Load Image
dinamalar telegram
Advertisement

புஜாரா மீண்டும் சதம்: இங்கிலாந்து மண்ணில் அபாரம்

ஹோவ்: ராயல் லண்டன் கோப்பை லீக் போட்டியில் அசத்திய இந்தியாவின் புஜாரா, மீண்டும் சதம் விளாசினார்.

இங்கிலாந்தில், ராயல் லண்டன் கோப்பை ஒருநாள் தொடர் நடக்கிறது. ஹோவ் நகரில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் சசக்ஸ், சர்ரே அணிகள் மோதின. இதில் சசக்ஸ் அணி சார்பில் இந்திய டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்டர் புஜரா 34, கேப்டனாக களமிறங்கினார். 'டாஸ்' வென்ற சர்ரே அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.

பேட்டிங் வரிசையில் 4வது இடத்தில் களமிறங்கிய புஜாரா, சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். கானர் மெக்கெர் வீசிய 37வது ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்த இவர், 103 பந்தில் சதத்தை எட்டினார். இது, இத்தொடரில் இவர் அடித்த 2வது சதம். சமீபத்தில் பர்மிங்காமில் நடந்த வார்விக்சயர் அணிக்கு எதிரான போட்டியில் சதம் (107) விளாசினார்.

தொடர்ந்து அசத்திய புஜாரா, யூசெப் மஜித் வீசிய 42வது ஓவரில் தொடர்ச்சியாக 4 பவுண்டரி விரட்டினார். டாம் லாவ்ஸ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய இவர், 150 ரன்னை கடந்தார். அபாரமாக ஆடிய இவர், 131 பந்தில், 5 சிக்சர், 20 பவுண்டரி உட்பட 174 ரன் எடுத்து கைகொடுத்தார். சசக்ஸ் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 378 ரன் குவித்தது.

கடின இலக்கை விரட்டிய சர்ரே அணி 31.4 ஓவரில் 162 ரன்னுக்கு சுருண்டு, 216 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.



குர்னால் '3'

லீசெஸ்டரில் நடந்த லீசெஸ்டர்ஷயர் அணிக்கு எதிரான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் வார்விக்சயர் அணி சார்பில் விளையாடிய இந்திய சுழற்பந்துவீச்சு 'ஆல்-ரவுண்டர்' குர்னால் பாண்ட்யா, 10 ஓவரில், 69 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். சமீபத்தில் சசக்ஸ் அணிக்கு எதிராக சுழலில் அசத்திய இவர், 3 விக்கெட் (51 ரன், 10 ஓவர்) கைப்பற்றினார்.

* சாமர்சட் அணிக்கு எதிரான போட்டியில் மிடில்சக்ஸ் அணி சார்பில் பங்கேற்ற இந்திய வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், 10 ஓவரில், 58 ரன் விட்டுக் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இவர், இத்தொடரில் இதுவரை விளையாடிய 4 போட்டியில், 13 விக்கெட் சாய்த்துள்ளார்.

* நார்த்தாம்ப்டன்ஷயர் அணிக்கு எதிரான போட்டியில் கென்ட் அணி சார்பில் விளையாடிய நவ்தீப் சைனி, ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் 43 ரன் வழங்கினார்.



174 ரன்

அபாரமாக ஆடிய புஜாரா, 174 ரன் குவித்தார். இதன்மூலம் 'லிஸ்ட் ஏ' போட்டியில் ஒரு இன்னிங்சில் தனது அதிகபட்ச ரன்னை பதிவு செய்தார். இதற்கு முன், 2012ல் ராஜ்கோட்டில் நடந்த இந்தியா 'ஏ' அணிக்கு எதிரான சேலஞ்சர் டிராபி போட்டியில் இந்தியா 'பி' சார்பில் கேப்டனாக களமிறங்கிய புஜாரா, 126 பந்தில் 158 ரன் (2 சிக்சர், 16 பவுண்டரி) எடுத்தது அதிகபட்ச ரன்னாக இருந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement