Advertisement

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 49

அன்பு தோழமைகளே நலமா?
மனிதன் ஒரு சமுதாயப்பிறவி , உறவுகளும் , தோழமைகளும் அவனுக்கு தேவை. பலருடன் ஒன்றுபட்டு உழைப்பதையே மனிதன் விரும்புகிறான். உத்தியோகம் புருஷ லட்சணம் என்று ஒரு பழமொழி உண்டு . இன்று பெண்களுக்கும் இது பொருந்தும் . பணியாற்றுவது அதில் பெருமையடைவது மனிதனின் இயல்பு. ஒருவர் சரியாக பணியாற்றுவதில்லை அல்லது தொழிலில் வெற்றிக் காணவில்லை என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
நாம் இந்த அழகான பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை. ஏனெனில், நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும். ஆனால் இந்த அற்புதமான வாழ்க்கையை வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் பிறந்தோம் , வாழ்ந்தோம் , மடிந்தோம் என்பதில் என்ன பெருமை இருக்கின்றது?
உலகிலேயே இரு புனிதமான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் கருவறை மற்றொன்று அனுபவ வகுப்பறை. தாயின் கருவறையில் உயிரைப் பெறுவது போல் நாம் கடந்து செல்லும் தடங்களில் வாழ்வைப் பெறுகின்றோம். ஏன் சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது? ஏன் சிலருக்கு தொட்டதெல்லாம் தொலைந்தே போகிறது? இதற்குரிய காரணஙக்ளை அறியவும் . அறிந்தவற்றை கொண்டு தங்களை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வழிவகைகளை இக்கட்டுரை வாயிலாக காண்போம்.

நேசிப்பு சுவாசமாய்:
நல்வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவெடுத்தபின் நாம் செய்யவேண்டியது. சிறு விசயம் தான் மாற்றம். அத்தகைய மாற்றம் முதலில் நம்மில் இருந்தும், நம் அன்றாட செயல்களிலிருந்தும் ஆரம்பமாக வேண்டும். மாற்றங்களை விரும்பாத எவரும் மகத்தான வாழ்வு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. இந்த மகத்தான வாழ்விற்கு அற்புதமான ரகசியம் என்ன தெரியுமா நேசிப்பு தாங்க.
நேசம் தெய்வீகமானது
நேசம் வலிமையானது
நேசம் இயல்பானது
நேசம் ஆத்மார்த்தமானது
நேசம் உலகளாவியது
நேசம் ஒளிரக்கூடியது
நேசம் வெற்றி காண செய்வது
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நேசம் அளவிட முடியாதது , எந்த விசயத்தில் நாம் நேசத்தோடு ஈடுபடுகின்றோமோ அத்தனை விசயங்களிலும் மேலே குறிப்பிட்டவைகளை அனுபவபூர்வமாக உணரலாம்.

அழைப்பா? பிழைப்பா?
செய்யும் தொழிலே தெய்வம் என்று தொழிலின் புனிதத்தை போற்றுவது நம் தமிழ் மரபு. நாம் மேற்கொள்ளும் தொழில்/பணிகளை பிழைப்பாக மட்டுமல்லாமல் அழைப்பாகவும் பார்க்க வேண்டும். இந்த அழைப்பை ஒரு வாய்ப்பாகவோ பெருமைக்குரிய காரியமாகவோ அல்ல மாறாக ஒரு சேவை வாழ்வாக பார்க்க வேண்டும்.

உளவியல் பார்வையில் :
உளவியல் பார்வையில் படைப்பு அல்லது தொழில் என்பது மனித ஆளுமையின் நீட்சியாகின்றது. ஒரு சிற்பி சிலையை படைப்பதாகக் கொண்டால் சிலையானது ஆளுமையின் வெளிப்பாடு மட்டுமல்ல..அதில் அவன் பிரசன்னமும் இருப்பதைப் பார்க்கலாம். இதையே காரல்மார்க்ஸ், தனது தத்துவத்தில் மனிதன் தொழிலை ஆற்றும் போது புதியன படைப்பதோடு மட்டுமல்லாமல் தானும் புதிய பரிமாணத்தில் வளர்ச்சியடைகின்றான் என்றார். இதே கருத்தை ராபின் சர்மா கூறுகையில், மகிழ்ச்சியான நீண்ட ஆயுளுக்கு உங்கள் வேலையை நேசிப்பதே காலமறியாத ரகசியம் என்பார்..
எந்த தொழிலை செய்கின்றோம் என்பது முக்கியமல்ல. மாறாக அதை எந்த மனப்பக்குவத்தில் செய்கின்றோம் என்பதே ஒரு மனிதனை புனிதனாக உயர்த்துகின்றது. முழு அர்ப்பணிப்போடும் தியாகத்தோடும் செய்யும் பொழுது தெய்வத் தன்மையை பெறுகின்றது..

இறுகிப் போனோம்… இதயம் இழந்தோம் :
நம்மில் பெரும்பாலானோர் எக்காலமும் இயங்கிக் கொண்டே ஒரு இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆகையால் எப்போதும் இறுக்கம் நிறைந்த சூழலுக்குள் வாழ வேண்டியிருக்கிறது , பணம் பதவி புகழ் என்று ஓடிக் கொண்டே அவற்றை அடைய இயந்திரமாக உழைக்கின்றோம். இதனால் உயிருள்ள உணர்வுள்ள தனித்தன்மையுள்ள மனித இயந்திரமாக மாற்றப்படுகின்றோம் எண்ணப்படுகின்றோம் பொருட்களாய் கருதப்படுகின்றோம்.
மகிழ்ச்சியையும் நிறைவையும் நிம்மதியையும் விலை கொடுத்து வாங்க முயல்கின்றோம் . தெய்வீகத் தன்மை கொண்ட முடிவற்ற நம் வாழ்வை இயந்திரத்தை போலவே நிர்ணயிக்க முயல்கின்றோம். இயந்திரத்தின் எதிர்காலத்தை நாம் தெளிவாக நிர்ணயிப்பது போல் நம் கரங்களில் கொடுக்கப்பட்ட எதிர்காலத்தை நிர்ணயிக்க முயல்கின்றோம்.

உருவம் இல்லாதது உலகை உருவாக்குகின்றது:
“உருவமே இல்லாத நம்முடைய ஆழ்மனம் இந்த உலகத்தை உருவாக்குகின்றது . அடையாளம் காண முடியாத ஆழ்மனம்தான் நம்மை இந்த உலகிற்கு அடையாளம் காட்டுகின்றது. அறிய முடியாத ஆழ் மனம்தான் நம் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்துகிறது.” இதுவரை நாம் வாழ்ந்த நாட்களுக்கும், இனி வாழும் வாழ்க்கைக்கும் மூலதனம் நம் ஆழ்மனம் ஆகும். எதை நாம் விரும்பி நினைக்கிறோமோ அதுதான் நடக்கும். நாம் நினைக்கும் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் சக்தி நம் ஆழ்மனத்திற்கு உண்டு.
நாம் நாள் முழுவதும் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். காரணம் நம் ஆழ்மனம். நாம் விரும்பிய அனைத்தையும் நம் கண்முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு விசுவாசமுள்ள ஜீவன் தான் நம் ஆழ்மனம்.
நாம் விரும்பியதை அடைய ஒரே வழி, நம் எண்ணங்களை சீர் செய்வதுதான். அந்த எண்ணங்களுக்கு உருவம் கொடுத்து .
எண்ணத்தை வலிமைப்படுத்துவதுதான் நாம் ஆழ்மனதை வசியப்படுத்தும் வழியாகும்.
ஓர் எண்ணத்தை மனதில் விதைத்து, அதை அனுதினமும் நினைத்து, அந்த எண்ணத்தை நம் ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த எண்ணம் வண்ணமாவது திண்ணம்.
மனதை அறிவதற்கு கூட பக்குவம் வேண்டும் மனதை அறியப்போகிறேன் பேர்வழி என்று சொல்லி எல்லோரும் உடனே போய் மனதை அறிந்து கொண்டு விட முடியாது அதற்கும் கூட இடையறாத பயிற்சியும் முயற்சியும் அவசியமாகும்.

அழகிய தோட்டத்தை அழிக்கும் களைகள் :
டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த நபரை டிரைவர் தட்டி எழுப்பி, “சார் பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.
தூங்கிக்கொண்டிருந்த நபர் பின்னால் உட்கார்ந்து, விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார். பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது. சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது. இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர் விரும்பவில்லை.
பொழுது போக்கு அம்சங்களும், ஊடகங்களும் பெருகி வரும் இக்காலகட்டங்களில் உடனிருந்து அன்பு செய்வது மிக முக்கியமான அம்சமாகும் , அக்கறையுடன் தவறுகளை திருத்துவதும் , நிறைவுடன் பாராட்டும் தோழமைகள் நம்மோடு இருந்தால் நம் வாழ்க்கை இனிமையே.
எனவே நாம் முன்னேற விரும்பினால் நம் பக்கத்தில் இருப்பவர்கள் உற்சாகமானவர்களா?
சுறுசுறுப்பானவர்களா?
நம்பிக்கையானவர்களா?
விரக்தி எண்ணம் உள்ளவர்களா? என்பதை நமக்கும் நம் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே நம் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது. நம் லட்சிய வாழ்விற்கு லட்சியம் இல்லாதவர்களை நண்பர்களாக ஏற்காமல் . லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளவேண்டும நாம் சோர்வடையும் சமயங்களில் இத்தகையோரை பார்த்தாலே உற்சாகம் தன்னால் தொற்றிக் கொள்ளும், இதனை தான் நம் முன்னோர்கள் எதிர்மறை சிந்தனை தரும் எண்ணங்கள், நபர்கள், இடங்களை விட்டு விலகியே இருங்கள் என்றனர். நம் அருகில் உள்ளவர்களால் நாம் உற்சாகம் பெறுவதைப் போலவே நம்மைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும்.
நாம் சிறப்பாக வாழ்ந்தால் நமக்கும் நம் வாழ்க்கைக்கும் உத்திரவாதம் ஏற்பட்டுவிடும் , யாரையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை , எப்போது நம் கடமையை நாம் சரியாக செய்யவில்லையோ அப்பொழுதே நம் வாழ்வில் நடக்க கூடாதது நடந்து விடும். நாம் மாற மறுக்கின்றோம் ஆனால் உலகத்தை மாற்ற நினைக்கின்றோம்..ஏன் எல்லோரும் நம்மிடமிருந்து விலகுகிறார்கள் என்று யோசித்து நம்மை மாற்றி நடந்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
ஆ.ரோஸ்லின்
தொடர்புக்கு: 9842073219
aaroseline@gmail.com

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement