மதுரை : மதுரை மாவட்ட அரசு பள்ளிகளில் கணக்கெடுக்கப்பட்ட அபாயக் கட்டடங்களை உரிய நேரத்தில் இடித்து அகற்றாமல் பொதுப்பணித்துறை இழுத்தடிக்கிறது.
மழை மற்றும் இயற்கை சீற்றம் நேரங்களில் ஏற்படும் ஆபத்தை தடுக்க கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் உறுதி தன்மையற்ற அபாய கட்டடங்கள் குறித்த ஒவ்வொரு ஆண்டும் கணக்கெடுக்கப்படும். இதில் கண்டறியப்படும் அபாய கட்டடங்களை டி.ஆர்.டி.ஏ., (தொடக்க பள்ளிகள்) மற்றும் பி.டபுள்யூ.டி., (உயர், மேல்நிலை பள்ளிகள்) பொறுப்பு.
மாவட்டத்தில் கடந்தாண்டு வரை 193 தொடக்க பள்ளிகளில் 332 கட்டடங்களும், 121 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 242 கட்டடங்களும் அபாயகரமானவை என பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் நிதி ஒதுக்கீடு இல்லை என அபாயக் கட்டடங்கள் இடிக்கப்படாமலேயே உள்ளன.
வடகிழக்கு பருவமழையும் தீவிரமடைந்துள்ளதால் இந்தாண்டும் கல்வித்துறை சமக்ர சிக் ஷா அபியான் திட்ட பொறியாளர் குழு அரசு பள்ளிகளில் ஆய்வு செய்து 50க்கும் மேற்பட்ட அபாயக் கட்டடங்களை கண்டறிந்துள்ளது.
கல்வித்துறை பொறியாளர் ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் இடிக்க வேண்டிய கட்டடப் பட்டியலை பொதுப்பணித்துறையிடம் கொடுக்கிறோம். ஆனால் உரிய நேரத்தில் இடிப்பதில்லை. இடிக்கும் பொறுப்பை அந்தந்த பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்திடம் ஒப்படைத்திருந்தால் கூட கணிசமான கட்டடங்கள் இடிக்கப்பட்டிருக்கும்.
இந்தாண்டு கொரோனாவால் பல மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதிக மழையும் பெய்துள்ளது. ஆபத்தை உணர்ந்து இந்தாண்டாவது அபாய கட்டங்களை இடிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றார்.