
அகிலா, மதுரை: தினமும் தாகம் ஏற்படும் போது சீரகத்தண்ணீர் குடிக்கிறேன். அது சரியா அல்லது ஓமத்தண்ணீர் குடிக்கலாமா. குழந்தைகளுக்கு ஜீரணத்திற்கு எந்த மாதிரி உணவு தரலாம்?
சீரகம் தாகத்தை தணித்து உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தும். ஓமம் செரிமானத்தை அதிகப்படுத்தி உடலுக்கு வெப்பத்தை தரும். பசி அதிகமாக இருந்து அதனால் சாப்பிட முடியாமல் இருந்தால் சீரகத்தண்ணீர் அருந்தலாம். வயிற்றில் மந்தம் ஏற்பட்டு செரிக்காமல் சாப்பிட முடியாமல் இருந்தால் ஓமத் தண்ணீர் அருந்தலாம். வயிற்றுப் பிரச்னை என்றால் பெரியவர்களுக்கு சீரகத்தண்ணீரும் குழந்தைகளுக்கு ஓமத் தண்ணீரும் கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளின் செரிமான சக்திக்கு ஏற்றாற்போல் எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை தரலாம். விரல்களால் அல்லது மத்தை கொண்டு உணவை மசித்து கொடுக்க வேண்டும். பல் இல்லாததால் குழந்தைகள் உணவை மென்று சாப்பிடாமல் அப்படியே முழுங்குவதால் செரிமான கோளாறு ஏற்படும். முட்டை, மாமிச உணவுகளை வழங்கும்போது மசித்து கொடுக்க வேண்டும். கீரை கொடுக்கும் போது பருப்புடன் சேர்த்து மசித்து நெய் கலந்து கொடுக்க வேண்டும். பெருங்காயம், வெள்ளைப்பூண்டு, ஓமம், சோம்பு, சீரகம், மல்லி விதை, எள்ளு ஆகியன ஜீரணத்தை அதிகரிக்கக்கூடியன. இவற்றை சட்னி, சாம்பார், கூட்டு, அவியல் ஆகியவற்றுடன் சேர்த்து கொடுக்கலாம். இஞ்சி மணப்பாகு என்ற சித்த மருந்தை ஒரு தேக்கரண்டி கொடுத்தால் செரிமானமாகும். இரவு படுக்கும் போது தொப்புள் பகுதியில் வெற்றிலைச்சாறு அல்லது வேப்பிலைச்சாறு தடவினால் வயிற்று உப்புசம் நீங்கும்.
- டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், சித்த மருத்துவ நிபுணர், மதுரை
மு.கார்த்திகேயன் ஆண்டிபட்டி: எனக்கு 40 வயதாகிறது. ரத்தத்தில் சர்க்கரை நோய் உள்ளதாக சோதனையில் தெரிவிக்கின்றனர். சர்க்கரை அதிகரித்தால் ரத்த அழுத்த நோய்கான பாதிப்பும் ஏற்படுமா?
சர்க்கரை நோய் ஒரு நோய் இல்லை. அது ஒரு வகை குறைபாடு. சர்க்கரை அளவுக்கு ஏற்றார் போல் டாக்டர் ஆலோசனைப்படி மருந்து அவசியம் எடுக்க வேண்டும். முதல் வகை சர்க்கரை நோய் எனில் இன்சுலின் ஊசி தேவைப்படும். பொதுவாக 2ம் வகை சர்க்கரை நோய் உடல் பருமன் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு தன்மையால் ஏற்படுகிறது. இவர்களுக்கு உடலில் இன்சுலின் இருக்கும். ஆனால் அதற்கான வேலை செய்யாது. வாழ்க்கை முறை மாற்றம் மூலம் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க முடியும். உணவு கட்டுப்பாடுகளுடன் தேவையான உடற்பயிற்சி செய்தால் சர்க்கரை குறித்த அச்சம் தேவையில்லை. உடல் பருமன் கட்டுக்குள் இல்லாவிட்டால், ரத்தக்கொதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் பருமனை குறைப்பதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். ரத்தக்கொதிப்பும் வராமல் தடுக்கலாம்.
- டாக்டர் எம்.மகேஸ்வரன், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தேனி
ஜானகி, ராமநாதபுரம்: சமீப காலமாக எனது 5 வயது குழந்தைக்கு காய்ச்சல் விட்டு விட்டு வருகிறது. மழை காலத்தில் குழந்தைகளை காய்ச்சலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி?
மழைக் காலத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க பொது இடங்களுக்கு அழைத்த செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். வீட்டிற்கு திரும்பியவுடன் கைகளை கழுவிய பின் உணவுப் பொருட்களை தொட அனுமதிக்க வேண்டும். வீட்டில் காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை கொடுக்க வேண்டும்.
சிறிய காய்ச்சல் இருந்தாலும் டாக்டரை அணுக வேண்டும். தானாக மருந்து எடுப்பதால் பக்கவிளைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. டாக்டரை அணுகும் போது வயதிற்கு ஏற்ற மாத்திரை வழங்குவர். மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருக்கும்பட்சத்தில் ரத்த பரிசோதனை செய்து சாதாரண காய்ச்சலா, வைரல் காய்ச்சலா என்பதை பார்க்க வேண்டும்.
- டாக்டர் முல்லைவேந்தன், பொதுநல மருத்துவர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்
கே.அருள் அழகன், சாத்துார்: எனது தந்தைக்கு 50 வயது ஆகிறது. அடிக்கடி பாத எரிச்சலால் அவதிப்படுகிறார். கால் விரல்களில் ஊசியால் குத்துவது போன்றும் மதமதப்பாகவும் இருப்பதாக கூறுகிறார். காரணம் என்ன சிகிச்சை முறை என்ன?
சர்க்கரை நோயாளிகளுக்கு இது போன்ற அறிகுறிகள் ஏற்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவை 3 மாதத்திற்கு ஒரு முறை ரத்த பரிசோதனை செய்து மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். வருடத்திற்கு ஒரு முறையாவது உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மது, சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு கால்களிலும் மூளையின் நரம்புகளிலும் கண்களுக்கு செல்லும் நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். கால்களில் மதமதப்பும், உணர்ச்சியற்ற நிலை இருந்தால் தாமதிக்காமல் மருத்துவமனைக்குச் சென்று முழு உடல் பரிசோதனை செய்து மேல் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
டாக்டர் கவுதம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், உப்பத்துார்

