Advertisement

பேச்சு மட்டும் தான் இங்கே; செயல் எங்கே?

உலகின் ஆறாவது பெரிய பொருளாதார பலம் கொண்ட நாடு இந்தியா. தேக்க நிலை பொருளாதாரம் கொண்ட நாடுகள் பலவற்றுக்கு இந்திய சந்தை ஒரு அருமையான வாய்ப்பு. இங்கு நடுத்தர வர்க்கம் வளர்ச்சி நிலையில் உள்ளது. இத்தகைய பலத்தை நல்ல வாய்ப்பாகவும், லாபமாகவும் மாற்ற வேண்டியது, நம் வெளியுறவுக் கொள்கையின் முன் உள்ள சவால்.

அதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களால் என்ன பலன் விளைந்தது என்பதை எதிர்காலம் தான் சொல்லும். ஆனால், மோடி முன் வைத்த, 'அண்டை நாடுகளுக்கே அதிக முக்கியத்துவம்' என்ற முழக்கம், இதுவரை எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை. 21ம் நுாற்றாண்டில், மியான்மர், வங்கதேசம், இலங்கை, நேபாளம் மற்றும் மாலத்தீவு ஆகிய அண்டை நாடுகளுடன், இந்தியாவின் உறவு, பெரும் மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது.

ஏழ்மையான அண்டை நாடுகளின் எதிர்பார்ப்பை, இந்தியா சரிவர நிறைவேற்றாதது தான், இந்த மாற்றத்துக்கு அடிப்படை. இலங்கையைப் பொறுத்த வரை உள்நாட்டுப் போரால் அதன் பொருளாதாரம் நாசமடைந்துள்ளது.அதிலிருந்து மீள்வது, அந்நாட்டின் உடனடிக் குறிக்கோள். அதுபோன்றே வங்கதேசம், மியான்மர், மாலத்தீவு, நேபாளம் போன்ற நாடுகளுக்கும் பொருளாதார வளர்ச்சி அவசியமானதாக உள்ளது.

குறைந்த செலவில், மாபெரும் திட்டங்கள் விரைவாக முடிய வேண்டும் என்பது இந்நாடுகளின் எதிர்பார்ப்பு.இந்தியாவில் வளமான மனித வளம், பரந்த சந்தை இருந்தும் அவர்களின் எதிர்பார்ப்பை நாம் ஈடுசெய்யவில்லை. விளைவு, இந்தியா குறித்து அந்நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக நிராசை அடைந்து விட்டன. சீனாவோ, அண்டை நாடுகளின் உள்கட்டமைப்பு தேவைகளை நிறைவேற்றித்தருவது, திட்டங்களுக்கு நிதியுதவி செய்வது என, செல்வாக்கை கூட்டி வருகிறது.

தன் உபரி பொருளாதாரத்தை வாரி இறைத்து முதலீடு செய்தும், நவீனத் தொழில்நுட்பத்தை திறம்பட கையாண்டும், இந்த அண்டை நாடுகளில் சீனா நன்கு கால்பதித்துள்ளது.இந்தியாவின் முக்கியப் பிரச்னை அதன் வெளியுறவுக்கொள்கையில் கொண்டுள்ள பார்வையே. 'சீனா, இந்தியாவை சுற்றிலும் ஒரு வேலியை கட்டமைக்கிறது.

'முத்து மாலை என்ற திட்டத்தின் மூலம், ராணுவ ரீதியாக, இந்தியாவை சீனா சுற்றி வளைக்கிறது' என, மேற்கத்திய அறிஞர்கள் கூறினர். இந்திய அறிஞர்கள், அதை அப்படியே பிடித்துக்கொண்டனர். முத்துமாலை கோட்பாட்டிற்கு மிகையான வியாக்யானங்கள் கொடுக்கப்பட்டன. 'சீனா இந்நாடுகளில் செய்யும் உதவிகள் அனைத்தும், இந்தியாவுக்கு எதிரான ராணுவ ரீதியான சுற்றிவளைப்பு திட்டத்தின் அங்கமே' என, இந்திய வெளியுறவு கொள்கை வகுப்பாளர்கள் மேலோட்டமான முடிவுக்கு வந்தனர். ஆனால், எதார்த்தமோ வேறு. இது, அமெரிக்காவால் இந்தியாவின் மனதில் விதைக்கப்பட்ட கருத்து.
இந்தியாவுக்கு சீனா மீதான பீதியை ஏற்படுத்தி, அதன் ஆதிக்கத்துக்கு எதிரான போரில் இந்தியாவை உள்ளிழுத்த விட வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம். காரணம், சீனாவின் மேலாதிக்கம் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல். சீனாவுக்கும், அமெரிக்காவுக்குமான, தென் சீனக்கடல் தொடர்பாக இருந்து வரும் பஞ்சாயத்து, அனைவரும் அறிந்ததே. இதை விளங்கிக்கொண்டால், ஆசியா குறித்த அமெரிக்காவின் வியூகங்கள் குறித்த புரிதல் கிடைக்கும்.
ஆசியாவில் வலுவான பிடியின்றி தவிக்கும் அமெரிக்காவுக்கு, சீனாவை எதிர்க்க சரியான துணை இந்தியா. இதற்காக, அமெரிக்கா விரிக்கும் வலை தான், முத்துமாலை கோட்பாடு.சீனாவின் திட்டங்கள், இந்தியாவின் அண்டை நாடுகளைச் சுற்றி இருப்பதே, 'முத்துமாலை திட்டம்' உண்மை என்பதற்கான ஆதாரம் என, ஒரு வாதத்துக்கு வைத்துக்கொள்வோம்.
அப்படியென்றால், 'பட்டுச்சாலை' திட்டத்தை சீனா அறிவித்துள்ளதே, அதை என்ன சொல்வது?காரணம், பட்டுச்சாலை திட்டம், 60 நாடுகளை உள்ளடக்கியது. அதன் படி பார்த்தால், தென் கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் மூன்றில் இரண்டு பகுதியை சீனா சுற்றிவளைக்கப் பார்க்கிறது என்று சொல்வோமா?
ஆக, சீனாவின் பரந்துபட்ட பூகோள அரசியல் திட்டத்தில், அண்டை நாடுகளுக்கான உதவி, ஒரு சிறு பகுதி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கையைப் பொறுத்த வரை, முன்னாள் அதிபர் ராஜபக்சே, தன் ஆட்சிக்காலத்தில், போருக்கு பிந்தைய பொருளாதார சீரமைப்பில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது.
'மனித உரிமை மீறல் காரணமாக பொருளாதாரத் தடை' என, மேற்கு உலக நாடுகள் மிரட்டிக்கொண்டிருக்க, சீனாவோ, ஹம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம், மாத்தளை விமான நிலையம், கொழும்பு கட்டுநாயக்க நெடுஞ்சாலை, மகம்புர விமான நிலையம் என, இலங்கையில் பெரும் உள்கட்டமைப்பு திட்டங்களை கொடுத்தது.
இந்தியப் பெருங்கடலில் வியூக ரீதியாக, இலங்கை முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பு என்பதால், சில திட்டங்கள், தங்களுக்கு லாபம் இல்லாவிட்டாலும், சீனா அதை செய்ய முன் வந்தது. அதே சமயம், தற்போது இலங்கை தன் உள்நாட்டு மொத்த உற்பத்தியில், 76 சதவீதம் கடன்பட்டுள்ள நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மைத்திரிபால தலைமையிலான புதிய ஆட்சி அமைந்த பிறகும், சீனாவின் செல்வாக்கை குறைக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. சீனாவின் உதவியின்றி, செலவு பிடிக்கும் பெரும் உள்கட்டமைப்பு நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்பதை அவர் உணர்ந்துள்ளார்.விரும்பாவிட்டாலும், சீனாவுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலைக்கு, இலங்கை தள்ளப்பட்டு உள்ளது.
கடந்த, 2014ல், சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள், கொழும்பில் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாயின. இது, இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தினாலும், கொழும்பில் நீர்மூழ்கி கப்பல் நிறுத்த சீனாவுக்குத் தடை விதிப்பது இலங்கைக்கு எளிதான காரியம் இல்லை.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை, இந்தியப் பெருங்கடலில் பயணிக்கும் சீனக் கடற்படை மற்றும் சரக்குக் கப்பல்களின் எரிபொருள் நிரப்பு தளமாகவும், கடற்படை கப்பல்களின் தரிப்பிடமாகவும் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இது, இந்திய நலன்களுக்கு மிகவும் அச்சுறுத்தலான ஒன்று.
இந்த துறைமுகத்தை, 99 வருட குத்தகைக்கு சீனா எடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது தான், இந்தியாவுக்கு வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட தோல்வி புரிந்தது. வியூக ரீதியாக, சென்னையை விட, ஹம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுகங்கள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
மொத்தம், 1,300 கோடி ரூபாய் சீனாவின் கடனுதவியுடன் கட்டப்பட்ட மாத்தளை விமான நிலையம், பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்தக் கடனை, திருப்பி அடைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக கூறி, மாத்தளை விமான நிலைய பராமரிப்பு பணியை, இந்தியா பெற்றுள்ளது.மறுபுறம், சீனாவோ, எந்த நஷ்டமும் இன்றி, அதே வியூக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில், தனது இருப்பை லாபத்தில் நிலைநிறுத்தியுள்ளது.
இந்தியாவிற்கு நேர் தெற்காக, இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மாலத்தீவு, இந்தியாவின் பாதுகாப்புக்கு முக்கிய அரணாக இருக்கிறது. அதிபர் யாமீன் தலைமையிலான ஆட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தில் சீனாவின் பங்கு கணிசமாய் இருந்தது. இந்தியாவின் எச்சரிக்கையையும் மீறி, மாலத்தீவில் நெருக்கடி நிலையை, யாமீன் நீட்டித்தார்.
இந்தியா அதில் தலையிட வேண்டும் என்ற வலுவான கோரிக்கை எழுந்தது. இந்தியா தனது பலம் காட்ட முயற்சித்த போது, சீனாவின் போர்க்கப்பல்கள், கிழக்கு இந்திய பெருங்கடலில் நுழைந்தன. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்த வரை, அதன் முன் உள்ள முக்கிய சவால், சீனா.
அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங், சர்வாதிகாரத்தை விரும்பும் தன்மை கொண்டவர். சீனாவை உலக அரங்கில் ஏகாதிபத்திய நாடாக நிலைநிறுத்த, எதையும் செய்யத்துணிந்த கொள்கை கொண்டவர். சீனாவில், மாவோ ஆட்சிகாலத்தில் நடந்த உள்நாட்டுப் போரால், பல லட்சம் பேர் இறந்தனர். அதனால், இன்னொரு மாவோ உருவாகாமல் தடுக்க, சீன கம்யூனிஸ்ட் கட்சி, அதிபருக்கான பதவிக்காலத்தை, 10 ஆண்டுகளாக குறைத்தது.
ஆனால், தற்போதுள்ள அதிபர் ஜி ஜின்பிங், அந்த தடையை எப்படியோ தளர்த்தி, ஆட்சிக்காலத்தை நீட்டித்துக் கொண்டுள்ளார். ஜி ஜின்பிங் சித்தாந்தத்தால் உந்தப்பட்டு செயலாற்றுபவர் அல்ல; அவர் நடைமுறைவாதி. அவருடைய ஆட்சிக்காலத்தில் பெருமளவு சுதந்திரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.
இப்படிப்பட்டவரின் ஆட்சி, இந்தியாவிலும் பல விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும். மூன்று மாதம் நீடித்த, டோக்லாம் பிரச்னை, சுமர் பகுதியில் சீன ராணுவ ஊடுருவல் என்பன போன்ற, சமீபத்திய சம்பவங்கள் இதற்கு உதாரணம். சீனாவை எதிர்கொள்ள, இந்தியா வெளியுறவுக் கொள்கையில் தகுந்த மாற்றங்களை செய்ய வேண்டும்.
அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுடனான நட்பு முழுவதும் பாதுகாப்பானது என, சொல்லி விட முடியாது. தேவைக்கு பயன்படுத்துவதும், காரியம் முடிந்த பின் கை கழுவுவதும் அமெரிக்காவின் வரலாறு. சீனாவைப் பொறுத்த வரை, முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் செயல்படுகிறது.
இந்தியாவும் ஆசிய, ஆப்ரிக்க வளர்ச்சியில் பணியாற்றுவதாக சொல்கிறது. ஆனால், நத்தை வேகத்திலேயே திட்டங்கள் நகர்கின்றன. சீனாவின் சுறுசுறுப்பான நடவடிக்கைகள், வேகம் ஆகியவையே, அண்டை நாடுகள், சீனாவுடன் உடன்படிக்கைகள் மேற்கொள்ள காரணம்.சீனாவின் திட்டங்கள், தானே நொறுங்கி விழும் வரை காத்திருப்பது இந்தியாவின் வியூகங்ளின் ஒரு பகுதி. மற்றது, சீனாவின் திட்டங்களில் உள்ள ஆபத்துகளை அண்டை நாடுகளுக்கு எடுத்துரைப்பது. மற்றபடி, திட்ட வியூகங்களில் தொடர்ச்சியான கண்காணிப்பை இந்தியா மேற்கொள்வதில்லை.
பிறநாட்டுத் தலைவர்களை கட்டிப்பிடிப்பது, கை கொடுப்பது, புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதை தவிர்த்து, வியூகம் அமைத்து தொடர்ச்சியாக செயல்படுவதாக தெரியவில்லை. வட, இந்தியப் பெருங்கடல் மற்றும் மலாக்கா ஜலசந்தி வழியே, இந்திய துறைமுகங்களின் உதவியோடு, 10 ஆயிரம் கப்பல்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், சீனா கொண்டு வரும் கடல்வழிப் பட்டுப்பாதை திட்டம், நம் கடல் போக்குவரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக திகழ்கிறது. நம், 90 சதவீத வணிக மற்றும், 100 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதி, இந்தியப் பெருங்கடல் வழியாகவே நடக்கிறது.
எனினும், சீனாவின் முரட்டுத்தனமான பாய்ச்சலுக்கு, இந்தியாவின் பதில் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. ஏற்கனவே, ஜிபூட்டி மற்றும் மாலத்தீவு நாடுகளில், ராணுவத் தளத்துக்கான இடத்தை சீனா பெற்று விட்டது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் விரைவில் அது போன்ற ராணுவத்தளங்கள் அமைவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. பிரச்னை மற்றும் இடர்ப்பாடு நேரங்களில், இந்தியாவின் எரிபொருள் சப்ளையை சீனா தடுக்க வாய்ப்புள்ளது.
இந்தியப் பெருங்கடலுக்கான, இந்தியாவின் தொலைநோக்கு பார்வை திட்டம் இப்போது அனாதையாக கிடக்கிறது. கடல் கட்டுப்பாடு மற்றும் நிலப்பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், போதுமான நடவடிக்கைகள் இல்லை. நம்மிடம் அவை வெறும் காகிதத் திட்டங்களாக மட்டுமே இருக்கின்றன.போட்ட திட்டத்தின் முன்னேற்றத்தை கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால், அது இங்கு இருப்பதாக தெரியவில்லை. உறுதியான செயல்பாட்டுக்கு பதிலாக, பேசிக்கொண்டு மட்டுமே இருக்கிறோம்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement