Advertisement

நல்லது நடக்குமா விவசாயிகளுக்கு?

இந்தியாவில் விவசாய இயக்கங்கள் பலவிருந்தும், வலுவாக இயங்கிய போதும், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய தொலைநோக்கு திட்டங்களோ, சட்டம் இயற்றுதலோ நிகழ்ந்ததில்லை. எந்த பிரச்னையானாலும், கமிட்டிகள் அமைக்கப்பட்டு, தீர்வுகள் தள்ளி போடப்பட்டன.இந்திய விவசாய இயக்கங்கள், அதிகாரத்தில் உள்ள ஆட்சிகளை பெரிதும் நம்பியிருந்திருக்கின்றன என்பதாலேயே இது என, கருதத் தோன்றுகிறது. குறிப்பிட்டுச் சொன்னால், பல ஆண்டுக்கு முன் நிகழ்ந்த நில சீர்திருத்த சட்டங்கள் தான், விவசாய இயக்கங்களின் வெற்றிகரமான நிகழ்வு என்று கூறலாம். சர்வதேச அளவிலேயே, விவசாயிகளின் நிலை அப்படி தான் உள்ளது. மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை, சமீப காலமாக தான், கிராமப்புற விவசாயிகள் மற்றும் மக்களின் உரிமை குறித்து விவாதிக்கத் துவங்கி இருக்கிறது. இதில், இந்திய விவசாயிகளின் போராட்டம், வரலாற்று முக்கியத்துவம் பெற்றதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்திய விவசாயத் துறை பெரும் நெருக்கடியில் இருக்கிறது. இடுபொருட்களின் விலையை, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏகபோகமாக நிர்ணயிப்பதாலும், இதற்காக கொடுத்து வந்த மானியத்தை அரசு விலக்கிக் கொண்டதும், விவசாயிகளின் துன்பத்தை அதிகரித்துள்ளது.இந்த வகையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள், சிறு, குறு, நடுத்தர விவசாயிகளும் மற்றும் கட்டு குத்தகை சாகுபடியாளர்களும், கூலி விவசாயிகளும் தான். இவை போதாதென்று, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான தானியங்களை, தேவையற்ற நேரத்தில், ஏற்றுமதி - இறக்குமதி செய்வதும், அதன் வரியை கையாளும் விதமும், விவசாயிகளுக்குத் தொழில் நிறுவனங்கள் தாமதமாகப் பணப் பட்டுவாடா செய்வதும், மேலும் துன்பத்தில் ஆழ்த்துகிறது. எம்.எஸ்.சுவாமிநாதனின் தேசிய விவசாய கமிஷன், 'விவசாயிகள் உற்பத்திக்காக செய்யும் செலவிலிருந்து, கூடுதலாக, 50 சதவீதம் கிடைக்கும் வகையில், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்' என பரிந்துரைத்தது. காங்கிரஸ் அரசு, இதை அமல்படுத்தவில்லை. தற்போது ஆட்சியில் இருக்கும், பா.ஜ.,வும் இதைச் செய்யவில்லை. மார்ச் மாதத்தில் நடந்த கூட்டத்தில், 21 எம்.பி.,க்களும், விவசாயிகளுக்கு பரிந்து பேசினர். அவர்களுக்குச் சாதகமாக, தீர்மானமும் நிறைவேற்றினர். ஆனால், அதற்கான செயல்வடிவம் இன்னும் கொடுக்கப்படவில்லை.
ஏற்கனவே கடனாளியாக உள்ள விவசாயிகள், அடுத்த சில ஆண்டுகளில், மீண்டும் கடனாளி ஆகி விட, வாய்ப்புகள் அதிகம். எனவே, தற்போதைய தேவை, கடன் தள்ளுபடி மட்டுமல்ல; கடன் தொல்லையிலிருந்து நிரந்தரமாக விடுதலை அடைய வேண்டும் என்பது தான். அதற்கான வழிமுறைகளும், உத்தரவாதங்களும் தேவை. இது வெறும் தேர்தல் வாக்குறுதி போல இருந்து விடக் கூடாது; சட்டபூர்வமான பாதுகாப்பாக இருக்க வேண்டும். அப்போது தான், விவசாயிகள், கவுரவமான வாழ்க்கை வாழ இயலும். விவசாயிகளுக்காக தற்போது வரையப்பட்டு இன்னும் நடைமுறைக்கு வராத இரண்டு சட்டங்கள், சிறந்த வழிகாட்டியாக உள்ளன. அதாவது,- கடன் தொல்லையிலிருந்து முழு நிவாரணம் மற்றும் வேளாண் விளை பொருட்களுக்கு, உறுதி செய்யப்பட்ட, லாபகரமான நியாய விலை பெறுவதற்கான உரிமை ஆகிய இரண்டு சட்ட வரைவுகளும், பார்லி.,யின் இரண்டு சபைகளிலும், விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளன. இதற்கு, அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், விவசாயிகளின் வாழ்வில் ஔி ஏற்றப்படும்.


அனந்து,
ஒருங்கிணைப்பாளர்,
ஆஷா - பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு.
organicananthoo@gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement