மஸ்கட்: ஆசிய கோப்பை பெண்களுக்கான ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி 9-0 என மலேசியாவை வீழ்த்தியது.
ஓமனின் மஸ்கட்டில் பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் 10 வது சீசன் நடக்கிறது. இந்தியா, சீனா, தென் கொரியா உட்பட 8 அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் இந்திய அணி 'ஏ' பிரிவில் ஜப்பான், சிங்கப்பூர், மலேசியாவுடன் இடம் பெற்றுள்ளது.
தனது முதல் போட்டியில் மலேசியாவை சந்தித்தது. இதில் துவக்கத்தில் இருந்தே இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். 8 வது நிமிடத்தில் வந்தனா ஒரு கோல் அடிக்க, 10, 15 வது நிமிடங்களில் எக்கா, சுஷிலா தலா ஒரு கோல் அடித்தனர். தொடர்ந்து அசத்திய சுஷிலா 27 வது நிமிடம் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் இந்திய அணி 4-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியிலும் மிரட்டிய இந்திய அணிக்கு வந்தனா (35வது) 2வது கோல் அடித்தார். லால்ரெம்சியாமி (38), மோனிகா (40) அடுத்தடுத்து கோல் அடித்து கலக்கினர். போட்டியின் 46 வது நிமிடம் கோல் அடித்த ஷர்மிளா, ஆட்டத்தின் கடைசி நிமிடத்துக்கு முன் மற்றொரு கோல் (59வது) அடித்தார். மலேசிய தரப்பில் ஒருவரும் கோல் அடிக்கவில்லை.
முடிவில் இந்திய அணி 9-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று தனது இரண்டாவது போட்டியில் ஜப்பானை சந்திக்கவுள்ளது.
மலேசியாவை வென்றது இந்தியா * ஆசிய பெண்கள் ஹாக்கியில் அசத்தல்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!