sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

டாக்டரிடம் கேளுங்கள்

/

டாக்டரிடம் கேளுங்கள்

டாக்டரிடம் கேளுங்கள்

டாக்டரிடம் கேளுங்கள்


PUBLISHED ON : டிச 07, 2025

Google News

PUBLISHED ON : டிச 07, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணன், மதுரை: ரத்தத்தில் உப்புச்சத்து கூடினால் உணவில் உப்பைக் குறைக்கலாமா?

நாம் உணவில் சேர்க்கும் உப்பு சோடியம். டாக்டர் சொன்ன உப்புகள் யூரியா, கிரியாட்டினின் போன்றவை. எல்லோரின் உடலிலும் சாதாரணமாக தினமும் உற்பத்தியாகும் கழிவுகள். இவற்றை வெளியேற்ற வேண்டியது சிறுநீரகங்கள். சிறுநீரகங்களின் செயல்திறன் குறையும் போது இந்த உப்புகள் ரத்தத்தில் கூடும். சாதாரணமாக யூரியாவின் அளவு 40க்கு கீழேயும், கிரியாட்டினின் அளவு 1.2க்குக் கீழேயும் இருக்கும். எந்த அளவிற்கு இவை அதிகமாக உள்ளதோ அந்த அளவிற்குச் சிறுநீரகங்கள் பாதிப்பு அடைந்துள்ளதாக அர்த்தம்.

உணவில் உப்பைக் குறைப்பதன் மூலம் ரத்தத்தில் அதிகரித்துள்ள யூரியாவைக் குறைத்துவிடலாம் என்று நம்புவது தவறு. மாறாக உடல் பலகீனப்படும்.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் வெளியேறும் சிறுநீரின் அளவு குறையும். ஆரம்பத்தில் ஒரு சிலருக்கு அளவுக்கு அதிகமாக சிறுநீர் வெளியேறும் போது சோடியம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய உப்புகளும் சேர்ந்து வெளியேறும். உடலில் நீர்ச்சத்து குறைந்து ரத்தஅழுத்தமும் குறையும் பட்சத்தில் உணவில் உப்பைக் கூட்ட வேண்டும். அவ்வாறில்லாமல் உடலில் நீர்ச்சத்து அதிகரித்தாலோ (கால்கள் மற்றும் முகம் வீக்கம் அடைதல்) ரத்தஅழுத்தம் கூடினாலோ அவர்களுக்குத்தான் உணவில் உப்பைக் குறைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பொட்டாசியம் என்றொரு உப்பு ரத்தத்தில் அதிகமாக சேர்ந்து விடாமலிருக்க நம் உடல், சிறுநீர் மூலமாகவும் குடல் (மலம்) மூலமாகவும் அதனை வெளியேற்றுகிறது. சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் ரத்தத்தில் பொட்டாசியம் அளவு கூடும். இந்த உப்பை அதிகமாகக் கொண்டுள்ள உணவுகளை குறைக்க வேண்டும். வாழை, ஆரஞ்சு போன்ற பழங்கள், கீரைகள், தக்காளி, மீன், மாமிசம் போன்றவை பொட்டாசியம் சத்து நிரம்பியவை. கேரட், முட்டைகோஸ், வெள்ளரி, கத்தரிக்காய், ஆப்பிள், திராட்சை, அன்னாசியில் பொட்டாசியம் சத்து குறைவாக உள்ளது.

நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் புரதத்தின் அளவு தேவையைவிடக் குறைவாகவே உள்ளது. நமது உடல்எடைக்கேற்ப ஒவ்வொரு கிராம் அளவு புரதம் கூடுதலாக சேர்க்க வேண்டும். 60 கிலோ எடையுள்ள நபர் 60 கிராம் புரதம் சார்ந்த உணவை சாப்பிட வேண்டும். மாமிசங்களில் தான் அதிகப் புரதம் உள்ளது. மேற்கத்திய நாடுகளில் மூன்று நேரமும் அசைவம் உட்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. அந்த அதிகப்படியான புரதம் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும் போது சிறுநீரகத்தையும் பாதிக்கும். ஆனால் நமது உடல் எடையை விட குறைந்தளவில் தான் புரதம் சாப்பிடுவதால் பயப்பட வேண்டாம்.

ஒருவர், வாரத்தில் இரண்டு மூன்று முறை டயாலிசிஸ் செய்கிறார் என்றால் அவருக்கு அதிகமாகப் புரதம் தேவைப்படும். ஏனென்றால் டயாலிசிஸ் செய்யும் போது யூரியா, கிரியாட்டினின் போன்ற கழிவுகளுடன் அத்தியாவசிய சத்துகளான அமினோஅமிலம் (புரதங்கள்), கால்சியம் போன்றவையும் வெளியேறும்.

எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தேவைக்கு அதிகமான அளவை சிறுநீரகங்கள் வெளியேற்றிவிடும். எந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சிறுநீரக டாக்டர் அறிவுறுத்தியுள்ளாரோ அந்தளவு மட்டுமே குடிக்க வேண்டும்.

- டாக்டர் பி.ஆர்.ஜெ. கண்ணன், இதயநோய் சிறப்பு நிபுணர், மதுரை.

எஸ்.அன்பழகன் உத்தமபாளையம்: பித்தப்பை கல் எதனால் உருவாகிறது. சித்த மருத்துவத்தில் குணப்படுத்த சிகிச்சை முறைகள் பற்றி கூறுங்கள்?

உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு செரிக்க, கல்லீரல் சுரக்கும் திரவம் பைல் எனப்படும் . இந்த பைல் பித்தப் பையில் சேகரித்து வைக்கப்பட்டு, தேவையான சமயத்தில் செரிமானத்திற்காக பயன்படுத்தப்படும். பித்த நீரில் அதிக அளவு நீரும், குறைந்த அளவு பைல் உப்பு, பிலிரூபின், கொலஸ்ட்ரால் உள்ளன. பைலில் உள்ள கொழுப்பு அல்லது பிலிரூபின், உணவு பழக்கம் அல்லது பிற காரணங்களால் கல்லாக மாறும். இதனை தவிர்க்க பொரித்த உணவுகள், அதிக கொழுப்புள்ள உணவுகளை தவிர்த்து நார்ச்சத்துள்ள உணவுகளை சேர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி , சரியான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மதுகுடிப்பதை தவிர்த்தல் பலன் தரும். பித்தப் பை கல் அடைத்து மஞ்சள் காமாலை ஏற்பட்டால், அறுவை சிகிச்சை செய்து கொள்வது நல்லது. பித்தப் பை கல்லை ஆரம்ப நிலையில் குணப்படுத்த சித்த மருத்துவத்தில், நெருஞ்சில் குடிநீர், நவ உப்பு, பனை வெல்லத்துடன் சேர்த்து இருவேளை சாப்பிடலாம். கரிசாலை கற்பம், பவள பற்பம், பிடங்கு நாறி குடிநீர் நல்ல பலன் தரும். ஆனால் சித்த மருத்துவரின் ஆலோசனையின்றி எடுத்தால் ஆபத்தாகும்.

- டாக்டர் பி.அமுதா, சித்த மருத்துவர், உத்தம பாளையம்.

கே.மணிமேகலை ராமநாதபுரம்: எனது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் பள்ளிக்கு சென்று வீட்டிற்கு வந்தவுடன் யாருடனும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். துாக்கத்தில் புலம்புகிறார். இதற்கு என்ன காரணம். சரி செய்ய வழி கூறவும்?

மாணவர் பள்ளிக்குப் பிறகு அமைதியாக இருப்பதற்கும், துாக்கத்தில் புலம்புவதற்கும் பலவிதமான மன ரீதியான, உடல் ரீதியான, சமூக ரீதியான காரணங்கள் இருக்கலாம். கல்வி அழுத்தம், மன உளைச்சல், படிப்புச்சுமையாக இருக்கலாம். பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய பின் அன்றைய தினம் நடந்த சங்கடமான உரையாடல்கள், ஆசிரியரின் கண்டிப்பு அல்லது தோல்விகள் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கலாம்.

இது துாக்கத்தில் புலம்பலுக்கு வழிவகுக்கும். சம வயதுடையோரின் நிராகரிப்பு, நண்பர்களிடையே ஏற்படும் சண்டைகள், ஏளனம், அல்லது தன்னைப் புறக்கணிப்பதாக உணருதல் போன்ற பிரச்னைகள் ஆழ்ந்த மனக்கவலையை உருவாக்கும். இதிலிருந்து மீண்டு வருவதற்கு பள்ளியை விட்டு வந்தவுடன் சிறிது நேரம் ஓய்வு அல்லது விளையாடுவதற்கான நேரம் ஒதுக்க வேண்டும்.

அதன் பிறகு படிப்பதற்கான நேரத்தை ஒதுக்குவது நல்லது. இன்று பள்ளி எப்படி இருந்தது என்று கேட்பதற்குப் பதிலாக, ''நீ அமைதியாக இருப்பது தெரிகிறது, ஏதாவது மனதை வருத்துகிறதா. நான் உதவ முடியுமா. என்று கேட்கலாம். எளிய யோகாசனங்களை கற்றுக்கொடுக்கலாம். அதன் மூலம் மனதில் புத்துணர்ச்சி பிறக்கும்.

- டாக்டர் சோ.சஞ்சய் பாண்டியன், மாவட்ட மனநல மருத்துவர், ராமநாதபுரம்.

அ.அரவிந்த்,சிவகங்கை: செயற்கை பல், நிரந்தர பல் உறுப்பை போன்று பயன் தருமா?

செயற்கை பல் உறுப்பு இழந்த பற்களை மாற்றவும், வாய்வழி ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும் பயன்படுத்தப்படும். செயற்கை பற்கள் வாயில் தடையின்றி பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் நோயாளிகள் நம்பிக்கையுடன் மெல்ல, பேச மற்றும் சிரிக்க முடியும். நமது பாரம்பரியப் பற்களைப் போல் அல்லாமல் இந்த பற்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படும்.

பல் உள்வைப்புகளால் வைக்கப்படுவதால் அவை நிலையானதாகி நோயாளி நீக்கக்கூடிய பற்களை விட எளிதாக மெல்ல, பேச, சிரிக்க முடியும். இந்த சிகிச்சையின் மூலம் பல் உள்வைப்பு எலும்பு அமைப்புடன் பிணைக்கப்படுகின்றன. பின்னர் பல் உள்வைப்புகளின் மேல் ஒரு பல் வைக்கப்படுகிறது. இதனால் பற்கள் செயலிழப்பை தவிர்க்க முடியும். இவ்வாறு வைக்கப்படும் பற்களை பல் மருத்துவர் தவிர வேறு எவராலும் அகற்ற முடியாது.

இணைப்பி மூலம் பொருத்தப்படும் பற்களை நோயாளி அகற்றி மீண்டும் பொருத்திக்கொள்ளலாம்.

- டாக்டர் விஜய்பாரத், பல் மருத்துவர், அரசு மருத்துவமனை, காளையார்கோவில்.

ராமநாதன், அருப்புக்கோட்டை: எனக்கு காய்ச்சல், வறட்டு இருமல் இருக்கு. குணப்படுத்துவது எப்படி?

காலநிலை மாற்றம் ஏற்படும் போது உடலில் மாற்றம் இருக்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது உடனே பாதிப்பு ஏற்படும்.

கொசு மூலமாகவும் பரவும். அது மட்டுமல்ல வெளியில் மினரல் வாட்டர் வாங்கி குடிக்கும் போது சுத்தமில்லாமல் இருந்தால் தொற்று ஏற்பட்டு, டெங்கு, மலேரியா, ப்ளூ காய்ச்சல் ஏற்பட்டு வறட்டு இருமல் ஏற்படும். இதனை தடுக்க குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். புரத உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பழைய உணவுகளை சாப்பிடக்கூடாது. இந்நோய் மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடியது. மாஸ்க் அணிய வேண்டும். தண்ணீர் தேங்க விடாமல் சுற்றி இருக்கும் இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிக காய்ச்சல், இருமல் இருந்தால் டாக்டரை அணுகி மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

- டாக்டர் பிருந்தா, காரியாபட்டி.






      Dinamalar
      Follow us