்கு.

உறவுகளை நிரந்தரமாய் ஒட்டி வைக்கும் பெவிகால், உலகில் எந்த அங்காடியிலும் கிடைக்காது.

உன் மகளுக்கு வீட்டோடு மாப்பிள்ளை பார்த்தால் அது எப்படி உங்களை ஒருங்கிணைத்து வைக்கும்? வீட்டோட மாப்பிள்ளை, பூமராங் மாதிரி. அது பெரும்பாலும், பாவிப்பவர்களையே பதம் பார்க்கும்.

ஆஸ்திரேலியாவில் மேற்படிப்பு படிக்கப் போயிருக்கும் உன் இளைய மகன் காதலில் விழ வாய்ப்பு அதிகம். அவன் திருமணம் செய்து கொண்ட பின், அண்ணனுடன் சேர்ந்து பொது நிலம் வாங்குவான் என்பது என்ன நிச்சயம்!

உன் மருமகள், உன் மகனிடம் அல்லது உன்னிடம் சம்பள பணத்தை தராதது மரணத் தண்டனைக்குரிய குற்றமல்ல. எதற்கு தர வேண்டும்? உன் மருமகள் தன் சம்பாத்தியத்தை தானே வைத்து கொள்வதில் உனக்கு என்ன பிரச்னை?

பழைய திரைப்படங்கள் போல தோளில் கைகோர்த்து கொண்டு, 'லல்லா லல்லல்லா' பாடும் கூட்டுக் குடும்பத்தை கனவு காணாதே.

மருமகளிடம் எதையும் எதிர்பார்க்காதே. மகன்-மருமகளின் தாம்பத்ய வாழ்வில் உன் அபிப்ராயங்களை திணிக்காதே. இரு மகன்களும், ஒரு மகளும் அவரவர் திருமணங்களுக்கு பிறகும் ஒற்றுமையாக இருக்க உன் பங்கு முயற்சிகளை மேற்கொள்; ஆனால், பலனை எதிர்பார்க்காதே.

பேரன் அல்லது பேத்தி பிறந்தால், மருமகளின் போக்கில் மாற்றம் வருமா என யோசிக்காதே!

பேரன் அல்லது பேத்தி பிறந்தால் எடுத்துக் கொஞ்ச தயாராக இரு. உடம்பு ஒத்துழைக்கும் கடைசி நொடி வரைக்கும், பேரன் - பேத்தி வளர்ப்பில் பங்கு பெறு.

மருமகளின் போக்கை மாற்ற நீ யார்? யோசனை சொல்ல நான் யார்? நதி சுழித்தோடும் பாதையிலேயே உன் படகை செலுத்து.

உனக்கு பின்னும் உன் மகன்களும், மகளும் சிறப்பாக இயங்குவர். எந்த தனி மனிதரையும் நம்பி இந்த பூமி இயங்கவில்லை. அனைவரும் வழிப்போக்கர்களே!

உன் மருமகள் கர்ப்பமாய் இருப்பாள் என யூகிக்கிறேன். பிறக்கப் போகும் ரோஜாக் குவியலுக்கு அன்பு முத்தங்கள்!



— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத் .






      Dinamalar
      Follow us