dinamalar telegram
Advertisement

கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: பேட்டிங், பவுலிங்கில் ஏமாற்றம்

Share

கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2வது 'டுவென்டி-20' போட்டியில் பேட்டிங், பவுலிங்கில் ஏமாற்றிய இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இந்திய வீரர் குர்னால் பாண்ட்யாவுக்கு கொரோனா உறுதியானதால் ஒத்திவைக்கப்பட்ட 2வது போட்டி, கொழும்புவில் நடந்தது. இந்திய அணியில் தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், நிதிஷ் ராணா, சேட்டன் சக்காரியா என, 4 பேர் அறிமுகமாகினர். 'டாஸ்' வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனகா 'பீல்டிங்' தேர்வு செய்தார்.



நல்ல துவக்கம்: இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், கேப்டன் ஷிகர் தவான் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. அகிலா தனஞ்செயா வீசிய 3வது ஓவரில் தனது முதல் சர்வதேச பவுண்டரி அடித்தார் ருதுராஜ். இந்த ஓவரில் தவானும் தன்பங்கிற்கு ஒரு பவுண்டரி அடிக்க, 12 ரன் கிடைத்தது. 'பவர் பிளே' ஓவரின் (1-6) முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 45 ரன் எடுத்திருந்தது. முதல் விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்த போது ஷனகா பந்தில் ருதுராஜ் (21) அவுட்டானார்.



தவான் ஆறுதல்: அடுத்து வந்த தேவ்தத் படிக்கல், தனஞ்செயா டி சில்வா பந்தில் ஒரு சிக்சர் விளாசினார். மெண்டிஸ், ஷனகா பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த தவான் (40), அகிலா தனஞ்செயா 'சுழலில்' போல்டானார். ஹசரங்கா வீசிய 16வது ஓவரின் 2வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய தேவ்தத் படிக்கல் (29), அடுத்த பந்தில் போல்டானார். இலங்கை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர். அகிலா தனஞ்செயா பந்தில் சஞ்சு சாம்சன் (7) வெளியேறினார். பின் இணைந்த நிதிஷ் ராணா, புவனேஷ்வர் குமார் ஜோடி ஒன்று, இரண்டாக ரன் சேர்த்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 26 ரன் சேர்த்த போது சமீரா 'வேகத்தில்' நிதிஷ் ராணா (9) அவுட்டானார்.



இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 132 ரன் எடுத்தது. புவனேஷ்வர் (13), நவ்தீப் சைனி (1) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் அகிலா தனஞ்செயா 2 விக்கெட் வீழ்த்தினார்.



டி சில்வா நம்பிக்கை: சுலப இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு அவிஷ்கா பெர்ணான்டோ (11) சுமாரான துவக்கம் தந்தார். சதீரா சமரவிக்ரமா (8), கேப்டன் தசுன் ஷனகா (3) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய மினோத் பானுகா (36), குல்தீப் 'சுழலில்' சிக்கினார். ஹசரங்கா (15), மெண்டிஸ் (2) விரைவில் அவுட்டாகினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டன. சக்காரியா வீசிய 20வது ஓவரின் முதல் 4 பந்தில் 8 ரன் கிடைத்தது.

இலங்கை அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தனஞ்செயா டி சில்வா (40), சமிகா கருணாரத்னே (12) அவுட்டாகாமல் இருந்தனர். இதனையடுத்து தொடர் 1-1 என, சமநிலை அடைந்தது. மூன்றாவது போட்டி கொழும்புவில் இன்று (ஜூலை 29) நடக்கிறது.





குர்னால் விலகல்

இந்திய 'ஆல்-ரவுண்டர்' குர்னால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இலங்கைக்கு எதிரான மீதமுள்ள 2 'டுவென்டி-20' போட்டிகளில் இருந்து விலகினார். இவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 8 பேருக்கு எடுக்கப்பட்ட 'ஆர்.டி.,-பி.சி.ஆர்.,' பரிசோதனையின் முடிவு 'நெகடிவ்' என்று வந்த போதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2வது போட்டிக்கு தேர்வு செய்யப்படவில்லை. பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாததால், இந்திய அணி 5 பேட்ஸ்மேன்களுடன் விளையாடியது. இதனால் முதலில் 'பேட்' செய்த இந்திய அணியால் வலுவான ஸ்கோரை எட்ட முடியவில்லை. இது தோல்விக்கு வித்திட்டது.



Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement