Advertisement

சைக்கிளுக்கு வந்த திடீர் மவுசு! கோவையில் விற்பனை அதிகரிப்பு

Share
கோவை:கோவையில் உள்ள சைக்கிள் கடைகளில் கடந்த மாதம், 25-30 சதவீத அளவு விற்பனை அதிகரித்துள்ளது; ஊரடங்கு அமலில் இருப்பதால், பலரும் 'சைக்கிள் கிளப்'பில் இணைந்து வருகின்றனர்.ஜிம், விளையாட்டு மைதானங்கள் மூடப்பட்டுள்ளதால், உடலை 'பிட்' ஆக வைத்துக்கொள்ள, சைக்கிள் ஓட்டுவதை பலரும் பழக்கமாக்கி வருகின்றனர். கோவையில் இதன் விற்பனை, கணிசமாக அதிகரித்து வருவதாக, கூறுகின்றனர் விற்பனையாளர்கள்.
இதுகுறித்து, விற்பனையாளர்கள் சிலர் கூறியதாவது:கடந்தாண்டு ஜூன் மாதம், பத்து லட்சம் ரூபாய்க்கு சைக்கிள் விற்பனையானது. நடப்பாண்டு ஜூன் மாதம், 17-18 லட்சம் ரூபாய் அளவுக்கு விற்பனை செய்துள்ளனர்.பொது போக்குவரத்து தடைபட்டுள்ளது காரணமாக இருக்கலாம். கொரோனா தொற்று காரணமாக, தனியார் வாகனங்களில் பயணிப்பதை, பாதுகாப்பு இல்லை என, சிலர் கருதுகின்றனர்.தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய சூழல் உள்ளதால், ஜிம், நீச்சல் குளம், விளையாட்டு மைதானங்களுக்கு, செல்ல முடியவில்லை. இதனால், சைக்கிள் ஓட்டுவது மாற்று உடற்பயிற்சியாக இருப்பதும், விற்பனை அதிகரிக்க ஒரு காரணமாக உள்ளது.
கடந்த மாதம், 25-30 சதவீத அளவு விற்பனை அதிகரித்துள்ளது.சைக்கிளுக்கான உதிரிபாகங்களை தருவிப்பதில் சிரமம் உள்ளதால், உற்பத்தி குறைந்து வருகிறது. வேலைக்கு ஆட்கள் இல்லாதது, கனரக வாகனங்களுக்கான தடை போன்ற காரணங்களால், சைக்கிள் உற்பத்தி குறைந்துள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
'சைக்கிளிங் சிறந்த உடற்பயிற்சி'கோவை 'அதலெட்டிக் கிளப்' துணை தலைவர் ரமேஷ் கூறுகையில், ''கடந்த ஒரு மாதமாக சைக்கிள் கிளப்புகளில், இணையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சைக்கிள் ஓட்டுவது உடற்பயிற்சி என்பது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் உகந்தது என்பது குறித்த விழிப்புணர்வு, மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளததே காரணம்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement