sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தீபாராதனா! (5)

/

தீபாராதனா! (5)

தீபாராதனா! (5)

தீபாராதனா! (5)


PUBLISHED ON : நவ 02, 2025

Google News

PUBLISHED ON : நவ 02, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதைச் சுருக்கம்: தீ பாவின் அப்பா ஞானசேகரன், திடீரென இறந்து விட, தீபாவும், அவளது அம்மாவும் நிலை குலைந்து போயினர்.

ஞானசேகரனின் இறுதி காரியங்கள் நடைபெற்ற போது, ஆராதனா என்ற பெண்ணும், அவளது தம்பி வருணும், அங்கு வந்தனர்.

ஞானசேகரன் உடலை பார்த்து, 'அப்பா...' என கதறி அழுதாள், ஆராதனா. அங்கிருந்த அனைவருக்கும், அவர்களை பற்றி பல எண்ணங்கள் தோன்றின.

அவளது குரலை கேட்டு, ஞானசேகரனின் மனைவி, மஞ்சுளா, ஆவேசமாக எழுந்து வந்து, 'உடனடியாக, இங்கிருந்து போய் விடு...' என்று கத்தினாள்.

'அப்பாவுக்கு சின்ன வீடு இருந்ததா...' என்று சந்தேகப்பட்டாள், தீபா.


வ ருணின் கையை கோர்த்து கொண்டு நடந்தாள், ஆராதனா.

துக்க வீட்டில் மட்டுமல்லாமல், அக்கம்பக்கத்தில் நின்றிருந்தவர்கள் கூட, அவர்களையே சாடுவது போல் பார்ப்பதை அவள் கவனிக்காமல் இல்லை.

உள்ளுக்குள் நெகிழ்ந்து நொறுங்கியிருந்தாலும், வெளியில் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று இந்த வாழ்வு எத்தனை முறை தனக்கு கட்டளையிடப் போகிறது என்று அவளுக்குப் புரியவில்லை.

''அக்கா!''

''ம்?''

''ஏன் அவங்ககிட்ட நாம யாருன்னு நீ, சொல்லலை?''

''பார்த்தே இல்ல? தீபாவும் சரி, அவங்கம்மாவும் சரி, உடைஞ்சு போயிருக்காங்க! தள்ளி இருக்கிற நமக்கே துக்கம் தாங்காத போது, இத்தனை வருஷம் கூடவே இருந்து, திடீர்னு அவரைத் தொலைச்சவங்களுக்கு மனசு எப்படி இருக்கும்ன்னு யோசி. இப்பப் போய், நான் யாரு, நீயாருன்னு கதை சொல்லிட்டிருந்தா எதுவும் மனசுல ஏறாது. அவங்களால புரிஞ்சுக்க முடியாதுன்னு நெனச்சு தான இத்தனை நாளு அப்பா சொல்லாம இருந்திருக்காரு. இப்ப நான் எப்படி சொல்ல முடியும்?''

''ஆனா, நம்ப அம்மாவை தப்பாப் பேசினாங்களேன்னு தான் கொஞ்சம் வருத்தம்.''

''சரி, வருண். இதையெல்லாம் யோசிக்காம நீ போய், 'எக்ஸாம்'க்கு ஒழுங்கா தயார் பண்ணு.''

''சரிக்கா.''

அவர்கள் வந்து இறங்கிய ஆட்டோவே தெருமுனையில் நின்றிருந்தது. ஆராதனா கையை உயர்த்திக் காட்டியதும், அருகில் வந்து அவர்களை ஏற்றிக்கொண்டது.

''மொதல்ல,'காலேஜ் ஹாஸ்டல்' போங்க. அங்க இவனை, 'டிராப்' பண்ணனும்.''

ஆட்டோ புறப்பட்டது.

ஹா லில் திரைகள் விலக்கப்பட்டும், வெளிச்சம் குறைவாயிருந்தது. உறங்கி எழுந்த பின்னும், மேகங்களின் ஆதிக்கத்தில் சூரியன் அடக்கி வாசித்துக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியே புலப்பட்ட வானம் சாம்பல் நிறமும், ஆரஞ்சுத் தீற்றலுமாக குழம்பியிருந்தது.

சோபாவில் சரிந்து உட்கார்ந்திருந்தாள், தீபா.

தொலைக்காட்சியில், ஞானசேகரன் எப்போதோ கொடுத்த ஒரு பேட்டியின் சில துணுக்குகளை ஒளிபரப்பி, அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தனர்.

முந்தின மாலை வெளியான ஒரு மாலை செய்தித்தாளில் மட்டும், 'பிரபல தொழிலதிபர் ஞானசேகரன் வாழ்க்கையில் இன்னோர் அத்தியாயம் இருக்கலாம்...' என்று கட்டம் கட்டி கிசுகிசுக்கப்பட்டிருந்தது.

மற்றபடி, வந்தவர்கள் எல்லாம் துக்கம் விசாரித்து விட்டு, 'அம்மாவை ஜாக்கிரதையாப் பாத்துக்குங்க. என்ன உதவி வேணும்ன்னாலும், தயங்காம போன் பண்ணுங்க...' என்று உதட்டளவில் சொல்லி, அவரவர் கூட்டுக்குத் திரும்பி விட்டனர்.

ஹா லில் ஞானசேகரனின் பெரிய புகைப்படத்திற்கு, ரோஜா மாலை போட்டு, ஊதுபத்தி ஏற்றி வைத்திருந்தது. தமிழ் ஆங்கில தினசரிகளில், ஞானசேகரனின் முகம் கால் பக்கத்திற்கு அச்சாகி, கம்பெனி ஊழியர்களின் அஞ்சலி விளம்பரமாக வெளியாகியிருந்தது.

'அப்பாவுக்கு கருகருவென்று அடர்த்தியான முடி. எவ்வளவு அடர்ந்த புருவங்கள். எவ்வளவு கருணையான கண்கள், சிற்பி செதுக்கியது போல் எப்பேர்ப்பட்ட கூரான நாசி, சிவந்த உதடுகள்!'

தீபா, எப்படியெல்லாம் அவரை ரசித்திருக்கிறாள்! ஆனால், அதே முகத்தை இப்போது ரசிக்க முடியவில்லை. அந்தப் புகைப்படத்தை பார்க்கையில் அவருடைய முகத்தின் மீது ஒரு வண்டலாக அந்த, ஆராதனாவின் முகம் மிதந்து வந்து பதிந்ததுபோல் இருந்தது.

'அம்மா சந்தேகப்பட்டது சரியாகி விட்டதா? யாரும் எதிர்பாராத நேரத்தில் எப்படி திடுக்கிடலாய் துக்க வீட்டில் தடக்கென்று வந்து நின்றாள், அந்தப் பெண்? எனக்கிணையான வயதிருக்குமே அவளுக்கும்! அவளும், அவள் தம்பியும், 'அப்பா' என்று உறவு கொண்டாடிக் கொண்டு வந்து அத்தனை பேர் நடுவிலும் செத்துப்போன மனிதரை அசிங்கப்படுத்தி விட்டனரே!

'ஆனால், அவளிடம் ஏதோ ஒரு வசீகரம் இருந்ததே, அவள், உடை உடுத்தியிருந்த நேர்த்தியிலா, அதிராமல் பேசிய பேச்சிலா, ரகளை செய்யாமல் கண்ணீர் உகுத்தப் பாங்கிலா, அப்பாவின் பாதங்களை நாசூக்காகக் கண்களில் ஒற்றிக்கொண்டு மரியாதை செலுத்திய விதத்திலா! 'ச்சே, ஏன் அவளைப் போய் ரசித்துக் கொண்டிருக்கிறேன்!'

தீபா தலையை உலுக்கி, தறிகெட்டு ஓடிய சிந்தனைகளை விரட்டினாள். வலி ய தன் எண்ணங்களை எதிர்திசையில் செலுத்தினாள்...

'பேரைப்பார், ஆராதனாவாம்! ஏதோ ஹிந்திப்படத்தின் பெயரை போல! யாரடி நீ? எந்த உரிமையும் கொண்டாட உன்னை விட மாட்டேன்!'

ஹாலில் மாட்டியிருந்த அப்பாவின் படத்தை நிமிர்ந்து பார்த்தாள்...

'எப்படியப்பா உங்களுக்கு மனது வந்தது? இன்றைக்கும் தன் அழகில் சற்றும் குறைவற்ற என் அம்மா உங்களுக்கு என்ன குறை வைத்தாள்? பிசினஸ் பயணம் என்று அவ்வப்போது நீங்கள் இரண்டு நாள், மூன்று நாள் புறப்பட்டுப் போனதெல்லாம் இந்த ரகசிய வாழ்க்கையை வாழத்தானா? வெட்கமில்லாமல் இத்தனை நாள் வளைய வந்த உங்களுக்கு இப்போது என்ன திடீர் கவலை? எதற்காக, கோழை போல் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும்?'

அவர் மீது கோபமும், ஆத்திரமும் கொப்பளித்து எழுந்தன. அவருக்குச் சாத்தியிருந்த மாலையைப் பிய்த்து எறியலாமா என்று ஒரு உத்வேகத்தில் எழுந்தாள். குறுக்கிடுவது போல், அவளுடைய மொபைல் போன் உரக்க ஒலித்தது.

நின்றாள். எடுத்தாள்.

முத்துராமன்.

''ஹலோ!''

''மார்னிங், தீபா.''

''மார்னிங், அங்கிள்.''

''அம்மா எப்படியிருக்காங்க?''

''துவண்டுதான் போயிருக்காங்க. உடம்புக்கு வேணா, டாக்டர் கொடுத்த மருந்தை ரெகுலரா கொடுத்து சரி பண்ணலாம். குழம்பிக் கிடக்கற மனசை என்ன பண்றது? அப்பா போனது ஒரு அதிர்ச்சின்னா, திடீர்னு அந்தப் பொண்ணு வந்து அடுத்த அதிர்ச்சி கொடுத்திருச்சு.''

''எனக்கும் பெரிய, 'ஷாக்' தான், தீபா''

''நீங்க எல்லாரும் எதையோ மறைக்கறீங்க, அங்கிள்.''

''ஐயோ, அப்படில்லாம் ஒண்ணுமில்லம்மா. அந்தப் பொண்ணை நானும் இப்பதான் முதல் தடவையாப் பாக்கறேன்.''

''அப்புறம் பேசலாம்ன்னு சொன்னீங்களே... எப்ப பேசலாம் அங்கிள்?''

''இன்னிக்கு, 'ரெஸ்ட்' எடுங்கம்மா ரெண்டு பேரும். நாளைக்கு வரேன்.''

''இன்னிக்கு, 'மீட்' பண்ண முடியாதா, அங்கிள்?''

''கம்பெனி விஷயமா, சில முக்கியமான முடிவெல்லாம் எடுக்க, இன்னிக்கு, 'போர்டு மீட்டிங்' வெச்சாகணும், தீபா.''

'ம்ம்...' என்று முனகிவிட்டு, தீபா தொடர்பைத் துண்டித்து, சோபாவில் பொத்தென்று உட்கார்ந்தாள்.

திலகனின் அறை பளிச்சென்று இருந்தது.

ரீங்காரமில்லாமல், தீபா வாங்கிப் பரிசளித்த, 'ஸ்பிளிட் ஏ.சி.,' அறையில் குளிர்காற்றைக் கொட்டிக் கொண்டிருந்தது. மேஜையில் ஒரு கண்ணாடிக் கொக்கு, வயலெட் நிற நீரைக் குனிந்து, தன் மூக்கால் முத்தமிட்டு, நிமிர்ந்து மறுபடி குனிந்து... என்று பேட்டரி சக்தியில் இயங்கிக்கொண்டிருந்தது.

எதையும் நின்று ரசிக்காமல், பரபரப்பாக பல்கலைக்கழகத்துக்குப் புறப்பட்டு கொண்டிருந்தான், திலகன்.

போன் ஒலித்தது.

தீபா தான்.

எடுத்தான்.

'' ஹாய், செல்லக்குட்டி, இப்ப எப்படியிருக்கே?'' என்று கேட்டுக்கொண்டே ஷூவுக்குள் காலை நுழைத்தான்.

''மண்டை வெடிச்சிடும் போல இருக்கு. நீ வாயேன்,'' தீபாவின் குரலில் ஒரு கரகரப்பு சேர்ந்திருந்தது.

இன்றைக்கும் விடுப்பு எடுத்துக்கொண்டு, தீபாவின் அருகிலேயே இருக்க வேண்டும் என்று தான் அவனுக்கும் ஆசை. ஆனால், இன்று மும்பையிலிருந்து ஒரு பெரும் நிறுவன அதிபர், வகுப்புக்கு வருகிறார். முக்கியமான வணிக விரிவுரை ஒன்றை அவர் வழங்கவிருக்கிறார். அதைத் தவிர்க்க அவனுக்கு விருப்பமில்லை.

''இல்ல, தீபு, இன்னிக்கு நான் க்ளாஸை, 'மிஸ்' பண்ணவே முடியாது. முடிஞ்சதும், நேர அங்க வரேன்.''

பதிலே சொல்லாமல் அவள் தொடர்பை துண்டித்ததும், அதிர்ந்தான். கோபித்துக்கொண்டு விட்டாளா? அவள் எண்ணுக்கு அழைத்தான். அவள் எடுக்கவில்லை. மறுபடி மறுபடி அழைத்தான். அவள் எடுக்கவேயில்லை.

நேரில் போய் தான் சமாதானம் செய்ய வேண்டும். ஆனால், அதற்கு இப்போது நேரமில்லை. பைக்கை கிளப்பினான்.

ஹாலில் இருந்த பெரிய டிஜிட்டல் கடிகாரம், வினாடிக்கொரு தரம் கண் சிமிட்டிக் கொண்டிருந்தது.

சோபாவில் அமர்ந்திருந்தாள், மஞ்சுளா. குளிரெடுத்தவள் போல், கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிக் கொண்டிருந்தாள்.

பக்கத்தில் இன்னொரு சோபாவில் ச ப்பணமிட்டு உட்கார்ந்திருந்தாள், தீபா.

தனக்கெதிரே வைக்கப்பட்ட குளிர்பானத்தைத் தொடாமலேயே அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார், முத்துராமன்.

'திலகனும் சந்திக்க வரமாட்டானாம். முத்துராமனும் வரமாட்டாராம். என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றனர், எல்லாரும்?' என்று கொதித்துப் போய், போனில் முத்துராமனை அழைத்திருந்தாள், தீபா. சந்திப்பை மறுநாள் வரை தள்ளிப் போடக் கூடாது என்று சற்றுக் கறாராகவே பேசிவிட்டாள். அலுவலக வேலைகளையெல்லாம் முடித்து, களைத்தவராக அவர் புறப்பட்டு வந்திருந்தார்.

''நான் சொல்லப்போற விஷயம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கப்போறதில்ல. இந்த மாதிரி ஒரு மோசமான செய்தியை உங்ககிட்ட சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு வரும்ன்னு நான் நெனச்சுக் கூடப் பார்த்ததில்ல. தயவு செஞ்சு கொஞ்சம் பொறுமையாக் கேட்டுக்குங்க.''

பீடிகை பலமாயிருந்த போதே, தீபாவின் அடிவயிற்றில் தீப்பொறி பறந்தது. சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள், மஞ்சுளா.

''ஷிப்பிங் பிசினஸ்ல ஞானசேகரன் சார் உச்சத்துல இருந்தாலும், வேண்டாத ஒரு பேராசை வந்து அவர் மனசைக் கலைச்சிருக்கு.''

''சின்ன வீடு சபலம் தானே?'' என்று தொண்டை கமற கேட்டாள், மஞ்சுளா.

''அந்தப் பொண்ணு வந்திச்சே, அது அவரோட சின்ன வீட்டு வாரிசா?''

''அவருக்கு இன்னொரு பர்ஸனல் வாழ்க்கை இருந்தது பத்தி எனக்கு எதுவும் தெரியாதும்மா. நான் பேசறது, பிசினஸ்ல அவருக்கு வந்த சபலம்.''

''அம்மா, கொஞ்சம் குறுக்கப் பேசாம அவர பேசவிடு.''

எச்சிலை விழுங்கினார், முத்துராமன்.

''பிசினஸ்ல நமக்கு ரொம்ப நல்ல பேரு இருந்துச்சு. நம்ம சரக்கையெல்லாம் பொதுவா கஸ்டம்ஸ்ல சோதனைகூட போட மாட்டாங்க. அதைத் தெரிஞ்சுக்கிட்டு, ஒரு சப்ளையர் நம்ம, எம்.டி., சாருக்கு வேற ஒரு, 'ஐடியா' கொடுத்திருக்கான்.

'குறிப்பிட்ட நாட்டுலேர்ந்து இறக்குமதியாகற ரெடிமேட் டிரெஸ் துணி மடிப்புல போதை மருந்தைப் பதுக்கி எடுத்திட்டு வரலாம். லேபிளை மாத்தி அவங்க சொல்ற இன்னொரு நாட்டுக்கு ஏற்றுமதி பண்ணிடலாம். அப்படி செஞ்சா, கணக்குல காட்டாம கோடிக்கணக்குல சம்பாதிக்கலாம். துபாய்ல ஹோட்டல் பிசினஸ் ஆரம்பிக்கலாம். அது இதுன்னு அவரை சபலப்படுத்தியிருக்கான்.''

நிமிர்ந்து உட்கார்ந்தாள், மஞ்சுளா. திகைத்துப் போனவளாக கவனித்தாள், தீபா.

''எப்பவும், சட்டத்தை மீறாத எம்.டி., சார் என்கிட்ட கூடச் சொல்லாம, அதுக்குத் தலையாட்டியிருக்காரு.''

''அங்கிள், எனக்கு டென்ஷனா இருக்கு. நேரா பாயின்ட்டுக்கு வாங்க.'' என்றாள், தீபா.



- தொடரும்சுபா






      Dinamalar
      Follow us