sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/டாக்டரை கேளுங்கள்...

டாக்டரை கேளுங்கள்...

டாக்டரை கேளுங்கள்...


PUBLISHED ON : மே 24, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 24, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மகேஸ்வரன், மதுரை: சின்னம்மை நோய் வராமல் காப்பது எப்படி?

சின்னம்மை எனும் சிக்கன் பாக்ஸ் வெயில் காலத்தில் பரவும் வைரஸ் தொற்று. பெரும்பாலும் குழந்தைகளுக்கும் பள்ளிப்பருவத்தினருக்கும் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். ஒருமுறை தொற்று கண்டவர்களுக்கு பெரும்பாலும் மீண்டும் ஏற்படுவதில்லை. இதற்குக் காரணம், முதல் தொற்றின் மூலம் பெறப்படும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியானது மீண்டும் அதே நபருக்கு சின்னம்மை வராமல் தடுக்கிறது. குறிப்பிட்ட சதவிகிதத்தினருக்கு முதல்முறை குழந்தைப் பருவத்தில் சின்னம்மை வந்திருந்தாலும் மீண்டும் வளரிளம் பருவத்தில் அல்லது வயது முதிர்ந்த நிலையிலும் வரலாம். குழந்தைகள், சிறுவர், சிறுமிகளுக்கு அச்சுறுத்தல் தராத சாதாரண நோயாகக் கடந்து செல்லும்.

எனினும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள், எடை குறைவான, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், எதிர்ப்பு சக்தி குன்றியோர், முதியோருக்கு சற்று தீவிரத்துடன் வெளிப்படலாம். இதர வைரஸ் காய்ச்சல்கள் போல முதல் இரண்டு நாட்கள் கடுமையான காய்ச்சலுடன் ஆரம்பிக்கும். பின் நெஞ்சுப்பகுதி, முதுகுப்பகுதி, முகம் எனத் தொடங்கி உடலின் அனைத்துப் பகுதியிலும் கொப்புளம் தோன்றும். சின்னம்மைக்கு எதிராகவும் தடுப்பூசி உள்ளது. ஆயினும் இது பெரியம்மை போல கொடூரமானது இல்லை என்பதாலும் மரண விகிதம் மிகவும் குறைவு என்பதாலும் அவரவர் விருப்பத்தின் பேரில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

கொப்புளம் தோன்றிய ஏழு முதல் பத்து நாட்களுக்குள் வடிந்து சருகாகி விழுந்துவிடும். கொப்புளங்கள் தோன்றுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி சருகாகுவது வரை பாதிக்கப்பட்டவர் மூலம் மற்றவர்களுக்கு பரவும். தொற்றால் பாதித்தவர் இருமும் போதும் தும்மும் போதும் நோய் எளிதாக பரவும் என்பதால் குறைந்தபட்சம் இருவார காலத்திற்கு தனிமையில் இருக்க வேண்டும். அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

முதல்முறை தொற்று ஏற்பட்டவர்களுள் 30 சதவீதம் பேருக்கு இந்த சின்னம்மை தொற்றை ஏற்படுத்தும் வைரஸ், அவர்களது உணர்ச்சிக்கான நரம்பு மண்டலத்தில் அமைதியாக பல ஆண்டுகள் துயிலில் இருக்கும். அவர் வாழ்க்கையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்ப்பு சக்தி குறையும் போது, மீண்டும் நோயை உருவாக்கும் தன்மை கொண்டது இந்த வைரஸ். எனவே சின்னம்மை வந்தால் டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

- டாக்டர் அ.ப. பரூக் அப்துல்லா, பொது மருத்துவ நிபுணர், மதுரை.

எஸ்.மலர்வண்ணன் குஜிலியம்பாறை: காயங்கள் ஏற்படும் போது கவனிக்காமல் விடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன. இதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?

விளையாட்டுக்களின் போது எதிர்பாராமல் காயம், தசை பிடிப்பு, தசை திருப்பு (சுளுக்கு), எலும்பு முறிவு, தசை கிழிந்து போதல், கணுக்கால் மூட்டு கிழிந்து போதல், முழங்கை, முழங்கால் மூட்டு விலகுதல், தலைக்காயம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் ஐஸ் ஒத்தடம், சுடுதண்ணீர் ஒத்தடம், ஆயில்மென்ட் உள்ளிட்ட பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளலாம். தொடர்ந்து வலி இருந்து கொண்டே இருந்தால் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். லேசான வலி தானே என விட்டு விட்டால் காலப்போக்கில் ரத்தக்கட்டு ஏற்படுதல், கை கால் செயல் இழப்பு போன்ற பாதிப்புகள் கூட ஏற்படலாம்.

- டாக்டர் எஸ்.லோகநாதன், அரசு தலைமை மருத்துவர், வேடசந்துார்.

வி.சங்கரேஸ்வரன், ஆண்டிபட்டி: எனக்கு அடிக்கடி பசியின்மை ஏற்படுகிறது. சாப்பிடுவதற்கான நேரம் வந்தாலும் பசி எடுப்பதில்லை. குடல் சார்ந்த பிரச்னைகள் இருக்குமா?

வயிறு மற்றும் குடலின் ஆரோக்கியம் நம் ஆயுளை அதிகரிக்கிறது. இளம் வயது மாரடைப்பு, வாதம் வருவதற்கும் ஆயுள் குறைவதற்கும் உணவு முறை தான் முக்கிய காரணம். பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது. மதியம் சாப்பிட்ட பின் துாங்கக்கூடாது. இரவு 9:00 மணிக்கு முன் துாங்க வேண்டும். சாப்பிடுவதற்கும் துாங்குவதற்கும் இரண்டு மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். டீ, காபி, பால் அருந்தக்கூடாது. காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் சுடுநீர் அருந்த வேண்டும். நேரம் பார்த்து சாப்பிடும் பழக்கத்தை கைவிட வேண்டும். உணவுகளை முறைப்படுத்தி உண்பதால் உடல் சோர்வு, உடம்பு வலி, பசியின்மை, துாக்கமின்மை, வயிறு தொடர்பான பிரச்னைகளை தவிர்க்கலாம்.

- டாக்டர் எஸ்.சரவணன், உதவி பேராசிரியர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தேனி.

ராஜேஸ்வரி, ராமநாதபுரம்: எனக்கு 40 வயதாகிறது. கண்களை சுற்றிலும் கருவளையம் காணப்படுகிறது. இதற்கு தீர்வு கிடைக்குமா?



துாக்கமின்மை, உடலில் நீர்ச்சத்து குறைபாட்டால் கண்களை சுற்றிலும் கருமையாக தோற்றமளிக்கும். துாக்கமின்மை தோலை வெளிறச் செய்து கண்களுக்கு கீழே உள்ள மெல்லிய ரத்த நாளங்களை வெளிப்படையாக காட்டும். சிலருக்கு வயது ஆக ஆக கொழுப்பு குறைந்து ரத்த நாளங்கள் நன்றாகத் தெரியும். உடலில் போதிய அளவு நீர் இல்லாமல் வறண்டு போனாலும் கண்கள் குழி விழுந்து கருவளையம் தோன்றும்.

கருவளையம் உள்ளவர்கள் கற்றாழை ஜெல் மூலம் கண்களை சுற்றி மசாஜ் செய்ய வேண்டும். அதிமதுரம் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து கருவளையத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். இதன் மூலம் கருவளையம் தற்காலிகமாக மறைந்து விடும். தொடர்ந்து கருவளையம் வராமல் இருக்க நீர்ச்சத்து நிறைந்த காய்கறி, பழவகைகளை சாப்பிட வேண்டும். தினமும் எவ்வித இடையூறும் இல்லாமல் 8 மணி நேரம் துாங்க வேண்டும். வாரத்திற்கு ஒரு நாள் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

- டாக்டர் மோகன கிருஷ்ணன், சித்த மருத்துவர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தேவிபட்டினம்.

க.அன்புசெல்வன், சிவகங்கை: எனது மனைவி 3 மாத கர்ப்பிணி. அவரை எவ்வாறு கவனிப்பது?

கர்ப்பம் அடைந்ததில் இருந்து முறையான மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். டாக்டர் குறிப்பிடும் தேதிகளில் தவறாமல் சென்று உடல்நலனைப் பரிசோதிக்க வேண்டும். குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்க அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மற்றும் தாய்க்கு தேவையான தடுப்பூசிகளை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும்.

டாக்டர் பரிந்துரைக்கும் போலிக் அமிலம், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் மாத்திரைகளைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். கீரைகள், காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், முட்டை, பால் போன்ற உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வழக்கமாகச் சாப்பிடும் அளவை விட கொஞ்சம் கூடுதலாக, ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும். தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவு நேரத்தில் 8 மணி நேரத் துாக்கமும், பகலில் 1 முதல் 2 மணி நேர ஓய்வும் அவசியம். டாக்டரின் ஆலோசனைப்படி தினமும் 30 நிமிடம் மிதமான நடைப்பயிற்சி செய்யலாம். அதிக பளு துாக்குவதை தவிர்க்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் தாய்க்கு மனநிலை மாற்றங்கள் ஏற்படலாம். எனவே குடும்பத்தினர் அவரை புரிந்து கொண்டு அன்பாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டும்.

- டாக்டர் மு.தென்றல், மகப்பேறு மருத்துவர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us