Advertisement

மழையால் அருவிகளில் வெள்ளம்: நெல்லை அணைகளில் வறட்சி

திருநெல்வேலி:
நெல்லையில் அணைகள் வறண்டு குடிநீருக்கு சிரமப்படும் நிலையில், தற்போது பெய்துவரும் மழையினால் அருவிகளில் தண்ணீர் கொட்டத் துவங்கியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால், 143 அடி உயரமுள்ள பாபநாசம் அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 16 அடி மட்டுமே இருந்தது.
அணையில் இருந்து வெறும், 53 கன அடி மட்டுமே தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், மழை பெய்யாததால் அணைக்கு, 5 கன அடி நீர்வரத்து உள்ளது.
சேர்வலாறு அணையில், 48 அடி நீர் மட்டுமே உள்ளது.மொத்த உயரம், 156 அடி. அணைக்கு நீர் வரத்து இல்லை. மாவட்டத்திலுள்ள மற்ற அணைகளிலும் தண்ணீர் வெகுவாக குறைந்துவிட்டது.
தற்போது நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களின் நீர்ஆதாரமாக விளங்குவது மணிமுத்தாறு அணை மட்டுமே. மணிமுத்தாறு அணையில் தற்போது, 76 அடி நீரே உள்ளது. மொத்த உயரம், 118 அடி. வினாடிக்கு, 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
வெப்ப சலனம்:
இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது.
நேற்று காலை, 8:00 மணி வரையிலான நிலவரப்படி, மழையளவு: தென்காசி, செங்கோட்டையில் - 4.1 செ.மீ.,சிவகிரி, 4 செ.மீ., ஆய்க்குடி 3.9 செ.மீ., மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது.
மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. சுற்றுலா பயணியர் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஏப்., 25ம் தேதிக்கு பிறகு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கெலவரப்பள்ளி அணை நீர் வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 17 மாலை முதல், ஒரு சில நாட்கள் தவிர மற்ற நாட்களில் மிதமான அளவு மழை பெய்துள்ளது. கோடை மழை பெய்துள்ளதால், வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்துள்ளது.

கடந்த சில நாட்களில் மட்டும், இரண்டாவது முறையாக, 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. கெலவரப்பள்ளி அணை நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் கடந்த, 21 காலை முதல், 600 கன அடிக்கு மேல் தண்ணீர் வரத்து இருந்தது.


அணை பகுதியில், மழை பதிவானதால், நேற்று காலை அணைக்கு தண்ணீர் வரத்து, 631 கன அடியானது. அணை மொத்த கொள்ளளவான, 44.28 அடியில், 42.15 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement