அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வுக்கு 2 ராஜ்யசபா "சீட்' கிடைக்குமா?

Added : மே 09, 2010 | கருத்துகள் (1)
Advertisement
அ.தி.மு.க.,வுக்கு 2 ராஜ்யசபா

தமிழகத்தில் இருந்து காலியாகும் ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு, அடுத்த மாதம் நடக்க உள்ள தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு இரண்டு இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எப்படி இருந்தாலும், காலியாகும் பதவிகளில் ஒன்று கூட தி.மு.க.,வினர் இல்லை என்பதால், இந்த தேர்தல் மூலம் அக்கட்சி பலனடைவது உறுதி.


ராஜ்யசபாவில் தமிழகத்துக்கு 18 உறுப்பினர் இடங்கள் உள்ளன. தற்போதைய நிலையில், அ.தி.மு.க., ஏழு, தி.மு.க., நான்கு, காங்கிரஸ் நான்கு, பா.ம.க., - மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூனிஸ்ட் தலா ஒன்று என்ற அளவில் உள்ளனர். ஜூன் 29ம் தேதியுடன், ஆறு எம்.பி.,க்களின் பதவிக்காலம் முடிகிறது. இதற்கான தேர்தல், அடுத்த மாதம் 17ம் தேதி நடக்கிறது. காலியாகும் எம்.பி., பதவிகளில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தினகரன், மலைச்சாமி, அன்பழகன், கோவிந்தராஜர் ஆகிய நான்கு பேர், பா.ம.க., தரப்பில் அன்புமணி மற்றும் காங்கிரசில் சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் அடங்குவர். இதன் காரணமாக, ராஜ்யசபாவில் அ.தி.மு.க.,வின் பலம் மூன்றாக குறைகிறது. காங்கிரசின் பலமும் மூன்றாக குறைகிறது. பா.ம.க.,வுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி உள்ளது. தற்போதைய நிலையில், சட்டசபையில் 34 உறுப்பினர்களின் ஓட்டுக்களை பெறுபவர் ராஜ்யசபா எம்.பி., ஆகலாம். இதன்படி, தி.மு.க.,வுக்கு நூறு எம்.எல்.ஏ.,க்களும், அக்கட்சிக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இருவர், எக்கட்சியையும் சாராத எஸ்.வி.சேகர், சுயேச்சை ஒருவர் என உள்ளதால், தி.மு.க.,வுக்கு மூன்று எம்.பி.,க்கள் கிடைப்பது உறுதியாகிவிட்டது. அதேபோல, காங்கிரஸ் கட்சிக்கு 36 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால் அக்கட்சியில் இருந்தும் ஒருவர் தேர்வு செய்யப்படுவது உறுதி.


மீதமுள்ளவற்றில், பா.ம.க.,வுக்கு 18 எம்.எல்.ஏ.,க்களே உள்ளதால், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு இருந்தால் ஒரு எம்.பி., பதவியை பிடிக்க முடியும். அல்லது தி.மு.க., தனது எண்ணிக்கையில் இருந்து ஒன்றை விட்டுக்கொடுக்கும்பட்சத்தில் எம்.பி., பதவியை பா.ம.க., பெற முடியும். மற்றபடி, வாய்ப்பில்லை. அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, இரண்டு எம்.பி.,க்களைப் பெற 68 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை. தற்போதைய நிலையில் அக்கட்சியில் 57 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தாலும், அதில் தி.மு.க., ஆதரவாக உள்ள இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப் போடாமல் ஒதுங்கி இருக்கவே வாய்ப்பு அதிகம். மீதமுள்ள 55 எம்.எல்.ஏ.,க்கள், ம.தி.மு.க.,வினர் மூன்று பேர், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்பது பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறு பேர் என சேர்ந்து ஆதரவளித்தால், 73 உறுப்பினர்களின் ஆதரவுடன், இரண்டு எம்.பி.,க்களை பெற முடியும். ஆனால், அ.தி.மு.க.,வுடனான இடதுசாரிகளின் கூட்டணி, தாமரை இலைத் தண்ணீர் போலவே உள்ளது.


இடைத்தேர்தல்களின்போது, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை ஜெயலலிதா கோராதபோதும், அவர்களாகவே முன்வந்து ஆதரவு அளித்தனர். அதற்கு அ.தி.மு.க., நன்றி தெரிவிக்கவில்லை. இதுதவிர, இரு கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் தலா ஒரு எம்.பி., பதவியை தி.மு.க., கடந்த ஆண்டுகளில் விட்டுக்கொடுத்துள்ளது. தி.மு.க.,வால் எம்.பி.,யான இரு கம்யூனிஸ்ட் கட்சியினரும் தற்போது ராஜ்யசபாவில் உள்ளனர். இந்த நிலையில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு கொடுப்பது கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு நெருடலை ஏற்படுத்தும். ஆனாலும், தற்போதுள்ள சூழ்நிலையில், பா.ம.க.,வுக்கு ஆதரவளிப்பதை விட அ.தி.மு.க.,வுக்கு ஆதரவளிக்கவே கம்யூனிஸ்ட்கள் விரும்புவர். எனவே, அ.தி.மு.க.,வுக்கு இரண்டு எம்.பி.,க்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், தி.மு.க.,வுக்கு கிடைக்கும் மூன்று எம்.பி., பதவிகளில் ஒன்றை பெற பா.ம.க., மட்டுமன்றி காங்கிரஸ் கட்சியும் முயற்சித்து வருகிறது. கடந்த முறையே காங்கிரஸ் கட்சிக்காக ஒரு எம்.பி., பதவியை தி.மு.க., விட்டுக்கொடுத்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களுக்கு எம்.பி., பதவியை விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால், ராஜ்யசபாவில் தி.மு.க.,வின் பலம் தற்போது ஏழாக இருந்திருக்கும்.


தற்போது நடக்கவுள்ள தேர்தலையும் சேர்த்து, 10 ஆக எம்.பி.,க்கள் எண்ணிக்கை உயர்ந்திருக்கும். எனவே இம்முறை தி.மு.க., விட்டுக்கொடுக்கக் கூடாது என அக்கட்சியினர் விரும்புகின்றனர். எப்படி இருந்தாலும், இந்தத் தேர்தலை பொறுத்தவரை தி.மு.க., ஒரு எம்.பி., பதவியையும் இழக்கவில்லை. மாறாக, அதன் எண்ணிக்கை ராஜ்யசபாவில் உயரவே வாய்ப்புள்ளது.


யார் யாருக்கு வாய்ப்பு? வைகோவை ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைப்பது பற்றி அ.தி.மு.க., தலைமை சிந்தித்து வருகிறது. அதேசமயம், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எம்.பி., பதவியை விரும்புகின்றன. தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் வரதராஜன் மற்றும் தற்போதைய மாநிலச் செயலர் ராமகிருஷ்ணனுக்காக முயற்சிகள் நடக்கின்றன. தி.மு.க.,வில் தேவர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடிகர் வாகை சந்திரசேகர், முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம், தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த மறைந்த சபாநாயகர் பழனிவேல்ராஜனின் மகன் தியாகராஜன் ஆகியோரின் பெயர் அடிபடுகிறது. சிறுபான்மையினர் சமுதாயத்தில் கவிஞர் சல்மா, அப்துல் காதருக்கும், வன்னியர் சமுதாயத்தில் செல்வகணபதி, தலித் சமுதாயத்தில் முன்னாள் அமைச்சர் தங்கவேலுவின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. காங்கிரஸ் கட்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், சுதர்சன நாச்சியப்பன், திருநாவுக்கரசர் ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அ.தி.மு.க., தரப்பில் தினகரன், மலைச்சாமி, டாக்டர் வெங்கடேஷ், நயினார் நாகேந்திரன், செல்லூர் ராஜு ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.


                                                                                       - நமது சிறப்பு நிருபர் -


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X