PUBLISHED ON : நவ 02, 2025

உடல் ஆரோக்கியத்தில் பல் என்பது முக்கிய பங்கு வகித்தாலும், பெரும்பாலும் நாம் கண்டுகொள்ளாமல் அசால் டாக விடும் பகுதியும் அதுதான். பல் நலம் குறித்து, 'ஓரல் மெடிசின் மற்றும் ரேடி யாலஜி' துறை நிபுணர் நந்தினி கோல் அளித்த பேட்டி:
குழந்தைகள் மத்தியில் பல் சொத்தை மற்றும் பல் சிதைவு பிரச்னைகள் அதிகம் ஏற்பட காரணம் என்ன?
இன்றைய குழந்தைகள், இனிப்பு உணவுகள், சாக்லேட், ஜூஸ், சாக்லேட்அதிகளவில் உட்கொள்கின்றனர். இதனால் பல் மேற்பரப்பில் பாக்டீரியா அதிகரித்து பல் சொத்தை, சிதைவு ஏற்படுகிறது. இரவில் பல் துலக்காமல் இருப்பதும், பால் பற்கள்தானே என, அலட்சியம் காண்பிப்பதும், முக்கிய காரணமாகவுள்ளது.
குழந்தைகள் பல் நலனில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன?
பொதுவாக வீடுகளில், பெரியவர்கள், குழந்தைகள் ஒரே பேஸ்ட்டை பயன்படுத்துகின்றனர். 14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், கட்டாயம் புளூரிடேடட் பேஸ்ட் பயன்படுத்த வேண்டும். இரண்டு வேளை பல் துலக்குவதை கட்டாயமாக்க வேண்டும். ஆறு முதல் 14 வயது வரை, பால் பற்கள் விழுந்து முளைத்துக்கொண்டு இருக்கும். முதலில் கடவாய் பல் தான் முளைக்கும்; அது தெரியாமல் பால் பற்கள் என நினைத்து அலட்சியமாக விட்டு விடுகின்றனர்.
பால் பற்களாக இருந்தாலும் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். அவை சரியாக இருந்தால் தான், புதிதாக முளைக்கும் பல் சரியாக வரும். பெற்றோர் பல் சுத்தமும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
தாடை: தாடை என்பது முன் இருக்க வேண்டியது பின்னும், பின் இருக்க வேண்டியது முன்னும் இருந்தால், சரியாக உண்ண முடியாது. அதனால், ஏற்படும் அசைவுகளில் மாற்றம் ஏற்பட்டு எலும்பு இணைப்புகளில் வலி உண்டாகும். சிறு வயதிலேயே சரிசெய்து கொண்டால், அறுவை சிகிச்சை தேவைப்படாது. வயது அதிகரிக்கும் போது, அறுவை சிகிச்சை செய்து சரிபண்ண வேண்டி இருக்கும்.
பல் வெண்மைபடுத்த பிரேஸ்: மிகவும் பாதுகாப்பானவை. இதுபோன்ற சிகிச்சைகள் அழகு சார்ந்தவை என்றாலும்,தொழில்நுட்பம் அறிந்த நிபுணர்களால் மட்டுமே மேற்கொள்ள இயலும். மருத்துவர் பரிந்துரை இல்லாமல், அழகுக்காக சிகிச்சை எடுக்கக்கூடாது.
பல் பரிசோதனையை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை செய்துகொள்ள வேண்டும்?: பொதுவாக, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
வாய் புற்றுநோய் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
வாய் புண் ஏற்படுவது இயல்பு. இரண்டு வாரத்துக்கு மேல் இருந்தால், புற்றுநோயாக மாற வாய்ப்புண்டு. 4, 5 நாட்கள் இருந்தாலே டாக்டரை சந்திக்க வேண்டும். புகையிலை, பான் போன்ற பழக்கம், பல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
வெள்ளை நிறத்தில், சிவந்த நிறத்தில் புண் ஏற்படுவது, வாய் இறுக்கு நோய் போன்றவை புற்றுநோய்க்கு முந்தைய நிலை. தொடர்ந்து பயன்படுத்தும் போது, புற்றுநோயாக மாற வாய்ப்புண்டு. புகையிலை பழக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் பல் நலத்தை எவ்வாறு பாதிக்கிறது?
''சர்க்கரை
நோய் உள்ளவர்களுக்கு, ஈறு தொற்று அதிகம் ஏற்படும். பிற உடல் பாகங்கள்
போன்று வாயில் ஏற்படும் புண் குணமாகவும் தாமதமாகும். சர்க்கரை பாதிப்பை
கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு
இயல்பாகவே, ரத்த அழுத்த பாதிப்புக்கு உட்கொள்ளும் மருந்துகளால், வாயில்
எச்சில் சுரப்பது குறையும். இதனால்பல் சொத்தை விரைவில் ஏற்படும்
வாய்ப்புண்டு. தண்ணீர் அடிக்கடி குடிக்க வேண்டும். இவர்கள், பல் பரிசோதனை
அடிக்கடி செய்து கொள்வது நல்லது,'' என்றார் டாக்டர் நந்தினி.
-- டாக்டர் நந்தினி கோல்: 73393 31222:

