Advertisement

டீ கடை பெஞ்ச்

12 ஆயிரம் வேட்பாளர்களை நிறுத்த கமல் கனவு!

''கந்தசாமி தலையிட்டுட்டாருங்க...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார், அந்தோணிசாமி.''திருவண்ணாமலை கலெக்டரையா சொல்றீர்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''ஆமாம்... திருவண்ணாமலை மாவட்டத்துல, ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு நேர்காணல் நடந்தும், பணி நியமனம் இழுபறியாகிட்டே இருக்குன்னு, கொஞ்ச நாளைக்கு முன்னாடி பேசினோமே... ஆளுங்கட்சியினர் நெருக்கடியால, பணி நியமனத்தை கிடப்புல போட்டுட்டதாகவும், கந்தசாமி தலையிடுவாரான்னும் பேசியிருந்தோமுங்க...''இதைப் பார்த்துட்டு, கலெக்டர் நடவடிக்கையில இறங்கிட்டார்... 70 ஊராட்சி செயலர்களுக்கு, சமீபத்துல பணி நியமன உத்தரவு பறந்துடுச்சு... இன்னும் காலியா இருக்கிற செயலர் பதவிகளுக்கு, தகுதியானவங்க விண்ணப்பிக்கலாம்னும் அழைப்பு குடுத்திருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.''வேலை பார்க்க விடாம, அடிக்கடி மாற்று பணிக்கு கூப்பிடுறதால, சப்- - கலெக்டர்கள் தவிக்கிறாங்க பா...'' என, அடுத்து பேச ஆரம்பித்தார், அன்வர்பாய்.''அவங்களை தடுக்கிறது யாரு வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''காஞ்சிபுரம் மாவட்ட கலால் துறையில, ஆறு சப்- - கலெக்டர்கள் வேலை பார்க்கிறாங்க பா... மது பானங்கள் தயாரிக்கிற தனியார் நிறுவனங்களை கண்காணிக்கிறது தான் இவங்க வேலை...''இவங்களை, அத்திவரதர் வைபவத்துக்காக, 20 நாளைக்கு மேல மாற்றுப் பணியில நியமிச்சாங்க... அடுத்து, மோடி - சீன அதிபர் சந்திப்பு நிகழ்ச்சிக்காக, ஒரு வாரம் மாற்றுப் பணியில நியமிச்சாங்க பா...''இதனால, அவங்க ரெகுலர் வேலையை பார்க்க முடியலை... கலால் துறை கமிஷனரே, 'இனிமே எங்க அதிகாரிகளை மாற்றுப் பணிக்கு கூப்பிடாதீங்க'ன்னு மாவட்ட நிர்வாகத்துகிட்ட சொல்லிட்டாரு பா...''ஆனா, அதை காதுலயே போட்டுக்காத மாவட்ட நிர்வாகம், இப்ப, உள்ளாட்சி தேர்தல் பணிக்காக, மறுபடியும், 40 நாளைக்கு மாற்றுப் பணியா கூப்பிட்டிருக்காம்... சப் - கலெக்டர்கள் புலம்பிட்டு இருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.''உள்ளாட்சி தேர்தலுக்கு இலக்கு நிர்ணயம் பண்ணிட்டாரு வே...'' என, கடைசி தகவலுக்கு சென்றார், பெரியசாமி அண்ணாச்சி.''எந்தக் கட்சியில ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''மக்கள் நீதி மையம் தலைவர் கமல், இந்தியன் - 2 படத்துல, 'பிசி'யா நடிச்சிட்டு இருக்காரு... அப்பப்ப, கட்சி பணிகளையும் கவனிக்காரு வே...''சமீபத்துல, கட்சியின் பல பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமிச்சிருக்காரு... அவங்களிடம், 'உள்ளாட்சி தேர்தல்ல, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள்ல, தலைவர் வேட்பாளரை நிறுத்துறதுதான் என்னோட இலக்கு... கட்சி சார்பில்லாம நடக்குற இந்த தேர்தல்ல, நாம ஜெயிச்சாகணும்... அதுக்கான வேலையை பாருங்க'ன்னு கமல் சொல்லியிருக்காரு வே...''நிர்வாகிகளோ, 'இப்படித் தான் லோக்சபா தேர்தல் நேரத்துலயும் சொன்னாரு... கடைசியில, வேட்பாளர்கள் கிடைக்காம தவிச்சு போயிட்டோம்... அதே மாதிரி, இந்த முறையும் நடக்காம இருந்தா சரிதான்'னு புலம்பிட்டே, இடத்தை காலி செஞ்சிருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.பெஞ்சில் மேலும் சிலர் இடம் பிடிக்க, பெரியவர்கள் கிளம்பினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • vasumathi - Sindhathari Pettai ,இந்தியா

    சாராய ஆலைகளை கண்காணிப்பது ஒரு வேலையா ?? அதற்கு 6 பேர் . ஊருக்கு உருப்படியான வேலை செய்யலாம்..

Advertisement