Advertisement

பெற்றோரை பராமரிக்காமல் கைவிட்ட மகன்: ரூ.3 கோடி சொத்தை மீட்டு கொடுத்த ஆர்.டி.ஓ.,

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், பெற்றோரை பராமரிக்காமல் கைவிட்ட மகனுக்கு வழங்கப்பட்ட, மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீண்டும், பெற்றோர் வசம் கிடைக்க, ஆர்.டி.ஓ., நடவடிக்கை எடுத்தார்.
கிருஷ்ணகிரி, சென்னை சாலையில் உள்ள பெரியசாமி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி, 67. வணிக வரித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; இவரது மனைவி சகுந்தலா, 60. இவர்களது மகன் அருண்குமார், 40. இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். அருண்குமாருக்கு ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பால், தாய் சகுந்தலா தன் சிறுநீரகத்தை வழங்கி காப்பாற்றி உள்ளார். மேலும், வீடு மற்றும் கடைகள் உட்பட, மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, மகனுக்கு பெற்றோர் தானமாக வழங்கினர். காலப்போக்கில் பெற்றோரை பராமரிக்காமல் அருண்குமார் கைவிட்டார். பெரியசாமி தான் பெறும் மாத ஓய்வூதியம், 6,000 ரூபாயை வைத்து, மனைவியுடன் வறுமையில் வசித்து வந்தார். இந்நிலையில், பெரியசாமி- சகுந்தலா ஆகியோர், மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம் மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுக்க, கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., தெய்வநாயகிக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். விசாரணையின் முடிவில், பெற்றோரிடம் அருண்குமார் தானமாக பெற்ற, மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, மீண்டும் பெற்றோருக்கு வழங்க, ஆர்.டி.ஓ., தெய்வநாயகி உத்தரவிட்டார். சொத்து ஆணவங்கள், நேற்று முன்தினம் பெரியசாமி- சகுந்தலா தம்பதியிடம் வழங்கப்பட்டன. ஆவணங்களை அருண்குமார் தன் பெற்றோரிடமிருந்து மீண்டும் அபகரிக்கக்கூடாது. மீறினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆர்.டி.ஓ., எச்சரிக்கை விடுத்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement