Advertisement

இந்த உலகின் முதல் மொழி, 'மைம்' தான்!

ஒரு சில காட்சிகளில் வந்தாலும், மக்களிடம் வரவேற்பை பெறும் பாத்திரங்களில் நடிக்கும், 'மைம்' கோபி உடன் பேசியதிலிருந்து:

உங்களை பற்றி சொல்லுங்களேன்?

சென்னை தான் எனக்கு சொந்த ஊர். பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாம் இங்கு தான். பள்ளி படிப்பு முடித்து, பச்சையப்பன் கல்லுாரியில், பி.ஏ., வரலாறு, ஒய்.எம்.சி.ஏ.,யில் விளையாட்டு துறை படிச்சு, அப்படியே, எம்.பி.ஏ., படித்தேன்.


உங்களது, 'மைம்' வகுப்பு பற்றி சொல்லுங்கள்?

இவ்வுலகின் முதல் மொழி என்றால், அது, 'மைம்' மொழி தான். சைகை மற்றும் செய்கை மூலம் மட்டுமே பரிமாறப்படும் மவுன மொழி அல்லது வித்தியாசமான கலை என்று, இதை சொல்லலாம். மைம் மூலமாக நிறைய நல்ல விஷயங்கள் செய்யலாம் என, நினைத்தேன்.


நான் கற்ற கலையை, மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க நினைத்தேன். அதனால், சிறிய ஸ்டூடியோ துவங்கினேன். 24 ஆண்டுகளுக்கு முன் துவங்கி, இதில் தற்போது நிறைய பேரை வளர்த்து விட்டிருக்கேன்; இன்னமும் வளர்ந்துட்டு இருக்காங்க. வளர்ந்தவங்க, திரைத் துறையில் பிரகாசமாக இருக்காங்க.


சமூகப் பணி ஆர்வம் குறித்து...

ஒவ்வொரு ஆண்டும், சின்ன குழந்தைகளை தமிழகத்திற்குள் ஏதாவது ஒரு நகருக்கு விமானத்தில் அழைத்துச் செல்கிறேன். படிப்பை தொடர முடியாத அல்லது படிக்க முடியாத குழந்தைகளுக்கு, என்னால் முடிந்த அளவுக்கு பள்ளி கட்டணம் கட்டுகிறேன். வயதான பெரியவர்களுக்கு சின்ன சின்ன உதவிகள் செய்கிறேன். இது, எனக்கு ரொம்ப மகிழ்ச்சியை தரும். இது எல்லாமே என்னுடைய தனிப்பட்ட வருமானம் தான். யாரிடமும் உதவி கேட்டு, மற்றவர்களுக்கு உதவி செய்தது இல்லை.

பிற மொழி படங்களில் நடிக்கிறீர்களா?

மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளேன். தெலுங்கில் மூன்று படங்களில் நடிக்கிறேன். வெப்சீரிஸில், நான் நடித்த, 'பேமிலி மேன்' தொடர், 64 மொழிகளில் வெளியாக உள்ளது. ஒரு ஹிந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன்.

கபாலி, மாரி, உறியடி என, பல படங்களில் வித்தியாசமான பாத்திரங்களில் நடித்துள்ளீர்கள். இந்த அனுபவம் எப்படி இருக்கு?

நடிகர்களுக்கு மட்டும் தான் இப்படி ஒரு வாய்ப்பு அமையும் என, நினைக்கிறேன். ஒரு நாள், எம்.எல்.ஏ., மற்றொரு நாள் ரவுடி; ஒரு நாள் போலீசாக இருப்பேன். இந்த மாதிரி பலதரப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு, சினிமாவுல மட்டும் தான் கிடைக்கும். நம் நடிப்பில் ஒரு உண்மை இருக்க வேண்டும்.என்னால் கண்டிப்பாக டாக்டருக்கு படிக்க முடியாது; சுட்டு போட்டாலும் படிப்பு வராது. ஆனால், நடிப்பில் டாக்டராக முடியும்.எனக்கு சினிமா தெரியும், மைம் தெரியும். இந்த இரண்டையும் தாண்டி, வேற எதுவுமே தெரியாது.

காவல் துறை உங்கள் நண்பன் என்ற படத்தில் போலீசாக நடிக்கிறீர்கள்... அதை பற்றி?

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படம். பொதுவாக, போலீஸ் என்றாலே ஒரு பயம் இருக்க வேண்டும். இப்போது இருக்கும் சூழ்நிலையில், போலீசை பார்த்தால் யாருக்கும் பயம் வரவில்லை. சமூக வலைதளங்களில், தொடர்ந்து போலீசாரை மோசமாக சித்தரிச்சு கிட்டே இருக்காங்க. இப்படத்தில் சில உண்மைகளை பதிவு செய்துள்ளோம். இந்த படம் வந்த பின், நிறைய விமர்சனங்கள் வரும்.


சினிமாவில் உங்கள் எதிர்பார்ப்பு என்ன?

படத்தில், ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் அதில் உண்மையாக இருக்க வேண்டும். அதில், நான் தெரிய வேண்டும் என நினைப்பேன். மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்தேன். அதில், 'கதவைத் திற கோபாலு' என்ற வசனத்தை மட்டும் தான் பேசணும். அந்த ஒரு காட்சிக்காக அந்த படத்தில் நடித்தேன். ஒரு படத்தில், படம் முழுக்க நான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு காட்சியில் வந்தாலும் அதில் நான் தெரிய வேண்டும்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Ray - Chennai,இந்தியா

    SIMPLICITY IS THE GREATEST OF BEAUTIES. - அடக்கம் அமரருள் உய்க்கும் எத்தனை அடக்கம் இவருக்கு

  • Ray - Chennai,இந்தியா

    ONLY A LIFE LIVED FOR OTHERS IS A LIFE WORTHWHILE. - ALBERT EINSTEIN

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement