Advertisement

காளையர்களை தெறிக்க விட்ட காளைகள்

சின்னமனுார் : அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் 'போக்கு'காட்டிய காளைகளின் உரிமையாளர்கள் பரிசுகளை அள்ளி குவித்தனர்.
'களம்' கண்ட மாடுகள் முட்டியதில் ஒரு போலீஸ் உள்ளிட்ட 78 பேர் காயமடைந்தனர். அய்யம்பட்டி வல்லடிகார சுவாமி, ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. கலெக்டர் பல்லவி பல்தேவ் உறுதிமொழி வாசிக்க, வீரர்கள் உறுதி மொழியேற்றனர். கோயில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அதை வணங்கிய வீரர்கள் 'களம்' இறங்கி காளைகளை அடக்கினர்.

எஸ்.பி., சாய் சரண் தேஜஸ்வி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். கால்நடைத்துறை கோவை மண்டல இணை இயக்குநர் பெருமாள்சாமி விலங்குகள் நலவாரிய கண்காணிப்பாளராக பார்வையிட்டார். 630காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இவற்றை அடக்குவதற்கு 530வீரர்கள் களம் இறங்கினார்கள். பெரும்பாலான காளைகள், வீரர்களிடம் சிக்காமல் விளையாடின. அந்த காளைகளின் உரிமையாளர்கள் பரிசு மழையில் நனைந்தனர். சில இளைஞர்கள் 'தில்'லாக, காளைகளை அடக்கி பரிசு பெற்றனர்.

மாடு முட்டியதில் நிலஅபகரிப்பு பிரிவு ஏட்டு கருப்பசாமி உட்பட 78 பேர் காயமடைந்தனர். இவர்களின் 18 பேர் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். பங்கேற்க வந்த 560 வீரர்களில் 30 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். உயரம் குறைவான 3 மாடுகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.வியப்பு:பிரான்ஸை சேர்ந்த ஆய்வு மாணவர்கள் லியோ, ஜோசபின், ரெமி ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்திருந்தனர். ஜோசபின் கூறுகையில், 'டெல்லி பல்கலையில் ஆய்வு மாணவர்களாக உள்ளோம் ஜல்லிக் கட்டு போட்டியின் பாரம்பரியம் குறித்து உடன் படித்த மாணவர்கள் கூறியதை கேட்டு, நேரில் பார்க்க ஆர்வம் ஏற்பட்டது. காளைகளைஆக்ரோசமாக களத்தில் சந்திக்கும் இளைஞர்கள் வீரம் மெய்சிலிர்க்க வைக்கிறது,' என்றார்.

பரிசாக மாட்டு தீவன மூடைகள்: வாடிவாசல் வழியாக களத்திற்கு வரும் காளை உரிமையாளர்கள் அலைபேசி பயன்படுத்த தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால் அந்த விதிமுறை காற்றில் பறக்க விடப்பட்டது. பெரும்பாலான காளை உரிமையாளர்கள் தங்களது மாடு களத்தில் விளையாடியதை வீடியோ பதிவு செய்ய அலைபேசி பயன்படுத்தினார்கள். இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார், களத்தில் நீண்ட நேரம் நின்றிருந்த காளை உரிமையாளர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காளைகள் அவிழ்த்து விடப்பட்டதால் 'டென்ஷன்' ஆன டி.எஸ்.பி., ஈஸ்வரன், விழா கமிட்டியினரை 'மைக்'கில் வறுத்தெடுத்தார்.*வழக்கமான தங்ககாசு, சைக்களி, பீரோ, மின்மோட்டார், குக்கர், மிக்ஸி, கட்டிலுடன் இம்முறை மாட்டு தீவன மூடைகள் பரிசாக வழங்கப்பட்டது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement