Advertisement

குடிநீர் மினி டேங்கர் லாரிகளால் விபத்து; லைசென்ஸ் இன்றி ஓட்டும் சிறுவர்களுக்கு எச்சரிக்கை!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கோடையை பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மூலம் லாபம் பார்க்க, மினி டேங்கர் லாரிகளை லைசென்ஸ் பெறாத சிறுவர்களை வைத்து ஓட்ட செய்வதால் அடிக்கடி விபத்து நேரிடுகிறது.

சிவகங்கையில் கடந்த 10 ஆண்டாக பருவ மழை பெய்யவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் 350 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. இதனால் அரசு இம்மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்துள்ளது. மாவட்டத்தில் கண்மாய், குளங்களும் வறண்டதால், குடிநீர் ஆதாரமின்றி கிராமத்தினர் தவிக்கின்றனர். இதனால் ஒரு குடம் தண்ணீரை 25 ரூபாய் கொடுத்து பெறுகின்றனர். கூடுதல் விலை கொடுத்தாலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவில்லை.

இந்த தட்டுப்பாட்டை பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் மாவட்ட அளவில் 500 க்கும் மேற்பட்ட 'மினி டேங்கர்' லாரிகள் மூலம் குடிநீர் விற்பனை செய்து, அபரிமிதமான லாபம் பார்க்கின்றனர். குடிநீர் தேவை அதிகரித்துள்ளதால், மாவட்ட அளவில் மினி டேங்கர் குடிநீர் லாரிகளை ஓட்ட, லைசென்ஸ் இன்றி சிறுவர்களை நியமித்துள்ளனர். அவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த எந்தவிழிப்புணர்வு இல்லை. குடிநீர் விற்பனை நிறுவனத்தினரும்,விதிப்படி டிரைவர்களை நியமிக்காமல், குறைந்த சம்பளத்திற்காக சிறுவர்களை டிரைவர்களாக நியமிக்கின்றனர்.

இவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளே தெரியவில்லை. இதனால் பைபாஸ் ரோடு, முக்கிய ரோடுகளில் விதிகளை மீறி மினி டேங்கர் லாரிகளை அசுர வேகத்தில் ஓட்டி வருகின்றனர். இதன் மூலம் எதிரே வரும் வாகனங்கள் விபத்திற்கு உள்ளாகின்றன. அசுர வேகத்தில் ஓட்டும் இதுபோன்ற லாரி டிரைவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். போலீஸ் நிர்வாகமும் இது போன்று லைசென்ஸ் இன்றி வாகனம் ஓட்டும் சிறுவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் விபத்துக்கள் அதிகரித்து உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே செல்கின்றன.

சிவகங்கை எஸ்.பி., ஜெயச்சந்திரன், போக்குவரத்து போலீசாருக்கு கடும் எச்சரிக்கை விடுத்து, லைசென்ஸ் இன்றி மினி டேங்கர் லாரிகள் ஓட்டும் சிறுவர்கள் மீதும், குடிநீர் சுத்திகரிப்பு நிறுவன உரிமையாளர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாகனம் பறிமுதல் செய்யப்படும்:
சிவகங்கை, வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாண்குமார் கூறியதாவது, லைசென்ஸ் இன்றி வாகனம் ஓட்ட செய்வதே சட்டப்படி குற்றம். அதிலும் சிறுவர்களை வைத்து 'மினி டேங்கர்' லாரிகளை ஓட்ட வைப்பது தவறு. இது போன்று மினி டேங்கர் லாரிகளை பிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். சுத்திகரிப்பு நிலைய உரிமையாளர்களும் சிறுவர்களை டிரைவர்களாக நியமித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுப்போது, மினி டேங்கர் லாரிகளும் பறிமுதல் செய்யப்படும், என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement