PUBLISHED ON : டிச 07, 2025

நல்ல உள்ளம் கொண்ட அரசர் ஒருவர் எப்போதும் பொதுமக்களுக்கு நன்மை தரும் பணிகளையே செய்து வந்தார். அவர் மனம் அறிந்து எந்தத் தவறும் செய்ததில்லை.
தினமும், தன் கைகளாலேயே ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது, அரசரின் வழக்கம்.
ஒருநாள், அவர் அன்னதானம் செய்யும் சமயத்தில், வானத்தில், பாம்பைத் துாக்கிக் கொண்டு பறந்து சென்றது, ஒரு கருடன்.
கருடனிடமிருந்து தப்பிக்கப் பாம்பு முயன்ற போது, பாம்பின் வாயிலிருந்து வெளியேறிய விஷம், அரசர் அந்தணருக்கு அன்னதானம் கொடுத்த உணவில் விழுந்தது. அதை யாரும் கவனிக்கவில்லை.
பாம்பின் விஷம் விழுந்த உணவை, வாங்கிய அந்தணர் அருகில் இருந்த மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்ட உடனே, மயங்கி விழுந்து இறந்தார்.
அங்கு, அன்னதானம் பெற வந்த மூதாட்டி, அந்தணர் இறந்ததை பார்த்து, 'அரசர் தான் கொன்று இருப்பார்...' என்று நினைத்துக்கொண்டாள்.
'அரசர் நல்ல எண்ணத்துடன் அன்னதானம் செய்தார். எனவே, அந்தணர் இறந்த பாவத்திற்கு அரசரைப் பொறுப்பாக்குவது சரியில்லை; இந்த பாவத்துக்கு யார் காரணம்?' என்ற தர்ம சங்கடம், தர்மதேவதைக்கு ஏற்பட்டது.
நாட்கள் கடந்தன. ஒரு நாள், வெளியூரிலிருந்து, நான்கு அந்தணர்கள் அரசரிடம் அன்னதானம் பெற வந்தனர். அவர்களுக்கு, அரசரது இருப்பிடத்துக்கு எப்படி செல்வது என்று தெரியவில்லை.
அப்போது, சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்த, மூதாட்டியிடம் சென்று, 'நாங்கள் வெளியூரிலிருந்து அரசரிடம் அன்னதானம் பெற வந்திருக்கிறோம். அரண்மனைக்கு எந்த வழியில் செல்ல வேண்டும்?' என்று கேட்டனர்.
அந்தணர்களுக்கு வழிகாட்டிய மூதாட்டி, அரசரிடம் உணவு பெற்ற, அந்தணர் இறந்து போனது நினைவுக்கு வர, 'அரசர் மிகவும் நல்லவர் தான். ஆனால், தானம் கொடுத்தபிறகு, தானம் பெற்ற அந்தணர்களை கொன்று விடுவார்...' என்று அரசரைப் பற்றிய தவறான செய்தியை கூறினாள்.
மூதாட்டி கூறியதைக் கேட்ட அந்தணர்கள், அரசரிடம் செல்ல பயந்து, அன்னதானம் பெறும் எண்ணத்தை தவிர்த்து அவர்கள் ஊருக்கே திரும்பி சென்றனர்.
எதையும் சரியாக விசாரிக்காமல் அரசரைப் பற்றி தவறான செய்தியை அந்தணர்களுக்கு சொன்ன மூதாட்டியையே அந்த பாவத்துக்கு காரணமாக்க முடிவு செய்தாள், தர்மதேவதை. அதன்படி, முழு பாவமும் அவளை அடைந்தது.
யாரோ ஒருவரைப் பற்றி அரைகுறையாக ஏதோ கேள்விப்படுகிறோம்; அதை வைத்து, அவர் மீது அபாண்டமாகப் பழி சுமத்தினால், முழு பாவமும் நம்மை வந்து சேரும்.
மற்றவர்களை விமர்சிப்பதால் நம்மையும் அறியாமல், நாம் பாவம் செய்கிறோம். நேரடியாக நாம் பாவத்தைச் செய்யா விட்டாலும், பாவம் நம்மைச் சேர்கிறது என்பதை நாம் அறிய வேண்டும்!
அருண் ராமதாசன்

