PUBLISHED ON : மே 24, 2026

'துாய சக்தி - துாக்குற சக்தி; குதிரை பேரம் - குதிரை வேகம்' வகை 'பூமர் அங்கிள் காமெடிகள்' இல்லா படம்
'சிவில் இன்ஜினியரிங்' வெறியனாக தன்னை காட்டிக்கொள்ளும் சாம்குட்டி, அரியர்கள் குவிந்தாலும் கல்லுாரியில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதிலேயே குறியாய் இருக்கிறான்; தனது 'தாதா' வாழ்வை மறந்து சங்கீத ஞானம் பெறும் முயற்சியில் பாட்டுப் பாடி கொல்கிறான் ஸ்ரீகுட்டன்; இவ்விரு 'காமெடி பீஸ்'களும் ஒரு விஷயத்தில் முட்டிக்கொள்ள நிகழும் கலாட்டாவே கதை!
'நான் சிறுவனா இருக்கும்போதே எங்கம்மா எங்களை விட்டுப் போயிட்டாங்க' என்கிற சாம் குட்டிக்காக நம்மை வருந்த வைக்கும் திரைக்கதை, அவ்வசனத்தை அவன் மறுமுறை விளக்கிச் சொல்கையில் வேறொரு நபருடன் அவன் அம்மா ஓடிப்போனதை நமக்கு புரிய வைக்கிறது!
இதற்காக சிரிக்கப் பிரியும் நம் உதடுகள் மீண்டும் இணைவதற்குள், 'அம்மா அப்படி போனது அப்பாவை பாதிச்சிருச்சு; அண்ணன் தான் என்னை வளர்த்தான்' என்று நம்மை கலங்கவும் வைக்கிறது. 'இன்ஜின் இல்லாத பேருந்து சாம்குட்டி' என்று முதல்பாதியில் கலாய்த்து, மறுபாதியில் அந்த பேருந்து சாதிப்பதை நெகிழ்வாய் சொல்லும் இத்திரைக் கதைக்கு திருஷ்டி சுற்ற வேண்டும்.
'சங்கீதம் அறிந்த ரவுடி' ஸ்ரீகுட்டன் சிரிக்க வைத்தாலும், அவனது தாய்ப் பாசமும், தாரம் மீதான காதலும் தேனாக தித்திக்கின்றன. 'ஸ்ரீகுட்டன் எழுதி மெட்டமைத்த பாடல்' என அறியாத காவலர், அதை ரசித்தபடி அவனை கைது செய்கையில், 'நல்ல பாட்டு' என்று சொல்வது நம் மனதையும் குளிர்விக்கிறது.
சிரிக்க வைத்த விஷயமே பின்னொரு காட்சியில் உணர்வுமிக்க விஷயமாக மாறுவது, வினீத் ஸ்ரீனிவாசனின் கவுரவ தோற்றம், சாம்குட்டியின் அண்ணன் பாத்திரம் உள்ளிட்ட சுவாரஸ்ய கலவையால் நமக்கு சோர்வில்லை.
கல்லுாரி மாணவனுக்கும், 'லோக்கல்' ரவுடிக்குமான மோதலுக்குள் குடும்பம், நட்பு சார்ந்த தருணங்களை நிரப்பி, மனம் நிறைக்கிறது படைப்பு.
ஆக...
'பாசில் ஜோசப் - டொவினோ தாமஸ்' கூட்டணியின் வெற்றி
