Advertisement

சாலையை அடைத்து நிறுத்தப்படும் கார்களால் டிராபிக் ஜாம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சாலையை அடைத்தவாறு நிறுத்தப்படும் கார்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.


விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் பெருக்கத்தால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக விளங்குகிறது. நகரின் முக்கிய சாலைகளான கச்சேரி சாலை, காந்தி ரோடு, சேலம் சாலை ஆகிய சாலைகளில் அரசு அலுவலகங்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் பல உள்ளது. நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்களுக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது.காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லுாரி வாகனங்கள், ஆட்டோக்கள் பல நகரை கடந்து செல்கிறது.



அப்போது, போக்குவரத்து மிகுதியான சாலைகளில், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள், தள்ளுவண்டிகள் விதிமுறைகளை மீறி சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி விட்டுச் செல்கின்றனர்.இதனால் பஸ்கள், லாரிகள் போன்ற வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமம் ஏற்படுகிறது.போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த நான்குமுனை சந்திப்பில் இருந்து 200 மீட்டர் துாரம் வரை அனைத்து சாலைகளிலும் 'நோ பார்க்கிங்' போர்டுகள் வைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.



இருப்பினும் விதிமுறைகளை மீறி நோ பார்க்கிங்கில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச் சுவரையொட்டி கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் அவ்வப்போது நிறுத்தப்படுகின்றன.இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அவ்வழியாக செல்லும் கனரக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு நிறுத்தப்படும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement