Load Image
dinamalar telegram
Advertisement

தவானுக்கு கேப்டன் பதவி: முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல்

புதுடில்லி: ''ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக தவான் தொடர வேண்டும்,'' என, ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.



ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் (ஆக. 18, 20, 22, இடம்: ஹராரே) கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில், சமீபத்தில் முடிந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் 3-0 என வெற்றி தேடித்தந்த ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.



இந்நிலையில் காயம், கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்ட லோகேஷ் ராகுல், ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். தவிர இவர், கேப்டனாக நியமிக்கப்பட்டார். தவான் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இதற்கு முன்னாள் இந்திய வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், ''ஒருவேளை தேர்வுக்குழுவில் நான் இருந்திருந்தால் தவான் கேப்டனாக நீடித்திருப்பார். சீனியர் வீரரான இவருக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டதில் எவ்வித தவறும் இல்லை. அவர், ஒரு பேட்டராக செயல்படலாம். ஒருவரை கேப்டனாக அறிவித்துவிட்டு, உடனடியாக நீக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. என்னை பொறுத்தவரை ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியை தவான் வழிநடத்த வேண்டும்,'' என்றார்.



இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் சபா கரீம் கூறுகையில், ''ஜிம்பாப்வே தொடரில் லோகேஷ் ராகுல், ஒரு வீரராக பங்கேற்கலாம். தேவைப்பட்டால் இவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கி இருக்கலாம். தவிர இவர், நீண்ட இடைவெளிக்கு பின் அணிக்கு திரும்புகிறார். எனவே இத்தொடரில் சீனியர் வீரரான தவான் தலைமையில் இந்திய அணி விளையாட வேண்டும்,'' என்றார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement