Advertisement

தொழில் வழிகாட்டி நிறுவனத்தில் முதியோர் ஆதிக்கம்!

''ஆளாளுக்கு நெருக்கடி குடுக்கிறதால, கலெக்டர் நியமனம் தள்ளிப் போவுது வே...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார், பெரியசாமி அண்ணாச்சி.

''மதுரை விவகாரமாங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''ஆமாம்... அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்துல, ஆளுங்கட்சியினர் சிபாரிசுகளை ஏத்துக்காத, கலெக்டர் நாகராஜனை, அதிரடியா மாத்திட்டாங்கல்லா... இப்ப, கலால் துறை இணை கமிஷனர், சாந்தகுமார் தான், டி.ஆர்.ஓ., கலெக்டர் பொறுப்புகளை பார்த்துட்டு இருக்காரு வே...

''மதுரை மாவட்ட அமைச்சர்களான, ராஜு, உதயகுமார், மாவட்டச் செயலர், ராஜன் செல்லப்பான்னு மூணு பேரும், தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை, கலெக்டராக நியமிக்கணும்னு, முதல்வரிடம் நெருக்கடி குடுத்துட்டு இருக்காவ...

''யார் பேச்சை கேட்கிறதுன்னு தெரியாத குழப்பத்துல தான், கலெக்டர் நியமனம் தள்ளிப் போயிட்டே இருக்காம்...'' என்றார் அண்ணாச்சி.

''கமிஷனுக்காக, குடிநீர் திட்டப் பணியை இழுத்தடிக்கிறதா சொல்றாங்க பா...'' என, அடுத்த விஷயத்திற்கு நகர்ந்தார், அன்வர்பாய்.

''எந்த ஊர்ல ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''சேலம் மாவட்டம், ஆத்துார்ல, 42 லட்சம் ரூபாய்ல குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ள, மூணு மாசத்துக்கு முன்னாடியே, 'டெண்டர்' விட்டாங்க... டெண்டர் எடுத்தவர், ஆளுங்கட்சி ஒன்றியச் செயலர், அதிகாரிகளுக்கு, 20 சதவீதம் கமிஷனும் குடுத்துட்டாருங்க...

''ஆனா, ஆத்துார், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சின்னதம்பிக்கு, போக வேண்டியது போகாததால, 'ஒர்க் ஆர்டர்' குடுக்காம இழுத்தடிக்கிறதா புகார் சொல்றாங்க... எம்.எல்.ஏ.,வோ, 'லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் தான், தாமதத்துக்கு காரணம்... நான் கமிஷன் எதுவும் கேட்கலை'ன்னு சொல்றாரு பா...'' என்றார் அன்வர்பாய்.

''சென்னை, எழும்பூர்ல இருக்கிற, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி ஏற்றுமதி நிறுவனம், முதியோர் இல்லமா மாறிட்டு இருக்குன்னு, ஏற்கனவே பேசியிருக்கோம்...'' என, கடைசி விஷயத்திற்கு முன்னுரை தந்த அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''இந்த நிறுவனத்துல, சமீபத்துல, சிலரை வேலைக்கு எடுத்திருக்காங்க... எல்லாருமே, அரசு பணியில இருந்து ஓய்வு பெற்றவங்க... படிச்சிட்டு, வேலையில்லாம நிறைய இளைஞர்கள் இருக்காங்க...

''அவங்களை விட்டுட்டு, ஓய்வூதியம் வாங்குறவங்களுக்கு வேலை போட்டு குடுத்து, கை நிறைய சம்பளமும் குடுக்கிறாங்க...

''இதுல சில முதியோருக்கு, 'செக்'ல கையெழுத்து போடுற பவரும் குடுத்திருக்காங்களாம்... 'இதை எல்லாம், நிறுவனத்துக்கு புதுசா வந்திருக்கிற துணை தலைவர் கவனிச்சா நல்லாயிருக்கும்'னு, நேர்மையா நடக்கிறவங்க சொல்றாங்க...'' என்றார் அந்தோணிசாமி.

நாயர் கொண்டு வந்த மெது வடைகளை ருசித்து, டீயை குடித்ததும், பெரியவர்கள் கிளம்ப, நாயரும் வியாபாரத்தை கவனிக்க எழுந்தார்.

பதிவு அதிகாரி பாக்கெட்டில் தினமும் ரூ.25 ஆயிரம்!
ஏலக்காய் டீயை ருசித்தபடியே, ''கோஷ்டி அரசியல்ல சிக்கி, ஆறே மாசத்துல காலியாகிட்டாங்க...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.

''யாரைச் சொல்லுதீரு...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''மதுரை மாவட்ட, முதன்மை கல்வி அலுவலரா, சுபாஷிணின்னு ஒரு பெண் அதிகாரியை, ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் நியமிச்சாங்க... இந்த மாவட்ட கல்வி அலுவலகத்துல, பல கோஷ்டிகள் உண்டுங்க...

''எந்த கல்வி அதிகாரி வந்தாலும், அவரை சுத்தி, ஒரு கோஷ்டி வட்டம் போட்டுரும்... அந்த வட்டத்தை மீறி, அதிகாரியும் வெளியில வர முடியாது... வேற யாரும், உள்ளேயும் போக முடியாதுங்க...

''அந்த வகையில, 'மதுரைக்கு வந்த உயர் அதிகாரிகளை, உரிய முறையில வரவேற்கலை... 'ரிடையர்' தலைமை ஆசிரியர்களுக்கு, என்.ஓ.சி., சான்றிதழ் வழங்குனதுல நடந்த முறைகேட்டை கண்டுக்கலை'ன்னு பல விஷயங்கள்ல, சுபாஷிணி கோட்டை விட்டுட்டதா, எதிர் கோஷ்டி, சென்னை வரைக்கும் பத்த வச்சிடுச்சாம்...

''அதனால தான், அவங்களை, விருதுநகருக்கு மாத்திட்டு, அங்க இருந்த சுவாமிநாதனை, மதுரைக்கு மாத்தியிருக்காங்க... 'இவராவது, கோஷ்டி அரசியல்ல தாக்கு பிடிப்பாரா...'ன்னு, கல்வி அலுவலக வட்டாரங்கள்ல பேசிக்கிறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''திருவள்ளூர்ல, 24 மணி நேரமும், 'சரக்கு' கிடைக்குது பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

''திருவள்ளூர் ரயில் நிலையத்தை சுத்தி, அஞ்சு டாஸ்மாக் கடைகள் இருக்கு... இதுல, கற்குழாய் தெரு, தலக்காஞ்சேரி கடைகள்ல, 24 மணி நேரமும் சரக்கு விற்பனை நடக்குது பா...

''இதுல ஒரு கடைக்கு, 'பார்' அனுமதியே இல்லையாம்... சட்டம் - ஒழுங்கு, கலால் பிரிவு போலீசாரை சரிக்கட்டி, சரக்கு விற்குறாங்க பா...

''தப்பித் தவறி யாராவது, 'ரெய்டு'க்கு போயிட்டா, பார் உரிமையாளர்கள் தரப்பு, செல்வாக்கை பயன்படுத்தி, அவங்களை, 'டிரான்ஸ்பர்' பண்ணிடுது பா...'' என்றார் அன்வர்பாய்.

அவ்வழியாக சென்ற இருவரை நிறுத்திய குப்பண்ணா, ''தினேஷ், வெங்கடேஷ்... கடையில வியாபாரம் எல்லாம் நல்லா போறதா ஓய்...'' என, விசாரிக்க, 'ஏதோ ஓடுது' என்றபடி சென்றனர்.

''ராத்திரி, 8:00 மணி வரைக்கும் தீயா வேலை செய்யறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''பாராட்ட வேண்டிய விஷயம் தானே பா...'' என்றார் அன்வர்பாய்.

''முழுசா கேட்டுட்டு பாராட்டும்... திருவள்ளூர் மாவட்டத்துல, பிரபல முருகன் கோவில் இருக்கற ஊரின் சார் - பதிவாளர் அலுவலகத்துல, நகர ஊரமைப்பு துறையின் அனுமதி பெறாத வீட்டு மனைகளை, தாராளமா பத்திரப்பதிவு செய்யறா ஓய்...

''இதுக்கு அங்க இருக்கற அதிகாரிக்கு, ஒரு பத்திரத்துக்கு, 15 ஆயிரம் ரூபாய் குடுத்துடணும்... கார்த்தால 10:00 மணிக்கு ஆரம்பிச்சு, ராத்திரி, 8:00 மணி வரைக்கும் விறுவிறுப்பா பத்திரப்பதிவு நடக்கறது ஓய்...

''அதே நேரம், அதிகாரி, பணத்தை கையால கூட தொட மாட்டாராம்... அங்க இருக்கற ஊழியர்கள், பத்திர எழுத்தர்கள் மூலமா தான், பணத்தை வாங்கறார் ஓய்... அதிகாரிக்கு தினமும், குறைந்தபட்சம், 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கறது ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''என்ன செல்வகுமரன்... ஆளையே பார்க்க முடியலை...'' என, எதிரில் வந்த நண்பரிடம் அந்தோணிசாமி கதை பேச, மற்றவர்கள் நடையை கட்டினர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement