/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
சொட்டுநீரில் சுகமாய் வளரும் 'டிராகன்' பழங்கள்
/
சொட்டுநீரில் சுகமாய் வளரும் 'டிராகன்' பழங்கள்
PUBLISHED ON : நவ 12, 2025

குறைந்தளவு தண்ணீர், குறைந்த பராமரிப்பில் 'டிராகன்' பழ சாகுபடியில் ஈடுபட்டுள்ளார் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள பழைய கோட்டையைச் சேர்ந்த விவசாயி ராஜாராம்.
தேனிக்கு 'டிராகன்' பழம் வந்த கதையை விவரித்தார் ராஜாராம்.
அப்பாவைப் போல விவசாயத்தில் ஈடுபாடு இருந்ததால், எனக்கு கிடைத்த அரசு பஸ் கண்டக்டர் பணியை வேண்டாம் என்றேன். எங்கள் நிலத்தில் பாசனத்திற்கு தண்ணீர் நிறைய கிடைத்த காலத்தில் நெல், கரும்பு சாகுபடி செய்தோம். தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதும் முருங்கை சாகுபடிக்கு மாறினேன். அப்போதும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியவில்லை. குறைந்த தண்ணீரில் என்ன பயிர் சாகுபடி செய்யலாம் என தேட ஆரம்பித்தேன்.
அப்போது 'டிராகன்' பழங்களைப் பற்றி நிறைய பேர் ஆலோசனை வழங்கினர். சோதனை முயற்சியாக இரண்டு ஏக்கரில் 'டிராகன்' சாகுபடி செய்ய திட்டமிட்டேன். 'டிராகன்' செடிக் கன்றுகளை வளர்ப்பதற்கு கம்பு அல்லது இரும்புத்துாணால் முட்டு கொடுக்க வேண்டும்.
இதற்காக ஏக்கருக்கு 500 இரும்புத் துாண்களை ஊன்றி அதன் மேல் வட்டவடிவ உருளைகளை பொருத்தினேன். ஒவ்வொரு துாணிற்கும் 4 பக்கத்தில் 4 செடிகள் வீதம் 'ஷ்யாம்ரெட்' ரக 2000 செடிகளை நடவு செய்தேன்.
சொட்டுநீர்ப்பாசனம்
குறைந்த தண்ணீரில் வளரும் என்றாலும் தண்ணீரை இன்னும் சிக்கனப்படுத்துவதற்காக சொட்டு நீர்ப்பாசனம் அமைத்தேன். உரமாக மண்புழு உரம், பழக்கரைசல் தருகிறேன். இலைகள் இல்லாததால் பூச்சி நோய் தொல்லை இல்லை.
இதனால் மருந்து தெளிக்கும் செலவு குறைகிறது என்றாலும் நோய் தடுப்பிற்காக இயற்கை பூச்சிவிரட்டிகளை சொந்தமாக தயாரித்து பயன்படுத்துகிறேன். ஒருமுறை நடவு செய்தால் இவை 25 முதல் 30 ஆண்டுகள் பலன் தரும். நடவு செய்த ஒன்றரை ஆண்டுகளில் அறுவடை துவங்கும். ஆண்டுதோறும் மே முதல் டிசம்பர் வரை ஒரு செடியில் ஆண்டிற்கு 10 கிலோ பழம் வரை அறுவடை செய்யலாம்.
சீக்கிரம் கெடாது
ஒரு பழம் 200 கிராம் முதல் 600 கிராம் வரை எடை இருக்கும். கடந்த முறை அறுவடை செய்த போது நேரடியாக வந்து வாங்கியவர்களுக்கு கிலோ ரூ.100க்கு விற்றேன். இப்பழத்தை தமிழில் கமலம் என்கின்றனர். இதில் வைட்டமின் 'சி' அதிகம் உள்ளது.
பல்வேறு சத்துக்கள் அடங்கி உள்ளதால் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. மற்ற பயிர் சாகுபடியில் நிரந்தர விலை கிடைக்குமா என்பது சந்தேகம் தான். இந்த பழங்களுக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை நிரந்த விலை கிடைக்கிறது. எனக்கு கிடைத்த தொழில்நுட்ப அறிவை மற்ற விவசாயிகளுக்கும் வழங்குகிறேன். இப்பழத்தை குளிர்சாதன பெட்டி இல்லாமல் 15 நாட்கள் வரை வைத்திருக்கலாம்.
தோட்டத்திலேயே மண்புழு உரம் தயாரித்தும் விற்கிறேன். இயற்கை சாகுபடி என்பது தான் எதிர்கால சந்ததியரை வாழவைக்கும் என்பதை மற்ற விவசாயிகளுக்கும் கற்றுத் தருகிறேன் என்றார்.
தொடர்புக்கு 94438 21369
-மகா காளீஸ்வரன், தேனி

