தாகா: ஒருநாள், டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக கோஹ்லி, ரோகித், புஜாரா உள்ளிட்ட இந்திய வீரர்கள் வங்கதேசம் சென்றனர்.
வங்கதேச மண்ணில் இந்திய அணி, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி வரும் டிச. 4ல் மிர்புரில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் டிச. 7, 10ல் (இடம்: மிர்புர்) நடக்கவுள்ளன. முதல் டெஸ்ட், வரும் டிச. 14ல் சாட்டோகிராமில் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் டிச. 22-26ல் மிர்புரில் நடக்கிறது.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த 'டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்ற இந்திய அணியின் சீனியர் வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, லோகேஷ் ராகுல், முகமது ஷமி, அக்சர் படேல் உள்ளிட்டோருக்கு நியூசிலாந்து தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. தற்போது இவர்கள், வங்கதேச தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நியூசிலாந்து தொடரில் பங்கேற்ற ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், ரிஷாப் பன்ட் உள்ளிட்டோரும் வங்கதேச தொடருக்கு தேர்வாகினர்.
இவ்விரு தொடரில் பங்கேற்பதற்காக கேப்டன் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, புஜாரா, உமேஷ் யாதவ் உள்ளிட்ட இந்திய அணியினர் நேற்று வங்கதேசம் சென்றனர். இன்று, இந்திய வீரர்கள் முதற்கட்ட பயிற்சியை துவக்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டஸ்கின் விலகல்
வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் டஸ்கின் அகமது, முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். எனவே இவர், இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து விலகினார். நேற்று, மிர்புரில் நடந்த பயிற்சி போட்டியின் போது வங்கதேச துவக்க வீரர் தமிம் இக்பால், இடுப்பு பகுதியில் காயமடைந்தார். உடனடியாக இவருக்கு 'ஸ்கேன்' எடுக்கப்பட்டுள்ளது. இதன் முடிவைப் பொறுத்து ஒருநாள் போட்டியில் பங்கேற்பது முடிவாகும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!