
ரவுடி, 'கெட்டப்பு'க்கு மாறும், சித்தார்த்!
பெரும்பாலும், 'ரொமான்டிக்'கான கதைகளிலேயே அதிகமாக நடித்துள்ள, நடிகர், சித்தார்த், சமீபகாலமாக அதிரடியான 'கேங்ஸ்டர்' கதைகளுக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டிருப்பதால், ரவுடி அண்ட் கோ என்ற தமிழ் படத்தில், அவர் ஒரு, 'ரவுடி' வேடத்தில் நடிக்க போகிறார். அந்த வேடத்துக்கு ஏற்றாற்போல் தோற்றம் கம்பீரமாக வேண்டும் என்பதற்காக, 'வெயிட்' போட்டும், தலையில் கூடுதலாக முடி வளர்த்தும் வித்தியாசமான தோற்றத்திற்கு தன்னை மாற்றி வருகிறார்.
சினிமா பொன்னையா
சிரஞ்சீவி படத்துக்கு டாட்டா காட்டிய, மாளவிகா!
ஏற்கனவே நடிகர், மோகன்லாலுடன், ஹிருதயபூர்வம் என்ற மலையாள படத்தில் நடித்தபோது, அப்பா வயது நடிகருடன் நடிப்பதாக விமர்சிக்கப்பட்டார் நடிகை, மாளவிகா மோகனன். இந்நிலையில் தற்போது, நடிகர், பிரபாஸ்க்கு ஜோடியாக, தி ராஜா சாப் என்ற தெலுங்கு படத்தில் நடித்த, அவரை பெரிய சம்பளம் தருவதாக ஆசை காட்டி, இன்னொரு தெலுங்கு படத்தில், நடிகர், சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க சமீபத்தில் அழைப்பு விடுத்தார், தயாரிப்பாளர் ஒருவர். ஆனால், நடிகையோ, 'எவ்வளவு பெரிய சம்பளம் தந்தாலும், அப்பா வயது கொண்ட நடிகர்களுடன் இனிமேல் நடிப்பதாக இல்லை...' என்று, 'எஸ்கேப்' ஆகிவிட்டார்.
— எலீசா
குடும்ப நடிகையாக உருவெடுக்கும், ஸ்ரீ லீலா!
தற்போதைய இளவட்ட நடிகையர், ஆரம்பத்தில் குடும்பப் பங்கான வேடங்களில் நடிக்க துவங்கி, பட வாய்ப்புகள் குறையும் போது தான், கிளாமருக்கு மாறுவர். ஆனால், 'கிளாமர் ஹீரோயின்' ஆக தெலுங்கு சினிமாவில், 'என்ட்ரி' கொடுத்து பிரபலமான நடிகை, ஸ்ரீ லீலாவோ, தற்போது, சிவகார்த்திகேயனுடன், பராசக்தி படத்தில், குடும்பப்பாங்கான, 'ஹீரோயின்' ஆக நடித்திருக்கிறார். 'இந்த படம் தனக்கு, 'சூப்பர் ஹிட்'டாக அமைந்து, தன் நடிப்பு பேசப்பட்டால், கிளாமரை ஓரங்கட்டி விட்டு முழு நேர, 'ஹோம்லி ஹீரோயின்' ஆக, 'ரூட்'டை மாற்றி விடுவேன்...' என்கிறார்.
— எலீசா
இயக்குனர் அவதாரம் எடுக்கும், கீர்த்தி சுரேஷ்!
திருமணத்திற்கு பிறகு, தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க, ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை, கீர்த்தி சுரேஷ். இருப்பினும், இனிமேல் தனக்கு பெரிதாக கதாநாயகி வாய்ப்புகள் வராது என்பதை புரிந்து கொண்டு, தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை அவரே எழுதி, இயக்கயிருகிறார்.
தன் தந்தை சுரேஷ் ஏற்கனவே, மலையாளத்தில் பல படங்களை தயாரித்தவர் என்பதால், அவரையே மீண்டும் தயாரிப்பாளராக்கி தன் முதல் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார், கீர்த்தி சுரேஷ். அந்த படத்தில் தான் நடிப்பதா அல்லது வேறு நடிகர் -நடிகைகளை நடிக்க வைப்பதா, என்று ஆலோசனை செய்து வருகிறார்.
— எலீசா
இரண்டாம் பாகத்தை தவிர்த்த, விஜய் சேதுபதி!
நடிகர், விஜய் சேதுபதியின் ஆரம்ப கால படங்களில், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா அவருக்கு பெரிய, 'ஹிட்' படமாக அமைந்தது. அதில் நடித்த, சுமார் மூஞ்சி குமார் வேடம், ரசிகர்களால் கொண்டாடப்பட்ட போதும், தற்போது, அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதை தவிர்த்து விட்டார், விஜய் சேதுபதி. காரணம், இப்போது, தன், 'இமேஜ்' மாறிவிட்டதால், அப்போது நடித்தது போன்ற இன்னொரு தர லோக்கலான வேடத்தில் மீண்டும் நடிக்க விரும்பவில்லை, என்கிறார்.
சினிமா பொன்னையா
கருப்புப்பூனை
நடித்துக் கொண்டே சில படங்களை இயக்கிவரும், சுள்ளான் நடிகர், தன் முன்னாள் மாமனாரான உச்ச நடிகரின் 173 வது படத்துக்கு சரியான கதை அமையாமல் இருப்பதால் அவருக்காக ஒரு கதையை தயார் செய்து, அதை அவருக்கு சொல்ல, போன் பண்ணி இருக்கிறார். ஆனால் உச்ச நடிகரோ, சுள்ளான் நடிகரிடம் கதை கேட்க மறுத்து விட்டார். காரணம் கேட்ட போது, 'உங்கள் இயக்கத்தில் நான் நடிக்க விரும்பினாலும், விவாகரத்து பெற்ற, என் மகள் உங்கள் படத்தில் நான் நடிப்பதை விரும்ப மாட்டாள். அதனால், குடும்பத்தில் தேவையில்லாத சலசலப்பு ஏற்படும்...' என்று சொல்லி நழுவிக்கொண்டாராம், உச்ச நடிகர்.
சினி துளிகள்
* ரஜினியின் 173-வது படத்திற்கு சுந்தர். சி சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்காமல் போனதால், அந்த படம் கைவிடப்படவில்லை. 'வேறு கதை கிடைத்ததும் அந்த படத்தை நானே தயாரிப்பேன்...' என்கிறார், கமல்ஹாசன்.
* தான் சினிமாவில் நடித்து சம்பாதித்த, 3,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஏழைகளுக்கான அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கி இருக்கிறார், 'ஹாலிவுட்' நடிகர், ஜாக்கி சான்.
* கருப்பு படத்தில் நடித்துள்ள, நடிகை, திரிஷா, தற்போது நடிகர், மோகன்லாலுடன், ராம் என்ற மலையாள படத்தில், நடித்து வருகிறார். இந்த படத்தை, கமல் நடித்த, பாபநாசம் படத்தை இயக்கிய, இயக்குனர், ஜீத்து ஜோசப் இயக்குகிறார்.
அவ்ளோதான்!

