PUBLISHED ON : மே 24, 2026

சுவாச பாதைகளில் ஏற்படும் நாள்பட்ட அழற்சியால், வீக்கம் ஏற்பட்டு, அதிக உணர்திறன் கொண்டதாக மாறி குறுகலாகிவிடுவதால், நுரையீரலுக்குள் காற்று சென்று வருவது சிரமமாகிறது. இது தான் ஆஸ்துமா. இது எல்லா வயதினரையும் பாதிக்கலாம்.
ஆஸ்துமா பிரச்னை எப்போதாவது வரலாம்; சிலருக்கு, நீண்ட காலம் தொடர்ந்து இருக்கலாம். அதிகரித்து வரும் காற்று மாசு, வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக, ஆஸ்துமா பாதிப்பு அதிகரித்து உள்ளது.
வீட்டில் உள்ள கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள், புகை, சிகரெட் பிடிப்பது, இ-சிகரெட்டுகள், அடர்த்தியான வாசனை திரவியங்கள், ரசாயன புகைகள், மகரந்தத்துாள், பருவநிலை ஒவ்வாமைகள், விலங்குகளின் முடி, செதில்கள், குளிர்ந்த வானிலை, எதிர்பாராத தட்பவெப்ப மாற்றங்கள், வைரஸ் நோய்த்தொற்றுகள்.
அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி செய்வது, மன அழுத்தம், பதற்றம், வேலை செய்யும் இடத்தில் உள்ள துாசி, ரசாயனங்கள், சிலருக்கு ஆஸ்பிரின், உயர் ரத்த அழுத்தம், சீரற்ற இதயத் துடிப்பு போன்ற இதய கோளாறுகளுக்கு பயன்படும் பீட்டா பிளாக்கர்கள் போன்ற சில மருந்துகளால் ஆஸ்துமா ஏற்படலாம்.
அறிகுறிகள்
தொடர் இருமல், மூச்சு விடும்போது இரைப்பு சத்தம், மூச்சுத் திணறல், நெஞ்சு இறுக்கம், மூச்சு விடுவதில் சிரமம், இரவு மற்றும் அதிகாலை நேர இருமல் போன்றவை.
சிலருக்கு, உடற்பயிற்சி செய்தால், குளிர்ச்சியான சூழ்நிலையில் அறிகுறிகள் மோசமடையலாம். சில நோயாளிகளுக்கு மூச்சு இரைப்பு இல்லாமல், தொடர் இருமல் மட்டுமே இருக்கலாம்.
பரிசோதனைகள்
ஆஸ்துமாவை உறுதி செய்யும் பரிசோதனைகளில், 'ஸ்பைரோமெட்ரி'யும் ஒன்று.
வாய் வழியாக வேகமாக ஊதச் செய்து செய்யும் பரிசோதனை, சுவாசப் பாதை எவ்வளவு குறுகலாக உள்ளது என்பதை அறிய உதவுகிறது.
மூச்சுக்குழாயை விரிவுபடுத்தும் மருந்தை, 'இன்ஹேலர்' மூலம் கொடுத்து, நுரையீரல் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றத்தை அறிந்து, ஆஸ்துமாவை உறுதி செய்யலாம் .
சிகிச்சை
சுவாசப் பாதையில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், ஆஸ்துமாவை அலட்சியம் செய்யக்கூடாது.
ஆஸ்துமா சிகிச்சையில் முக்கியமானது இன்ஹேலர்.
மருத்துவர் பரிந்துரைத்த. இன்ஹேலரை ப யன் படுத்த வேண்டும்.
இன்ஹேலர் வாயிலாக, குறைந்த அளவு மருந்தை, நேரடியாக நுரையீரலுக்குள் செலுத்த முடியும். எனவே, ஸ்டிராய்டு மாத்திரைகளை விட இவை பாதுகாப் பானவை.
பாதிப்பின் போது அறிகுறிகளைக் குறைப்பது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் வரும் பாதிப்புகளைத் தடுத்து, நுரையீரல் செயல்பாட்டைப் பாதுகாத்து, இயல்பான, வாழ்க்கையை வாழ வழி செய்கிறது ஆஸ்துமா சிகிச்சை.
ஆரம்பத்திலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை செய்தால், ஆஸ்துமாவை எளிதில் கட்டுக்குள் வைக்கலாம்.
டாக்டர் பி.மாளவிகா,நுரையீரல் சிறப்பு மருத்துவர், ஐஸ்வர்யா மருத்துவமனை.
