Advertisement

உளுந்துார்பேட்டை அருகே ஆம்னி பஸ் மோதி 4 பேர் பலி

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்தி வாக்குவாதம் செய்தபோது ஆம்னி பஸ் மோதி 4 பேர் இறந்தனர்.

வேலுார் மாவட்டம், அரக்கோணம் அடுத்த அம்மனுார் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஐசக்அய்யா, 54; அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் நிறுவனர். ஐ.டி.ஐ., மற்றும் கல்வியியல் கல்லுாரி நடத்தி வருகிறார். இவர் தனது மகன் ராஜன்விண்ணரசு, 23; என்பவருக்கு திருநெல்வேலி அடுத்த பாளையங்கோட்டை பகுதியில் பெண் பார்த்து திருமண நிச்சயதார்த்தம் முடித்துவிட்டு டிஎன் 73 ஏஒய் 1010 பதிவெண் பார்ச்சுனர் காரில் மனைவி பிரேமா, 50; மற்றொரு மகன் கிளிண்டன், 21; உட்பட 9 பேருடன் நேற்று முன்தினம் இரவு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.காரை வினோத் என்பவர் ஓட்டி வந்தார்.

அறந்தாங்கியில் இருந்து 57 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்த டிஎன்.55 என்.0866 பதிவெண்ணுள்ள அரசு பஸ் முன்னால் சென்றுள்ளது. வெகுதுாரம் வரை கார் டிரைவர் ஹாரன் அடித்தும் அரசு பஸ் டிரைவர், காருக்கு வழிவிடாமல் சென்றுள்ளார்.கடலுார் மாவட்டம் வேப்பூர் அருகே வந்தபோது, அரசு பஸ்சை ஓவர் டேக் செய்தபோது, காரில் லேசாக உரசியபடி பஸ் சென்றது. இதனால் ஆவேசமடைந்த டிரைவர் வினோத், பஸ்சை விரட்டிச் சென்று, நேற்று அதிகாலை 2:50 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த எறஞ்சி அருகே அரசு பஸ்சின் முன்னால் சென்று காரை நிறுத்தினார். தேசிய நெடுஞ்சாலையில் நடுவிலேயே காரும், அரசு பஸ்சும் நின்றன.


காரிலிருந்து ராஜன்விண்ணரசு கீழே இறங்கி அரசு பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பஸ்சில் வந்த பயணிகள் மூன்று பேர் கீழே இறங்கி இவர்களது வாக்குவாதத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.அப்போது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த பிஒய். 01, சிகியூ.9379 பதிவெண்ணுள்ள கே.பி.என்., என்ற தனியார் ஆம்னி பஸ், நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பஸ்சின் பின்னால் மோதியது.இதனால் அரசு பஸ்சின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கார் 200 அடி துாரம் ஓடி சாலையோர வேப்பமரம் மீது மோதி விபத்துக்குள்ளானது.அப்போது தனியார் சொகுசு பஸ் மற்றும் அரசு பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி ராஜன்விண்ணரசு, கீழே இறங்கி வேடிக்கை பார்த்த பஸ் பயணிகளான காஞ்சிபுரம் மாவட்டம், மின்னல் சித்தாமூர் அடுத்த களத்துாரைச் சேர்ந்த சற்குணம், 34; புதுக்கோட்டை அடுத்த ஆயக்குடியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, 39; அறந்தாங்கியைச் சேர்ந்த அருண்பாண்டியன், 30; ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.


மேலும் கார் டிரைவர் வினோத், அரசு பஸ்சில் இருந்த புதுக்கோட்டை அடுத்த ஆயக்குடி தினேஷ்குமார், 32; தஞ்சாவூர் அடுத்த சொர்க்காடு முருகானந்தம், 29; அரக்கோணம் அஸ்கர், 25; துறையூர் அடுத்த நரசிங்கபுரம் கோவிந்தராஜ், 37; சென்னை மண்ணடி ஜானகி, 70; காரில் இருந்த ஐசக்அய்யா, பிரேமா, கிளின்டன், 21; அரக்கோணம் மோகன்ராஜ் 50; சிந்து, 19; ஆம்னி பஸ் டிரைவர் புதுக்கோட்டை மதியழகன், 51; உட்பட 22 பேர் படுகாயமடைந்தனர்.தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


உளுந்துார்பேட்டை தீயணைப்புத் துறையினர், இரு பஸ்களின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். அதனைத் தொடர்ந்து வாகனப் போக்குவரத்தை மாற்றி அமைத்து விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் மூலம் சாலையோரம் அப்புறப்படுத்தி வாகன போக்குவரத்தை சீரமைத்தனர்.இந்த விபத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.இதுகுறித்து எடைக்கல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

மொபைல்போன் பேசியதால் வினைபொங்கல் பண்டிகையையொட்டி அறந்தாங்கியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட சிறப்பு அரசு பஸ்சை துறையூரைச் சேர்ந்த டிரைவர் கோவிந்தராஜ் ஓட்டினார். இவர், மொபைல்போனில் பேசிக்கொண்டே பஸ்சை இயக்கியுள்ளார். பின்னால் வந்த கார் டிரைவர், ஹாரன் எழுப்பியும் காது கேட்காமல் டிரைவர் தனது போக்கிலேயே சென்றுள்ளார். போன் பேசாமல் சென்றிருந்தால் ஹாரன் சத்தம் கேட்டு காருக்கு வழி விட்டு ஒதுங்கியிருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

ஆவேசத்தால் வந்த விளைவுபொங்கல் பண்டிகை முடிந்து தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் வாகனங்கள் வந்தன. இதை பொருட்படுத்தாமல், அரசு பஸ் கார் மீது உரசியதால் ஆவேசமடைந்து, சாலையிலேயே அரசு பஸ்சை முந்திச் சென்று காரை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவே விபத்துக்கு முழு காரணமாக அமைந்தது. அரசு வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தால் 4 பேர் உயிரிழப்பையும், 22 பேர் காயமடைந்ததையும் தவிர்த்திருக்கலாம். ஆவேசத்தால் வந்த முடிவின் விளைவுதான் இந்த கோர விபத்து.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement