Advertisement

போர்வையாளர்கள் விரும்புவது என்ன?

சாலை மறியல் செய்யவும், வன்முறைகளை நடத்தவும், ஆட்சி மற்றும் தலைவர்கள் மீது புழுதி வாரி துாற்றவும், பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டவும், தமிழ் இன உணர்வாளர்கள் என்ற போர்வையில் உள்ளவர்களுக்கு மட்டும் தான், உரிமை உள்ளதா... அவர்கள் தான், தமிழர்களின் ஒட்டு மொத்த பிரதிநிதிகளா? ஆனால், அவர்கள் மீது, யாரும் விமர்சனம் கூட வைக்க முடியாது. ஆக்கபூர்வமான விமர்சனத்திற்கு, தங்களின் நியாயமான கருத்தை முன் வைத்து, அவர்கள் போராடுவதில்லை. மாறாக, 'நீ, தமிழ் இன உணர்வாளன் இல்லை' என்ற முத்திரையை மட்டும், எதிர்ப்போர் மீது பலமாக குத்தி விடுவர். 'காமராஜர் காலத்திற்கு பின், அணைகள் கட்டவே இல்லை' என, இவர்கள் குற்றச்சாட்டு வைப்பர். அதே நேரம், அணை கட்டுவதற்காக, சில கிராமங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றால், அதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பர்.'சென்னை நகரில், நெருக்கடி அதிகம்' என, காலம் காலமாக குற்றம் சாட்டுகின்றனர். சரி, துணை நகரம் அமைக்கலாம் என்றால், அதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பர்.தமிழக இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு இல்லை என, கூவுவர். தொழிற்சாலை கட்ட முயற்சித்தால், எதிர்ப்பு தெரிவிப்பர். தமிழர்கள் மீது உண்மையிலேயே நல்ல எண்ணம் இல்லாத, தமிழ் இன போர்வையாளர்களின் செயல்பாடுகள் அனைத்துமே, கேலிக்கூத்தானவை.காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்னை, ஆண்டாண்டு காலமாய் உள்ளது. காவிரி நதியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு, குறைகிறது என்பது உண்மை தான்.தண்ணீர் மேலாண்மையை பின்பற்ற தவறி விட்டு, காவிரி பெயரில், போர்வையாளர்கள் ரகளை செய்வது நியாயமா? கர்நாடகாவில், புதிதாக, 400 ஏரி, குளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில், மூன்று ஆண்டுகள் பொழிய வேண்டிய மழை, ஒரே வாரத்தில் பெய்தாலும், அந்த நீரை, கடலுக்கு தானே விரயம் செய்கிறோம். கடலுக்கு செல்லும் நீரை தடுக்க, தடுப்பணை கட்ட, போர்வையாளர்கள் என்றாவது போர்க்கொடி துாக்கியிருக்கின்றனரா?இவர்களின் பின், இளைஞர்கள் பலர் உள்ளனர். அவர்களை பயன்படுத்தி, தமிழகத்தில், ஏரி, குளங்களை மீட்கவும்,புதியதாக உருவாக்கவும் ஏன் கூடாது? இதை, அரசு தான் செய்ய வேண்டும் என்றால், காவிரி நீரையும், அரசே பெற்று தரும்; அமைதி காத்திருங்கள். அரசு அதற்கான முயற்சியில் ஆழமாக இறங்கியுள்ளது; சட்ட நடவடிக்கைகளை துவக்கியுள்ளது. அது வரை, மாநிலத்தில் அமைதி நிலவ விடுங்கள்.ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாமல், வெற்று கோஷத்தாலும், வன்முறையாலும், எதை சாதிக்க போர்வையாளர்கள் நினைக்கின்றனர்... அவர்களின், உண்மையான முகம் தான் என்ன?நாடுகளுக்கு இடையே கூட, நதி நீர் பகிர்வு எளிதாக இருக்கிறது. மாநிலங்களுக்கு இடையே ஏன் முடியவில்லை... இந்த கேள்வியை, போர்வையாளர்களும் சொல்லிக் கொள்கின்றனர்.நாடுகளுக்கு இடையே, அதன் தலைவர்கள் சட்டத் தை மதிக்கின்றனர்; நாம் மதிப்பது இல்லையே... காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த கட்ட, சட்ட நகர்வை முன் வைத்து செல்ல வேண்டும். அதற்கு, சில நாட்கள் காத்திருந்தால், என்னவாகிவிடும்? மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு இன்று அமைத்தால், நாளை காவிரி நீர், தமிழகத்திற்கு வந்து விடுமா... வராது! ஏனெனில், கர்நாடக அணைகளிலும், இப்போது தண்ணீர் இல்லை. மொழி, இன உணர்வுகளை மட்டும் துாண்டி விட்டு, போராட்டம் நடத்துவதால், என்ன சாதிக்க முடியும்? ஒரு நாள் கடையடைப்பு என்பது, போர்வையாளர்களுக்கு வெறும் அறிவிப்பு. அதுவே, காய்கறி வியாபாரிக்கு, வாழ்வாதார பிரச்னை. அந்த வியாபாரியும், அவரின் குடும்பமும், தமிழர்கள் தான்.சாலை மறியலால், போக்குவரத்து ஸ்தம்பிக்கும்; 'ஆம்புலன்ஸ்' செல்ல முடியாது; உள்ளே உயிருக்கு போராடி கொண்டிருப்பதும், தமிழர் தான். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், போர்வையாளர்களே... போராட்டம் என்பது, மஹாத்மா காந்தியின், போராட்டங்கள் போல இருக்க வேண்டும். பிறருக்கு இடையூறு ஏற்படுத்தாமல், தன்னைத் தானே வருத்திக் கொண்டாரே, அது போல் போராட நீங்கள் தயாரா? சரியான நோக்கத்திற்காக, மக்களை ஒன்றிணைக்க வேண்டும். அதை தவிர்த்து, ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்கு எதிராக, சில நாட்களுக்கு முன், சென்னை, அண்ணாசாலையில் நீங்கள் செய்தது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. 'சீருடையில் இருக்கும் காவலரை தாக்குவது, வன்மையாக கண்டிக்கத்தக்கது' என, நடிகர் ரஜினி கூறியதில், என்ன தவறு இருக்கிறது... ஒரு தலைவனின் பார்வை, அப்படித் தான் இருக்க வேண்டும். கோடிக்கணக்கான மக்களை, சில லட்சம் போலீசார் தான், பாதுகாக்கின்றனர். அவர்களுக்கு எதிராக வன்முறை நடத்தினால், ஜனநாயகத்தின் ஆணி வேரே அசைந்து விடும். ரஜினி, சரியாகத் தானே சொன்னார்! எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் போர்வையாளர்களுக்கு, ஜனநாயகமும், நீதிமன்றங்களும் தேவை இல்லை. இவை இல்லாத தேசம், சர்வாதிகாரி கையில் சிக்கி, நாசமாய் தான் போகும். அதை தான், இவர்கள் விரும்புகின்றனரா?
-- சி.கலாதம்பிசமூக நல விரும்பிsureshmavin@gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement