dinamalar telegram
Advertisement

சாராயம் காய்ச்சும் மூலப்பொருட்கள் கடத்தப்படுவது தடுக்கப்படுமா?கல்வராயன்மலையில் கேமரா பொருத்த நடவடிக்கை தேவை

Share
Tamil News
தியாகதுருகம்-கல்வராயன் மலைக்கு கள்ளச்சாராயம் காய்ச்சும் மூலப்பொருட்கள் எடுத்துச் செல்வதைத் தடுக்க அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுப்பதோடு மலைக்குச் செல்லும் சாலையின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு எல்லையாக உள்ள கல்வராயன்மலை கள்ளச்சாராயம் காய்ச்சும் மையப் பகுதியாக உள்ளது. இளைஞர்களுக்கு அதிக பணம் கொடுத்து சாராயம் காய்ச்சும் பணிக்கு சில சமூக விரோத கும்பல் பயன்படுத்தி வருகிறது.வாகனங்கள் எளிதில் செல்ல முடியாத அடர்ந்த வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான மூலப் பொருளைக் கொண்டு செல்கின்றனர். அங்கு பெரிய பிளாஸ்டிக் பேரல்களில் சாராய ஊறல் வைத்து பின்னர் காய்ச்சி வடிக்கின்றனர்.சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் சில வகை மரப்பட்டை, கடுக்காய் தவிர்த்து மற்ற அனைத்து மூலப்பொருட்களும் கீழிருந்து வாகனங்கள் மூலம் மலைக்கு கடத்திச் செல்கின்றனர். இதற்கு போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சிலர் உடந்தையாக உள்ளனர்.வெல்லம், போதை அதிகரிக்க பயன்படுத்தும் சில வகை ரசாயன பொருட்கள், ஊறல் போடும் பேரல், காச்சிய சாராயத்தைக் கடத்திச் செல்ல பயன்படுத்தும் ரப்பர் டியூப் ஆகிய அனைத்தும் கீழிருந்து மலைக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.எந்த நேரத்தில் சென்றால் அதிகாரிகள் கெடுபிடி குறைவாக இருக்கும் என்பதை சொல்வதற்கு அரசு ஊழியர்கள் சிலர் சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாக இருக்கின்றனர். அவர்கள் குறிப்பிடும் நேரத்தில் மூலப்பொருட்களை மலைக்கு கடத்திச் செல்கின்றனர்.காய்ச்சிய சாராயத்தை ரப்பர் டியூப்களில் நிரப்பி தலைச்சுமையாக மலைப்பாதை வழியாக கீழே இறக்கி இரு சக்கர வாகனங்கள் மூலம் பல்வேறு ஊர்களுக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக பெரிய நெட்வொர்க் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.சில நேர்மையான அதிகாரிகள் பதவியேற்கும் தருணங்களில் மட்டும் அதிக அளவில் சாராய ஊறலை மட்டுமே அழிக்க முடிகிறது. கணக்கு காட்ட சில அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர்.இதற்கு மூளையாக செயல்படுபவர்களை போலீசார் நெருங்க முடிவதில்லை. அவர்களுக்கு சில அரசியல்வாதிகளும் பக்கபலமாக செயல்படுகின்றனர்.இதனால், கல்வராயன்மலையில் அழிக்கமுடியாத சமூக விரோத தொழிலாக கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழில் கொடி கட்டி பறக்கிறது. கடந்த ஒரு சில மாதங்களில் மட்டும் 50 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.ஆனால், சாராயம் காய்ச்சும் மூலப்பொருள் கொண்டு செல்வதை அவர்கள் தடுத்ததாக தெரியவில்லை.கள்ளச்சாராயம் மட்டுமின்றி கஞ்சா, மரம் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களும் கல்வராயன் மலையில் கனஜோராக நடக்கிறது.அப்பாவி ஏழை மக்களின் உயிருக்கு உலை வைக்கும் சாராயம் காய்ச்சும் தொழிலைத் தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மலைக்குச் செல்லும் சாலைகள் அனைத்தும் உயர் அதிகாரிகளின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்து முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.வாகனங்கள் அனைத்தும் முழுமையான சோதனைக்குட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்க வேண்டும். மூலப்பொருட்கள் மலைக்கு எடுத்துச் செல்வதை தடுக்காமல் சாராயம் காய்ச்சும் தொழிலைக் கட்டுப்படுத்த முடியாது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • duruvasar - indraprastham,இந்தியா

    வி ஐ பி தொகுதி. அதிகாரிகள் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

Advertisement