Advertisement

எங்கும்... எதிலும்... குவியும் குப்பை

விருதுநகர்:விருதுநகர் நகராட்சியின் எல்லை பகுதிகளில் கொட்டப்படும் குப்பையை நகராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் என யாரும் அள்ளாமல் மெத்தனம் செய்வதால் அப்பகுதிகளில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
விருதுநகர் நகராட்சியில் மொத்தம் 36 வார்டு உள்ளது. முன்பெல்லாம் தெருவெங்கும் குப்பைமேடு காட்சியளிக்கும். எங்கு பார்த்தாலும் சுகாதாரக்கேடு அதிகமாக இருக்கும். பின் நகராட்சி நிர்வாகம் வீடுகளில் குப்பை வாங்கும் முறையை பின்பற்ற துவங்கியது. ஆனால் தற்போது பல்வேறு பகுதிகளில் துப்புரவு ஊழியர்கள் குப்பை வாங்க வருவதில்லை என மக்களிடம் புகார் எழுந்தது. மேலும் நகராட்சியின் எல்லை பகுதிகளான சிவகாசி ஆத்துப்பாலம், சாத்துார் ரோடு ஆத்துப்பாலம், புல்லலக்கோட்டை ரோடு சந்திப்பு, வேலுச்சாமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குப்பை கொட்டப்படுவது சகஜமாகி வருகிறது. சிவகாசி ஆத்துப்பாலம் அருகில் கொட்டப்பட்டுள்ள குப்பை பஸ்சில் விருதுநகருக்குள் நுழையும் மக்களை முகம் சுளிக்க வைக்கிறது. வேலுச்சாமிநகரில் நகராட்சி எல்லை பகுதியில் நீர்வரத்து கால்வாய் உள்ளது. பொதுமக்கள் இங்கு குப்பை கொட்டுவது மட்டுமல்லாமல் நீர்வரத்து கால்வாயை அசுத்தப்படுத்தி வருகின்றனர். குப்பையை அள்ளுவதற்கு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி எல்லை பகுதிகளில் தேங்கியுள்ள குப்பையை சுத்தப்படுத்தி 'குப்பை கொட்டக் கூடாது' என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். மேலும் நகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அப்பகுதியில் வசிப்போருக்கு எச்சரிக்கை விட வேண்டும். மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தாராளமான குப்பை
வடமலைக்குறிச்சி பாலம், புல்லலக்கோட்டை சந்திப்பு, கிழக்குபாண்டியன் காலனி ஓடை ஆகியவற்றில் பொதுமக்கள் தாரளமாக குப்பை கொட்டி வருகின்றனர். இதை நகராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் கண்டு கொள்வதே இல்லை. தற்போது மழைக்காலம் என்பதால் குப்பையுடன் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தமிழ்செல்வன், ஓட்டல் உரிமையாளர், விருதுநகர்.
நடவடிக்கை எடுங்க
எல்லைப்பகுதிகளில் குப்பை தேங்குவதால் கொசுத்தொல்லை அதிகரிக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது நகராட்சி பகுதியில் வசிப்பவர்கள் தான். மேலும் அபராதம் வசூலிப்பது போன்ற அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டால் குப்பை கொட்டுவதை தவிர்க்கலாம். இதற்கு நகராட்சி நிர்வாகம் தான் முன்வர வேண்டும்.-பாண்டி, பொறியாளர், விருதுநகர்.
நகராட்சிக்கு தோல்வி
விருதுநகரில் துாய்மை இந்தியா திட்டம் தோல்வி அடைய காரணம் அதிகாரிகள் தான். தற்போது அதே நிலைமை நகராட்சியின் குப்பை வாங்கும் திட்டத்திற்கும் வந்துள்ளது. வீட்டுக்கு வீடு குப்பை வாங்கியும் இன்னும் குப்பை ஆங்காங்கே கொட்டப்பட்டு வருகிறது. மேலும் எல்லைப்பகுதிகளில் தேங்கி கிடக்கும் குப்பையால் பொதுமக்களுக்கு தொற்றுநோய், வாந்தி போன்ற நோய்கள் வருகின்றன.-தீபக்குமரன், தனியார் ஊழியர், விருதுநகர்.
எச்சரிக்கை விடப்படும்
யாரும் குப்பையை கொட்டக் கூடாது. குப்பையை துப்புரவு ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். குப்பை கொட்டுவோருக்கு எச்சரிக்கை விடப்படும்.-பார்த்தசாரதி, நகராட்சி கமிஷனர், விருதுநகர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement