Load Image
dinamalar telegram
Advertisement

துள்ளி எழுமா இளம் இந்தியா * இன்று ஒருநாள் தொடர் துவக்கம்

லக்னோ: இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் ஒருநாள் போட்டித் தொடர் இன்று துவங்குகிறது. ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணிக்கு இளம் வீரர்கள் கைகொடுக்க காத்திருக்கின்றனர்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று லக்னோவில் நடக்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான அணி, 'டி-20' உலக கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியா செல்கிறது. இதனால் ஒருநாள் தொடரில் இந்திய அணி 'சீனியர்' ஷிகர் தவான் தலைமையில் முற்றிலும் புது வீரர்களுடன் களமிறங்குகிறது.

சுப்மன் துவக்கம்

இந்திய அணிக்கு ஷிகர் தவானுடன் இணைந்து சுப்மன் கில் துவக்கம் தரவுள்ளார். 'மிடில் ஆர்டரில்' ஸ்ரேயாஸ் ஐயர், அறிமுக வீரர்கள் ராகுல் திரிபாதி, உள்ளூர் போட்டிகளில் அசத்திய ரஜத் படிதர் கைகொடுக்கலாம். தவிர ருதுராஜ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷானும் உள்ளிட்டோர் எழுச்சி பெற வாய்ப்புள்ளது.

பவுலிங் எப்படி

உலக கோப்பை அணியில் மாற்று வீரர்களாக இடம் பெற்ற தீபக் சகாருடன், அவேஷ் கான், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ் வேகப்பந்து வீச்சில் நம்பிக்கை தரலாம். புதுமுக வீரர் முகேஷும் வாய்ப்பை பயன்படுத்த காத்திருக்கிறார். சுழற்பந்து வீச்சில் ஷாபாஸ் அகமது, பிஷ்னோய், குல்தீப் யாதவ் விக்கெட் வேட்டைக்கு உதவலாம்.

அடுத்த ஆண்டு இந்திய மண்ணில் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இத்தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற முயற்சிக்கலாம். இதற்கான வாய்ப்பு இளம் வீரர்களுக்கு கிடைத்துள்ளது. எனினும் இது அவ்வளவு எளிதல்ல.

வலிமையான அணி

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது 'டி-20' போட்டியில் வெற்றி பெற்ற, கேப்டன் பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்க அணி வலிமையாக காணப்படுகிறது. குயின்டன் டி காக், மார்க்ரம், மில்லர், ஹென்ரிக்ஸ் என பலரும் பேட்டிங்கில் மிரட்டக் காத்திருக்கின்றனர்.

பந்துவீச்சில் ரபாடா, லுங்கிடி, நார்ட்ஜே, பார்னெல் என அனுபவ வீரர்கள் இந்தியாவுக்கு தொல்லை தருவது உறுதி. சுழலில் கேஷவ் மஹராஜ், ஷம்சி முழுமையான அணி களமிறங்குவதால், இந்தியா வெற்றிக்கு போராட வேண்டும்.



அட்டவணை

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அட்டவணை:

தேதி போட்டி இடம்

இன்று முதல் ஒருநாள் லக்னோ

அக். 9 2வது ஒருநாள் ராஞ்சி

அக். 11 3வது ஒருநாள் டில்லி

* போட்டிகள் மதியம் 1:30 மணிக்கு துவங்கும்.



மழை வருமா

முதல் போட்டி நடக்கும் லக்னோவில் இன்று, மதியம் போட்டி துவங்கும் நேரத்தில் இடியுடன் கூடிய மழை வர அதிகபட்சம் 82 சதவீதம் வாய்ப்புள்ளது. தவிர காலை முதல் மழை வரும் என்பதால் போட்டி முழுமையாக நடப்பது சந்தேகம்.



35

இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மொத்தம் 87 ஒருநாள் போட்டிகளில் மோதின. இந்தியா 35, தென் ஆப்ரிக்கா 49ல் வென்றன. 3 போட்டிக்கு முடிவில்லை.

* இரு அணிகள் கடைசியாக மோதிய 3 போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement