dinamalar telegram
Advertisement

போலி டாக்டர்களால், பிழைத்த போலீசார் புலம்பல்!

Share
Tamil News
''கொரோனா தடுப்பு பணியிலயும், கமிஷன்ல கறாரா இருக்கா ஓய்...'' என, நாயர் கடையில், அரட்டையை ஆரம்பித்தார், குப்பண்ணா.

''எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''கொரோனா தொற்றுல பாதிக்கப்பட்டவாளுக்கு, சென்னையில தனி மருத்துவமனையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்ல இருக்கற, அரசு மருத்துவமனைகள்ல சிறப்பு வார்டுகளையும் அமைச்சிருக்காளோல்லியோ... ''இந்தப் பணிகளுக்காக, அரசாங்கம் பல கோடி ரூபாயை செலவு பண்ணியிருக்கு ஓய்...

''பொதுப்பணித் துறை மூலமா கான்ட்ராக்ட் விட்டு தான், இந்தப் பணிகளை செய்திருக்கா... கான்ட்ராக்ட் எடுத்தவாளும், ராப்பகலா கஷ்டப்பட்டு, பணிகளை முடிச்சு குடுத்திருக்கா ஓய்...

''அவாளிடம், பொதுப்பணித் துறை அதிகாரிகள், 5 சதவீதம் கமிஷன் கேட்டப்ப, 'கடும் நெருக்கடிக்கு மத்தியில, கஷ்டப்பட்டு வேலை பார்க்கறோம்... கமிஷனை கம்மி பண்ணப்படாதா'ன்னு கான்ட்ராக்டர்கள் கேட்டிருக்கா ஓய்...

''அதுக்கு, 'மேல, 25 சதவீதம் வரை குடுத்து தானே வேலையை எடுத்தேள்... அங்க எதுவும் பேசாம, எங்க மடியில கை வச்சா என்ன அர்த்தம்'னு கேட்டு, ௫ சதவீதத்தை கறாரா வசூல் பண்ணிண்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''போற ஊருல எல்லாம் பிரச்னை தானாம்...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய, அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''சாத்தான்குளம் சம்பவத்துல கம்பி எண்ணிட்டு இருக்கிற, 'சஸ்பெண்ட்' இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு, நாலு மாசத்துல, டி.எஸ்.பி., 'புரமோஷன்' வர இருந்துச்சு... அதுக்குள்ள கொலை வழக்குல சிக்கிட்டாரு வே...

''போன வருஷம், லோக்சபா தேர்தலப்ப, துாத்துக்குடி மாவட்டத்துல இருந்த ஸ்ரீதரை, மதுரை தெப்பக்குளம் குற்றப்பிரிவுக்கு மாத்துனாவ... ''தேர்தல் முடிஞ்சு பழைய இடத்துக்கு போயிடலாம்கிறதால, குற்ற வழக்குகளை கண்டுபிடிக்கிறதுல ஆர்வமே காட்டாம இருந்திருக்காரு வே...''அதோட, தெப்பக்குளம் சட்டம் - ஒழுங்கு போலீசாரை முறைச்சு இருக்காரு...

''அப்ப இருந்த கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், ஸ்ரீதரைக் கூப்பிட்டு, எச்சரிக்கை பண்ணியிருக்காரு... இதனால, தேர்தல் முடிஞ்சதும், துாத்துக்குடிக்கே மாறுதல் வாங்கிட்டு ஓடிட்டாரு வே...'' என்றார், அண்ணாச்சி.

''போலி டாக்டர்களால வருமானம் போயிட்டேன்னு புலம்புறாங்க பா...'' என, கடைசி தகவலுக்கு தாவினார் அன்வர்பாய்.

''புலம்பறது யார் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''ராணிப்பேட்டை மாவட்டத்துல, நுாத்துக்கணக்கான போலி டாக்டர்கள், பல வருஷங்களா, 'தொழில்' பண்ணிட்டு இருக்காங்க... ''வீட்டுல வைத்தியம் பார்த்தா, 30 ஆயிரம், கிளினிக் நடத்துனா, 1 லட்சம், கொரோனா சிகிச்சை குடுத்தா, 1.50 லட்சம் ரூபாய்னு, உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு, மாசா மாசம் மாமூல் குடுத்துட்டு இருந்தாங்க பா...'

'போன வாரம், சுகாதாரத் துறையினர் அதிரடி நடவடிக்கையில இறங்கி, 23 போலி டாக்டர்களை கைது பண்ணி, 37 கிளினிக்குகளுக்கு, 'சீல்' வச்சுட்டாங்க... ''கைதான போலி டாக்டர்கள் மீது, குண்டர் சட்டம் பாய இருக்கிறதால, மற்ற போலிகளும் கிளினிக்கை மூடி, 'எஸ்கேப்' ஆகிட்டாங்க... இதனால, வருமானம் போச்சேன்னு போலீசார் புலம்பிட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.அரட்டை முடிய, பெஞ்ச் மவுனித்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    படி அளந்த போலி டாக்டர்களின் கைது, பாவம் போலீசுக்கு பெரிய அடிதான்

Advertisement