Advertisement

வந்தாலே நடுங்குது!ரோட்டில் உலா வரும் கால்நடைகள்.....நடவடிக்கை இல்லாததால் தாராளம்

சாத்துார்:விருதுநகர் மாவட்டத்தில் ரோட்டில் சுதந்திரமாக உலா வரும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
கால்நடைகள் வளர்ப்பதற்கு போதுமான இட வசதியிருந்த போதும் இதை வளர்ப்பவர்கள் கயிறுகளை அவிழ்த்து விட்டு ரோட்டில் சுதந்திரமாக உலா விடுகின்றனர். இவைகள் ரோட்டில் நடந்து செல்பவர்களை அச்சுறுத்துவதுடன் சாலை யோரங்களில் உள்ள பெட்டிக்கடைகளில் உள்ள வாழைப்பழம், இளநீர் கூந்தல், தண்ணீர் பழம், வெள்ளரிக்காய் போன்ற பழங்களை தின்கின்றன. காய்கறி வியாபாரிகள் அசந்த நேரம் பார்த்து காய்கறிகளை சாப்பிடுகின்றன. இதனால் ரோட்டில் பசு, எருமை போன்ற கால்நடைகள் வந்தால் வியாபாரிகள் கம்புடன் விரட்ட தொடங்கி விடுகின்றனர். இப்படி விரட்டப்படும் கால்நடைகள் பயந்து ஓடும் போது பாதசாரிகளையும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் மோதி விபத்துக்கள் ஏற்படுத்துகின்றன. தலை, கை,கால்களில் அடிபட்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் பலத்த காயமடைந்து பலியாகும் சம்பவங்களும் நடக்கின்றன. இரவிலும் கால்நடைகள் சுதந்திரமாக ரோட்டில் உலா வருகின்றன. இவை ரோட்டின் ஓரத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் இரவு நேரத்தில் நடு ரோட்டில் படுத்து ஹாயாக ஒய்வு எடுக்கின்றன. துாக்க கலக்கத்தில் வரும் பஸ்,லாரி போன்ற கனரக வாகன டிரைவர்களால் கால்நடைகள் மீது மோதி கவிழும் சம்பவங்களும் நடந்துள்ளது. ஆடு, பசு, எருமை போன்ற கால்நடைகள் மேய்வதற்காக மேய்ச்சல் நிலங்களை அரசு ஒதுக்கி உள்ளது. இங்கு மேய விடாமல் குடியிருப்பு பகுதி, ரோட்டில் உலா விடுவதால் நாளுக்கு நாள் விபத்துக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கால்நடைகளை கட்டுப்பாட்டுடன் இவற்றை வளர்க்கவும் உள்ளாட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement