Advertisement

192 ஞாயிறுகள்...2, 000 மரக்கன்றுகள்

விருதுநகர்:பசுமையான விருதுநகர் என்பது ஆண்டாண்டு காலமாக விருதுநகர் மக்களின் கனவாகவே உள்ளது.
விருதுநகர் கடும் வறட்சியான மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. அதற்கு காரணம் மரங்களின் எண்ணிக்கை குறைவு.புழுதி பறக்கும் விருதுநகரை புதிய விருதுநகராக மாற்ற வேண்டுமானால் வீடுகள்தோறும், வீதிகள்தோறும் மரங்கள் நட வேண்டும். வீட்டிற்கு ஒரு மரம் நட்டால் அது வீட்டையும் நாட்டையும் காக்கும். சுத்தமான காற்றுக்கும் சுற்றுசூழல் பாதுகாப்புக்கும் மரங்களே அஸ்திவாரம் . விருதுநகரில் மரங்கள் இல்லாததால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது.
இதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும் என்ற கொள்கையோடு, கடந்த 48 மாதங்களாக ஞாயிறுதோறும் மரக்கன்றுகளை பார்க்கும் இடமெல்லாம் நட்டு பசுமை புரட்சி செய்து கொண்டிருக்கிறது 30 பேர் கொண்ட 'விருதை விழுதுகள்' அமைப்பு. எப்படியாவது விருதுநகரை வளமான நகராக மாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வரும் சிலரில், 'விருதை விழுதுகள்' அமைப்பை சேர்ந்த நாகேந்திரனும் ஒருவர்.
அவர் தங்கள் குழு முயற்சியால் பசுமையான விருதுநகரை உருவாக்க மேற்கொண்டுள்ள பசுமை அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்...விருதுநகரில் மழையில்லாமை , பசுமையின்மை , குடிநீர் பிரச்னை , சுற்றுச்சூழல் சீரழிவிற்கும் சுற்றி சுற்றி பார்த்தால் போதிய மரங்கள் இல்லாதது தான் முக்கிய காரணமாக இருக்கிறது.இதனால் சுற்றுச்சூழல் பல்வேறு வழிகளில் மாசுபட்டு வருகிறது. மக்களும் பல்வேறு விதங்களில் பாதிக்கின்றனர். 2016 ல் என்னுடைய முகநுால் பக்கத்தில் பசுமையான, புதுமையான விருதுநகரை உருவாக்க ஒன்றுபடுவோம் என்ற கருத்தை பதிவிட்டிருந்தேன். அப்பதிவிற்கு இயற்கையில் என்னை போல் கருத்துடைய கல்லுாரி மாணவர்கள், ஓய்வு ராணுவ அதிகாரிகள், அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள் என 12 பேர் இணைந்தனர். அதன்பின் ஒவ்வொருவராக சேர்ந்து 30 பேர் கொண்ட குழுவாக மாறினோம்.ஞாயிற்று கிழமையானால் ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து அங்கு குழி தோண்டி மரக்கன்றுகள் நடுவோம். எந்த பகுதியில் மரக்கன்றுகள் நடப்போகிறமோ அந்த பகுதி மக்களை வைத்தே மரக்கன்றுகளை நட்டு வேலி அமைத்து தண்ணீர் ஊற்ற வைப்போம். இதனால் இம்மரங்கள் நம் மரங்கள் என்ற எண்ணம் அப்பகுதி மக்களுக்கு வரும். தற்போது ஒவ்வொரு பகுதி மக்களும் குழி தோண்டி வைத்து எங்கள் பகுதிக்கு வந்து மரம் நடுங்கள் என அழைப்பு விடுக்கிறார்கள்.விருதுநகரில் அதிகமாக மரங்களை நட்டு வளர்த்தால் தான் வருங்கால சந்ததியினருக்கு வளமான வாழ்வை நாம் கொடுக்க முடியும். கடந்த ஞாயிறுக்கிழமை தான் பேராலி ரோட்டில் உள்ள விருட்சம் ஆதரவற்றோர் இல்லத்தில் 2000 வது மரக்கன்றை நட்டுள்ளோம். 30 பேர் சேர்ந்து 192 ஞாயிறுகளில் 2000 மரக்கன்றுகள் நட முடியும் என்றால் வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்தால் விருதுநகரில் மிகப்பெரிய பசுமைப்புரட்சியே ஏற்படும்.மரம் வளர்ப்பதின் அவசியத்தை அனைவரும் புரிந்து கொண்டால் தான் பசுமையான விருதுநகரை உருவாக்க முடியும்.ஒவ்வொரு ஞாயிறும் மரக்கன்றுகளை நட்டு வேலி அமைத்து தண்ணீர் விடும்போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எங்களின் இந்த பசுமை பயணத்திற்கு டாக்டர் அப்துல்கலாம் விஷன் 2020, இயற்கை உறவுகள், சிறந்த இயற்கை காவலர்கள் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளது. ஒரு மரக்கன்று ரூ.80 முதல் , வேலி ரூ.150, உரம் ரூ.10 என ஒரு மரக்கன்றிற்கு ரூ.250 வரை செலவு ஆகிறது. எங்கள் அமைப்பு நண்பர்கள், இயற்கை ஆர்வலர்கள் என பலரின் கூட்டு முயற்சியால் இந்த பசுமை பணியை செய்து கொண்டிருக்கிறோம். என் ஆயுள் காலம் முடிவதற்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்தெடுக்க வேண்டும் என்ற சபதம் எடுத்துள்ளேன், என்றார். இவருடன் பசுமை பயணத்தில் இணைய 96292 57273

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement