Advertisement

பள்ளம் தோண்டியாச்சு...மூடுவது யார்...

சிவகாசி:''குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட ரோடு ஒரு மாதமாக சரி செய்யாததாலும் ,வாறுகால் துார்வாரப்படாததாலும் பி.கே.எஸ்.ஏ., ஆறுமுகம் ரோடு பகுதி மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.இப் பகுதி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளால் சிக்கி தவிக்கின்றனர்.
இப்பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு ரோட்டில் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் இன்று வரையிலும் பணிகள் முடிவடையவில்லை. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ஒன்றரை ஆண்டாக வாறுகால் துார்வாரப்படாமல் இப்பகுதியினர் துார்நாற்றத்தில் சிக்கி அவதிப்படுகின்றனர். சிறிய மழை பெய்தாலும் கழிவுநீர் மழைநீர் ரோட்டில் ஓடுவதோடு கடைகள், குடியிருப்புகளுக்குள் நுழைகிறது. மருதநாடார் ஊரணி ஓடை துார்வாரப்படாமல் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பட்டுள்ளது. கொசு உற்பத்தியாகி இரவில் மட்டுமல்லாது பகலிலும் கடித்து துன்புறுத்துகிறது. இப்பகுதியில் ரோடு அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. தற்போது ரோடு போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதே பகுதியில் அமைக்கப்பட்ட அடிபம்ப் செயல்படாததால் புழக்கத்திற்கு தண்ணீரின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.இப்பகுதியில் ஒன்றரை ஆண்டாக வாறுகால் துார்வாரப்படவில்லை. சிறிய மழை பெய்தாலும் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் ரோட்டில் ஓடுவதோடு வீடு, கடைகளுக்குள் புகுந்து விடுகிறது.இதனால் நாங்கள் தான் பெரும் சிரமத்தை சந்திக்கிறோம்.- பாலகிருஷ்ணன், பிரின்டிங் தொழில்.
பி.கே.எஸ்.ஏ., ஆறுமுகம் ரோட்டில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்டு ஒரு மாதமாகியும் பணி முடிவடையவில்லை. வீடு , கடை முன்பாக ரோடு தோண்டப்பட்டதால் எளிதாக செல்ல முடியவில்லை. இந்த ரோடு வழியாகத்தான் இப்பகுதி பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்கின்றனர். ரோடு சீரமைக்கப்படாததால் மாணவர்கள் அடிக்கடி கீழே விழுகின்றனர். இப்பகுதியே விபத்து பகுதி என்பதால் விரைவில் பணி முடிந்து ரோட்டினை சீரமைக்க வேண்டும்.- சந்திரசேகரன், பலசரக்கு கடை உரிமையாளர்.
இப்பகுதி மருதநாடார் செல்லும் ஓடை துார்வாரப்படவில்லை. ஓடை முழுவதும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் நிரம்பி உள்ளது. கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் ஒரே இடத்தில் தேங்கி துர்நாற்றத்தினை ஏற்படுத்துகிறது. இப்பகுதி ஸ்டோக் பம்ப் செயல்படவில்லை. இதனால் மக்கள் புழக்கத்திற்கு தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.- முருகேசன் , பிரின்டிங் தொழில்.
இப்பகுதியில் தெருக்களில் அமைக்கப்பட்ட ரோடுகள் சேதமடைந்துவிட்டது. கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் குப்பை கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. குப்பை வாங்குவதற்கு நகராட்சி ஊழியர்கள் வருவதில்லை. எத்தனையோ புகார் கொடுத்தும் அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.- மேரி, குடும்பத்தலைவி.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement