Advertisement

டவுட் தனபாலு

நடிகர் ரஜினிகாந்த்: நடைபெற உள்ள, உள்ளாட்சி தேர்தலில், ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த யாரும், போட்டியிடக் கூடாது; யாருக்கும் ஆதரவாக, ஓட்டு சேகரிக்கவும் கூடாது. மீறினால், சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர்.

'டவுட்' தனபாலு: 'இன்னும் இரண்டாண்டுகளில், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம்' என, கூறும் நீங்கள், உள்ளாட்சி தேர்தலில், உங்கள் ரசிகர்களை போட்டியிடக் கூடாது என, சொல்வது சரியா; இப்படி நீங்கள் தடுத்தால், சட்டசபை தேர்தலில் போட்டியிடும் போது, அனுபவம் இல்லாமல் அவர்கள் தவிப்பரே... அரசியல் சூழ்ச்சிகளை அறிய, தேர்தல் முன் அனுபவம் வேண்டாமா என்ற என், 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: என் செயல்பாடுகளைப் பார்த்து, 'நானே பொறாமைப்படும் அளவுக்கு, ஸ்டாலின் உழைத்துக் கொண்டிருக்கிறார்...' என, கருணாநிதி என்னைப் பாராட்டிஉள்ளார். இதுபோல, என் மகன் உதயநிதியைப் பார்த்து, நான் சொல்ல வேண்டிய நிலை வந்தாக வேண்டும்.

'டவுட்' தனபாலு: தி.மு.க., வில், வாழையடி வாழையாக, கட்சிப் பதவிகள், வாரிசுகளுக்கு வழங்கப்படுவது போல, பதவி பெற்ற வாரிசுகளும், 'சிறப்பாக' செயலாற்றி வருவதை, தமிழகம் தான் அறிந்துள்ளதே... இளைஞரணி தலைவராக உங்கள் மகன் உதயநிதி சிறப்பாக செயல்படுவார் என்ற எண்ணத்தில் தானே, அந்தப் பதவிக்கு மகுடம் சூட்டினீர்கள்... இப்போது என்ன திடீர், 'டவுட்' என்பதே என் கேள்வி!

பத்திரிகை செய்தி: உள்ளாட்சி தேர்தலில், பதவிகளை ஏலம் விட்டால், சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய முறைகேடுகளை தடுக்க, மாநில கலெக்டர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

'டவுட்' தனபாலு: உள்ளாட்சி தேர்தலில், கிராம மக்கள் சிலர், இது போல சில இடங்களில் பதவிகளை ஏலம் விட்டுள்ளனர். இப்படித் தானே, எம்.பி.,க்கள் - எம்.எல்.ஏ.,க்கள் தேர்தலில் வேட்பாளர்கள், கட்சித் தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கட்சிக்கு யார் அதிக தொகை கொடுக்கின்றனரோ அவர்களுக்குத் தானே, பெரும்பாலான கட்சிகள், போட்டியிட வாய்ப்பு வழங்குகின்றன. இந்த நடைமுறை, நீண்ட காலமாக தமிழகத்தில் நிலவுவதை, தேர்தல் ஆணையர் அறிய மாட்டாரோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறதே.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    வேட்பு மனு பரிசீலனையில் ‘எவ்வளவு செலவு செய்வீர்கள்’ என்பதே முதல் கேள்வி. இதே ஸ்டைலேதான் உள்ளாட்சிப் பதவிகளுக்கும் நடக்கிறது அதையும் கேட்காது, இதையும் மவுனமாகப் பார்ப்பதுதான் தேர்தல் ஆணையத்தின் நிலை

Advertisement