நவி மும்பை: பரபரப்பான 'டி-20' கிரிக்கெட் லீக் போட்டியில் அசத்திய லக்னோ அணி 2 ரன் வித்தியாசத்தில் கடைசி பந்தில் 'திரில்' வெற்றி பெற்றது. ஒன்பது வெற்றிகளுடன் 'பிளே-ஆப்' சுற்றுக்கான இடத்தை உறுதி செய்தது. கோல்கட்டா அணி பரிதாபமாக வெளியேறியது.
நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடந்த 15வது 'டி-20' கிரிக்கெட் லீக் போட்டியில் லக்னோ, கோல்கட்டா அணிகள் மோதின. லக்னோ அணியில் குர்னால் பாண்ட்யா (காயம்), துஷ்மந்தா சமீரா, ஆயுஷ் படோனி நீக்கப்பட்டு மனன் வோரா, எவின் லீவிஸ், கிருஷ்ணப்பா கவுதம் சேர்க்கப்பட்டனர். கோல்கட்டா அணியில் காயத்தால் விலகிய அஜின்கியா ரகானேவுக்கு பதிலாக அபிஜீத் தோமர் தேர்வானார். 'டாஸ்' வென்ற லக்னோ அணி கேப்டன் ராகுல், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்: லக்னோ அணிக்கு குயின்டன் டி காக், கேப்டன் லோகேஷ் ராகுல் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. உமேஷ் யாதவ், டிம் சவுத்தீ பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த குயின்டன், 13 ரன் எடுத்திருந்த போது அபிஜீத் தயவில் தப்பினார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இவர், உமேஷ் பந்தில் ஒரு சிக்சர் விளாசினார்.
ராகுல் அரைசதம்: உமேஷ் வீசிய 5வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ராகுல், சவுத்தீ வீசிய 10வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் பறக்கவிட்டார். அபாரமாக ஆடிய குயின்டன், 36 பந்தில் அரைசதம் எட்டினார். மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த ராகுல், தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். சுனில் நரைன் வீசிய அடுத்தடுத்த ஓவரில் தலா ஒரு சிக்சர் அடித்த குயின்டன், வருண் சக்ரவர்த்தி வீசிய 16வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாச, 18 ரன் கிடைத்தன.
குயின்டன் விளாசல்: இவர்களை பிரிக்க கோல்கட்டா பவுலர்கள் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. ரசல் வீசிய 18வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த குயின்டன், ஐ.பி.எல்., அரங்கில் தனது 2வது சதம் கடந்தார். சவுத்தீ வீசிய 19வது ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் பறக்கவிட்ட குயின்டன், ரசல் வீசிய கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 4 பவுண்டரி விளாசினார்.
லக்னோ அணி 20 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 210 ரன் எடுத்தது. குயின்டன் (140 ரன், 10 சிக்சர், 10 பவுண்டரி), ராகுல் (68 ரன், 4 சிக்சர், 3 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஸ்ரேயாஸ் அபாரம்: சவாலான இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு வெங்கடேஷ் ஐயர் (0), அபிஜீத் தோமர் (4) ஜோடி ஏமாற்றியது. நிதிஷ் ராணா (42), கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (50), சாம் பில்லிங்ஸ் (36) நம்பிக்கை தந்தனர். ரசல் (5) நிலைக்கவில்லை.
'திரில்' வெற்றி: பின் இணைந்த ரிங்கு சிங், சுனில் நரைன் ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. கடைசி ஓவரில் கோல்கட்டாவின் வெற்றிக்கு 21 ரன் தேவைப்பட்டன. ஸ்டாய்னிஸ் வீசிய 20வது ஓவரில் முதல் 4 பந்தில், ஒரு பவுண்டரி, 2 சிக்சர் உட்பட 18 ரன் எடுத்த ரிங்கு (40), 5வது பந்தில் அவுட்டானார். கடைசி பந்தில் உமேஷ் (0) போல்டானார்.
கோல்கட்டா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 208 ரன் எடுத்து அதிர்ச்சி தோல்வியடைந்தது. நரைன் (21) அவுட்டாகாமல் இருந்தார். லக்னோ சார்பில் மொசின் கான், ஸ்டாய்னிஸ் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
ஐந்து முறை
அபாரமாக ஆடிய லக்னோ அணி கேப்டன் லோகேஷ் ராகுல், இந்த சீசனில் 500 ரன்னை எட்டினார். இவர், 14 போட்டியில், 2 சதம், 3 அரைசதம் உட்பட 537 ரன் எடுத்துள்ளார். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் அதிக முறை, ஒரு சீசனில் 500 அல்லது அதற்கு மேல் ரன் சேர்த்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை விராத் கோஹ்லி, ஷிகர் தவானுடன் பகிர்ந்து கொண்டார். இவர்கள் மூவரும் தலா 5 முறை இப்படி ரன் குவித்திருந்தனர். முதலிடத்தில் டேவிட் வார்னர் (6 முறை) உள்ளார்.
* தவிர, தொடர்ச்சியாக 5 முறை, ஒரு சீசனில் 500 அல்லது அதற்கு மேல் ரன் குவித்த 2வது வீரரானார் ராகுல் (2018-2022). ஏற்கனவே வார்னர் (2017-2022), தொடர்ச்சியாக 6 முறை இப்படி ரன் சேர்த்துள்ளார்.
இரண்டாவது சதம்
பேட்டிங்கில் அசத்திய லக்னோ அணியின் குயின்டன் டி காக் (140* ரன்), ஐ.பி.எல்., அரங்கில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். இதற்கு முன், 2016ல் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் டில்லி அணிக்காக விளையாடிய போது 108 ரன் எடுத்திருந்தார்.
210 ரன்
ரன் மழை பொழிந்த லக்னோ அணியின் குயின்டன் டி காக்-லோகேஷ் ராகுல் ஜோடி (210* ரன்), ஐ.பி.எல்., அரங்கில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த ஜோடியானது. இதற்கு முன், 2019ல் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணியின் பேர்ஸ்டோவ், வார்னர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 185 ரன் சேர்த்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.
* எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன் சேர்த்த ஜோடி வரிசையில் 3வது இடம் பிடித்தது. முதலிரண்டு இடங்களை பெங்களூருவின் கோஹ்லி-டிவிலியர்ஸ் ஜோடி (229 ரன், எதிர்: குஜராத், 2016 மற்றும் 215* ரன், எதிர்: மும்பை 2015) தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது.
* கோல்கட்டாவுக்கு எதிராக எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன் எடுத்த ஜோடியானது. இதற்கு முன், 2012ல் மும்பையின் ரோகித் சர்மா-கிப்ஸ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 167 ரன் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.
முதன்முறை
லக்னோ அணி 20 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 210 ரன் எடுத்தது. இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் முதன்முறையாக, முதலில் 'பேட்' செய்த அணி விக்கெட் இழப்பின்றி கடைசி ஓவர் வரை விளையாடியது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!