சாட்டோகிராம்: தமிம் இக்பால் சதம் விளாச, முதல் டெஸ்ட் முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 3 விக்கெட்டுக்கு 318 ரன் குவித்தது.
வங்கதேசம் சென்றுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சாட்டோகிராமில் நடக்கிறது.
முதல் இன்னிங்சில் இலங்கை அணி 397 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 76 ரன் எடுத்து, 321 ரன் பின்தங்கி இருந்தது.
தமிம் அபாரம்
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த வங்கதேச அணியின் மகமதுல் அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 162 ரன் சேர்த்த போது, மகமதுல் (58) அவுட்டானார். நஜ்முல் ஹொசைன் 1 ரன்னுக்கு அவுட்டானார்.
கேப்டன் மோமினுல் ஹக், 2 ரன் மட்டும் எடுத்த நிலையில் ரஜிதா 'வேகத்தில்' சிக்கினார்.
தமிம் இக்பால் 10வது சதம் விளாசினார். இவர் 133 ரன் எடுத்திருந்த போது, தசைப் பிடிப்பு காரணமாக 'ரிட்டையர்டு ஹர்ட்' முறையில் திரும்பினார்.
இரண்டு அரைசதம்
அடுத்து இணைந்த அனுபவ முஷ்பிகுர் ரகிம், லிட்டன் தாஸ் என இருவரும் அரைசதம் கடந்தனர். மூன்றாவது நாள் முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 318 ரன் எடுத்து, 79 ரன் மட்டும் பின்தங்கி இருந்தது. முஷ்பிகுர் (53), லிட்டன் தாஸ் (54) அவுட்டாகாமல் இருந்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!