Load Image
dinamalar telegram
Advertisement

சாதிப்பரா கோஹ்லி, பாண்ட்யா: ஆசிய கோப்பையில்

புதுடில்லி: ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவின் கோஹ்லி, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் சாதனை படைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில், 1984 முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதுவரை நடந்த 14 சீசனில், 13 முறை (1984, 86, 88, 90-91, 95, 97, 2000, 04, 08, 10, 12, 14, 18) 50 ஓவர் போட்டியாகவும், ஒரே ஒரு முறை (2016) 'டி-20' போட்டியாக நடத்தப்பட்டது.



இம்முறை ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), 15வது ஆசிய கோப்பை 'டி-20' போட்டியாக வரும் ஆக. 27 முதல் செப். 11 வரை நடத்தப்படுகிறது. இதில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவின் கோஹ்லி, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் சாதிக்கும் வாய்ப்பு உள்ளது.



கோஹ்லி நம்பிக்கை: இந்தியாவின் கோஹ்லி, ஆசிய கோப்பை ('டி-20') அரங்கில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில், ஒரு அரைசதம் உட்பட 153 ரன் எடுத்துள்ளார். அதிக ரன் எடுத்த பேட்டர்கள் வரிசையில் 3வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்களில் ஹாங்காங்கின் பாபர் ஹயாத் (194 ரன், 3 போட்டி), வங்கதேசத்தின் சபிர் ரஹ்மான் (176 ரன், 5 போட்டி), யு.ஏ.இ.,யின் முகமது உஸ்மான் (176 ரன், 7 போட்டி) உள்ளனர். சமீபகாலமாக 'பார்மின்றி' தவிக்கும் கோஹ்லி எழுச்சி பெறும் பட்சத்தில் இப்பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றி சாதனை படைக்கலாம்.



ஐந்து போட்டியில், 138 ரன் எடுத்து 7வது இடத்தில் உள்ள இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் இப்பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது.



பாண்ட்யா எதிர்பார்ப்பு: அதிக விக்கெட் ('டி-20') சாய்த்த பவுலர்களுக்கான பட்டியலில் யு.ஏ.இ.,யின் அம்ஜத் ஜாவத் (12 விக்கெட்) முதலிடத்தில் உள்ளார். இப்பட்டியலில் இந்திய 'ஆல்-ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா, 5 போட்டியில் 7 விக்கெட் வீழ்த்தி 6வது இடத்தில் உள்ளார். இவர், இம்முறை 'வேகத்தில்' மிரட்டும் பட்சத்தில் முதலிடத்தை கைப்பற்றலாம். இத்தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய 'சுழல்' வீரர்களான அஷ்வின் (4 விக்கெட்), ரவிந்திர ஜடேஜா (3 விக்கெட்) எழுச்சி கண்டால் இப்பட்டியலில் முன்னேற்றம் காணலாம்.



ரோகித் வாய்ப்பு: அதிக சிக்சர் ('டி-20') பறக்கவிட்ட வீரர்கள் வரிசையில் ஹாங்காங்கின் பாபர் ஹயாத் (8 சிக்சர்) முதலிடத்தில் உள்ளார். இந்தியா சார்பில் கேப்டன் ரோகித் சர்மா இதுவரை 4 சிக்சர் விளாசி உள்ளார். இவர் சிக்சர் மழை பொழிந்தால் இவ்வரிசையில் முதலிடத்தை கைப்பற்றலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement