Advertisement

அடிப்படை வசதி மேற்கொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியம்: உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

குளித்தலை: அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பலமுறை புகார் தெரிவித்தும், பொது மக்களை உதாசீனப்படுத்தும் ஒன்றிய நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினை கண்டித்து, கஸ்பா கிராம மக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, கழுகூர் பஞ்., கஸ்பா கிராமத்தில், 150க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. காவிரி குடிநீர், சாக்கடை, சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளக் கோரி, பஞ்., நிர்வாகத்திடம் மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் இல்லை. ஒன்றிய மற்றும் மாவட்ட நிர்வாகத்தில் கோரிக்கை அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, பகுதியினர் கூறியதாவது: அடிப்படை வசதிகளை கோரி, பல போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் கடந்த உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தோம். தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஒன்றிய ஆணையர் சமரசம் பேசினர். பின், ஒரு சுகாதார வளாகம் மட்டும் கட்டிக் கொடுத்தனர். அதற்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, இரு ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ளது. அதன்பிறகு, எந்தவித வசதியும் செய்து தரப்படவில்லை. தற்போது உள்ளாட்சி தேர்தல் வரவிருக்கிறது. குடிநீர், சாக்கடை, சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கேட்டு பலமுறை பஞ்., நிர்வாகம், மாவட்டம், ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளோம் ஆனால், சுகாதார வளாகம் இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது. திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறோம். உள்ளாட்சி தேர்தலுக்குள் எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, தோகைமலை ஒன்றிய ஏ.பி.டி.ஓ., ராணியிடம் கேட்டபோது, ''கழுகூர் கஸ்பா கிராம மக்கள் என்ன கோரிக்கை வைத்துள்ளனர் என தெரியவில்லை. மக்கள் பிரச்னை குறித்து நேரில் சென்று விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement