dinamalar telegram
Advertisement

எழுச்சி பெறுமா இந்தியா * இன்று மூன்றாவது மோதல்

Share

கேப்டவுன்: இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் மூன்றாவது, கடைசி ஒருநாள் போட்டி இன்று கேப்டவுனில் நடக்கிறது. இந்திய வீரர்கள் எழுச்சி பெற்றால் ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பலாம்.தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் தோற்ற இந்திய அணி 0-2 என தொடரை இழந்தது. இன்று இரு அணிகள் மோதும் மூன்றாவது, கடைசி போட்டி கேப்வுனில் நடக்கிறது.

தேறாத ராகுல்

இந்திய அணி கேப்டனாக செயல்படும் லோகேஷ் ராகுல், 2வது போட்டியில் 55 ரன் எடுத்து உதவினார். மறுபக்கம் தவான் (28), கோஹ்லி (0) சறுக்கினர். ரிஷாப் பன்ட் மீண்டு வந்தாலும், மறுபடியும் 'மிடில் ஆர்டர்' இந்திய அணியை கைவிட்டது. இதனால் ஸ்ரேயாஸ் (11), வெங்கடேஷ் (22) அடுத்தடுத்து அவுட்டானதால், இந்திய அணி இமாலய ஸ்கோரை எட்ட முடியாமல் போனது.

பவுலிங்கில் வழக்கம் போல புவனேஷ்வர், ஷர்துல் தாகூர் ரன்களை வாரி வழங்கினர். அஷ்வினும் ஏமாற்றம் தருகிறார். தென் ஆப்ரிக்க தொடரில் இதுவரை 4 விக்கெட் தான் (3 டெஸ்டில் 3, 1 ஒருநாள் போட்டியில் 1) வீழ்த்தியுள்ளார். பும்ரா மட்டும் ஆறுதல் தருகிறார்.

முதல் போட்டியில் நடந்த அதே தவறுகள் மறுபடியும் நடந்தன. கேப்டன் ராகுல் அணியில் மாற்றம் செய்யாமல் களமிறங்கியதால், இந்திய அணி தொடரை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்று சூர்யகுமார், ருதுராஜ், பந்துவீச்சில் முகமது சிராஜ், தீபக் சகார் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கொடுத்து ஆறுதல் வெற்றிக்கு முயற்சித்தால் நல்லது.

வெற்றி நம்பிக்கை

டெஸ்ட் தொடரை எதிர்பார்க்காமல் கைப்பற்றிய உற்சாகத்தில் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, ஒருநாள் தொடரையும் வென்று விட்டது. கேப்டன் பவுமா, வான்டெர் துசெனுடன் இணைந்து, துவக்க ஜோடி மலான், குயின்டன் டி காக் என பலரும் ரன் மழை பொழிகின்றனர். பந்து வீச்சில் லுங்கிடி, பெலுக்வாயோ, ஷம்சி, கேஷவ் மஹராஜுடன், 'பார்ட் டைம்' பவுலர் மார்க்ரமும் தொல்லை தருகிறார்.



35

இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் 86 ஒருநாள் போட்டிகளில் மோதின. இதில் இந்தியா 35, தென் ஆப்ரிக்கா 48ல் வெற்றி பெற்றது. 3 போட்டிகளுக்கு முடிவில்லை.* தென் ஆப்ரிக்க மண்ணில் மோதிய 35 போட்டிகளில் இந்தியா 9, தென் ஆப்ரிக்கா 23ல் வென்றன. 3 போட்டிகளுக்கு முடிவு இல்லை.



அபராதம்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியினர் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் ஒரு ஓவர் குறைவாக பந்து வீசியிருந்தனர். கேப்டன் பவுமா தவறை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து விசாரணை எதுவுமின்றி, தென் ஆப்ரிக்க அணியினருக்கான போட்டி சம்பளத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement