Advertisement

இடநெருக்கடியில் தவிக்குது சாத்துார் பஸ் ஸ்டாண்ட்

சாத்துார்:சாத்துார் அண்ணா பவள விழா பஸ் ஸ்டாண்டில் இடநெருக்கடியால் பஸ்களை நிறுத்த முடியாமல் டிரைவர்கள் சிரமப்படுகின்றனர். மேலும் பயணிகள் இருக்கை வசதி, தெரு விளக்கு வசதியின்றியும், சுகாதாரமற்ற கழிப்பறையாலும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மாவட்டத்தில் பல்வேறு நகராட்சி பஸ் ஸ்டாண்டுகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் சாத்துார் பஸ் ஸ்டாண்டு மட்டும், 40 ஆண்டுகளாக விரிவாக்கம் செய்யப்படாமல் அப்படியே அலங்கோலமாக உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு ரூட் பஸ்கள் கூட பஸ் ஸ்டாண்டிற்கு வந்து பயணிகளை ஏற்றி சென்றன. ஆனால் தற்போது டவுன் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ரூட் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்கு வெளியிலும், நான்கு வழிச்சாலை சந்திப்பிலும் நின்று செல்கின்றன. சாத்துாருக்கு புதியதாக வரும் பயணிகள் எந்த பஸ், எங்கு நிற்கும் என்பது தெரியாமல் அலைந்து திரிகின்றனர். டவுன் பஸ்களும் நிறுத்த வசதியின்றி குறுக்கும் நெடுக்கும் நிற்கும் நிலையுள்ளது. இதனால் பஸ் டிரைவர்களுக்குள் அடிக்கடி தகராறும் ஏற்படுகிறது. இருக்கை வசதியில்லாத நிலையில் பயணிகள் கடைகளின் முன்பு நின்று கொண்டும், பிளாட்பாரத்தில் உட்கார்ந்தும் பஸ்சிற்காக காத்திருக்கும் நிலையுள்ளது. நகராட்சி கடைகள் எல்லாம் கூரைகள் பெயர்ந்து தலையில் விழும் நிலையில் உள்ளன. இதனால் வாடகை கட்டி விட்டு பிளாட்பாரத்தில் கடைக்காரர்கள் பொருட்களை பரப்பி விற்பனை செய்கின்றனர். இலவச பொதுக் கழிப்பறைகள் பராமரிப்பில்லாமல் உள்ளன. இதனால் கழிப்பறையில் இருந்து துர்நாற்றம் வீசும் நிலையுள்ளது. கட்டணக் கழிப்பறை கோப்பைகள் பெயர்ந்து, சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்டில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் அடிக்கடி பழுதாகி விடுகிறது. இதை சரி செய்ய பல மாதங்களாகிறது. பெயரளவில் செயல்பட்டு வரும் பஸ் ஸ்டாண்டிற்கு விடிவு காலம் எப்போது என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எரியாத விளக்குகள்
பஸ் ஸ்டாண்டில் விளக்குகள் அடிக்கடி பழுதாகி விடுகின்றன. இரவு நேரத்தில் பயணிகள் அவதிப்படுகின்றனர். பயணிகள் உட்கார இருக்கை வசதி கிடையாது. பலர் தரையில் உட்காருகின்றனர். பஸ்கள் வரும் போது உட்கார்ந்திருப்பவர்கள் அலறி ஓடுகின்றனர்.தொழில் வரி, சேவை வரி, குப்பை வரி என பல்வேறு வரிகளை வசூலிக்கும் நகராட்சி நிர்வாகம் பயணிகள், கடைக்காரர்கள் வசதி பற்றி கவலை கொள்வதில்லை. ரூட் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்கு வெளியிலும், நான்கு வழிச்சாலையிலும் நிறுத்தப்படுவதால் வியாபாரம் பாதிக்கிறது. உயர்த்தப்பட்ட வாடகையை கட்ட முடியாமல் வியாபாரிகள் அவதிப்படுகின்றனர்.ஒரு பஸ் உள்ளே வந்தால் ஒரு பஸ் வெளியேற வேண்டிய நிலையுள்ளது.--ராஜாராமன், வியாபாரி, சாத்துார்.
சேதமடைந்த மேற்கூரை
பஸ் ஸ்டாண்டில் உள்ள அனைத்துக் கடைகளின் மேற்கூரைகளும் சேதமடைந்துள்ளதால், சிமென்ட் கூரை பெயர்ந்து தலையில் விழுகிறது. வேறுவழியின்றி பிளாட்பாரத்தில் பொருட்களை வைத்து விற்பனை செய்கிறோம். கடையின் மேற்கூரை சரி செய்யாத நகராட்சி நிர்வாகம் வாடகையை மட்டும் ரூ.1280 லிருந்து ரூ.4058 ரூபாயாக உயர்த்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் இருக்கன்குடி பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். அன்று இலவச கழிப்பறை சுத்தம் செய்ய ஆட்கள் வருவதில்லை. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.-தாமஸ், வியாபாரி, சாத்துார்.
தீர்வு
சாத்துார் பஸ் ஸ்டாண்டினை விரிவாக்கம் செய்ய அருகில் உள்ள தனியார் இடங்களை வாங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகராட்சியிடம் போதுமான நிதியில்லாத நிலையில் அரசை வலியுறுத்தி நிதியுதவி பெற வேண்டும். இடத்தை விரிவாக்கம் செய்து புதிய கடைகள், கழிப்பறைகள் கட்டித்தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே உள்ள கட்டடங்களின் தரத்தை ஆராய்ந்து உடனே சீரமைக்க உரிய நடவடிக்கைகள் எடுப்பதும் அவசியமாகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement