அல் அமெராத்: 'லெஜண்ட்ஸ்' கிரிக்கெட் லீக் போட்டியில் அசத்திய ஆசிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் உலக அணியை வீழ்த்தியது.
ஓமனில், ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் 'லெஜண்ட்ஸ்' லீக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இந்திய மஹராஜாஸ், ஆசிய லயன்ஸ், உலக ஜெயிண்ட்ஸ் என மூன்று அணிகள் பங்கேற்கின்றன. அல் அமெராத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் ஆசியா, உலக அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆசிய அணி கேப்டன் மிஸ்பா, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
உலக அணிக்கு கெவின் பீட்டர்சன் (14), கோரி ஆண்டர்சன் (18), கேப்டன் டேரன் சமி (8) உள்ளிட்டோர் ஏமாற்றினர். அபாரமாக ஆடிய கெவின் ஓபிரையன் 46 பந்தில், 7 சிக்சர், 7 பவுண்டரி உட்பட 95 ரன் விளாசினார். உலக அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 205 ரன் எடுத்தது. ஆசிய அணி சார்பில் நுவன் குலசேகரா, முகமது ஹபீஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சவாலான இலக்கை விரட்டிய ஆசிய அணிக்கு கம்ரான் அக்மல் (14) ஏமாற்றினார். பின் இணைந்த தில்ஷன் (52), உபுல் தரங்கா (63) கைகொடுத்தனர். முகமது ஹபீஸ் (27) ஆறுதல் தர, ஆசிய அணி 19.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை கெவின் ஓபிரையன் வென்றார்.
ஆசிய அணி அபாரம்: 'லெஜண்ட்ஸ்' லீக் கிரிக்கெட்டில்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!