படோர்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் அசத்திய சென்னை அணி 2-1 என, வடகிழக்கு அணியை வீழ்த்தியது.
கோவாவில், இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து எட்டாவது சீசன் நடக்கிறது. படோர்டாவில் நடந்த லீக் போட்டியில் சென்னை, வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதின. ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் வடகிழக்கு அணிக்கு கிடைத்த 'கார்னர்' வாய்ப்பில் பேட்ரிக் பிளோட்மன் துாக்கி அடித்த பந்தில் லால்தன்மாவியா ரால்தே ஒரு கோல் அடித்தார். இதற்கு சென்னை அணியினரால் பதிலடி தர முடியவில்லை. முதல் பாதி முடிவில் வடகிழக்கு அணி 1-0 என, முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட சென்னை அணிக்கு 52வது நிமிடத்தில் சென்னை அணியின் ரஹீம் அலி 'பாஸ்' செய்த பந்தில் ஏரியல் போரிசியுக் ஒரு கோல் அடித்தார். பின், சென்னை அணிக்கு 58வது நிமிடத்தில் கிடைத்த 'பிரீ கிக்' வாய்ப்பில் விளாடிமிர் கோமன் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். தொடர்ந்து போராடிய வடகிழக்கு அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் சென்னை அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
சென்னை அணி, 12 போட்டியில், 5 வெற்றி, 3 'டிரா', 4 தோல்வி என, 18 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியது. எட்டாவது தோல்வியை பெற்ற வடகிழக்கு அணி (9 புள்ளி), 11வது இடத்தில் உள்ளது.
சென்னை அணிக்கு 5வது வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் அசத்தல்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!