Advertisement

சாக்கடை இணையதளங்களை சாத்துவோம்!

திருப்பிய பக்கமெல்லாம் செய்தித்தாள்களில், பாலியல் வன்மங்கள் பயமுறுத்துகின்றன. காதைப் பிளக்கும் காட்சி ஊடகங்களின் கதறல்கள், பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் அடிவயிற்றில் நெருப்பை அள்ளிப் போடுகின்றன. படிக்கச் சென்ற பிள்ளை, பத்திரமாக வீடு திரும்புவாளா... என்ற பதைபதைப்புடன், வழி மேல் விழி வைத்து, வேதனையுடன் காத்திருக்க வேண்டிய நிலை பெற்றோருக்கு... வேற்றுக்கிரகவாசிகள் திடீரென பூமியில் இறங்கி, பாலியல் பயங்கரத்தை பெண்களுக்கு எதிராக, குறிப்பாக, சின்னஞ்சிறு பிஞ்சுகளுக்கு எதிராக நிகழ்த்துவதைப் போன்ற ஒரு வித பீதி ஏற்பட்டிருக்கிறது. பள்ளிக்கூடங்களில், பணியாற்றுமிடங்களில், பயணிக்கும் பஸ்களில் கூட பாதுகாப்பாற்ற நிலை! 'பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், காலங்காலமாக நடப்பது தானே... அதை முற்றிலுமாக ஒடுக்க முடியுமா... ஊடகங்கள் தான் ஊதிப் பெருக்கி ஊளையிடுகின்றன' என, சப்பைக்கட்டு கட்டி சமாளிக்கின்றனர், காவல் துறையினர் சிலர்.பொது இடங்களில் நடக்கும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்மங்களை தடுப்பது வேண்டுமானால், அரசின் கடமைப் பொறுப்பாக இருக்கலாம். சொந்த வீட்டில், உறவினர் வீட்டில், நண்பர் வீட்டில் சின்னஞ்சிறு மழலைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் பலாத்காரங்களை எப்படி தடுப்பது... யார் தடுப்பது?யாரை நம்பி குழந்தைகளை விட்டுச் செல்கிறோமோ, அந்த மனிதர்களே, திடீரென அரக்க குணமேறி, அவதாரமெடுத்து, காம வெறியுடன் குழந்தைகளை கடித்து குதறத் துவங்கினால், எந்த குல சாமியிடம் போய் கூக்குரலிடுவது?பாலியல் குற்றங்களை பட்டியலிட்டு, பட்டிமன்றம் போல, 'டிவி' விவாதங்களில் விளாசித் தள்ளுவோர், விழிப்புணர்வு குறித்த விஷயங்களை பேசுவதில்லை. பாலியல் குற்றங்களை தடுக்க முடியாவிட்டாலும், நிச்சயம் தவிர்க்க முடியும். அதற்குத் தேவை விழிப்புணர்வு; முன்னெச்சரிக்கை.அவசர வேலை, வெளியூர் பயணம் உள்ளிட்ட காரணங்களின் போது பெண் பிள்ளைகளை பக்கத்து வீடு, நண்பர் வீடு, உறவினர் வீடு என, நம்பிக்கைக்குரியவர் வீட்டில் விட்டுச் செல்கிறோம்.அவ்வாறு விட்டுச் செல்லும் போது தான், அதுவும் அடிக்கடி அவ்வாறு நிகழும் போது தான், குற்றங்களுக்கான வாய்ப்புகள் கூடுகின்றன என்பது, போலீசாரின் கூற்று. நடந்த சம்பவங்களுக்கும் அதுவே காரணியாகவும் இருந்துள்ளன.இவ்விஷயத்தில் கொஞ்சம் விழிப்புணர்வு இருந்தாலே, பெரும்பாலான பாலியல் பலாத்காரங்களை தடுத்துவிட முடியும். அடுத்ததாக, பாலியல் துாண்டல் என்ற நெருப்பு. ஆண், பெண், சிறுவர், பெரியவர் என்ற வித்தியாசமின்றி, 'ஆண்ட்ராய்டு' போன்கள் அதிகளவில் புழங்குகின்றன. இரவு கவிழ்வதும் அதில் தான்; விடியலில் விழிப்பதும் அதில் தான். தொழில்நுட்ப அடிமைகளாக மனிதர்களை அவை மாற்றி விட்டன! குடும்பத்தில் நான்கு பேர் வீட்டில் கூட்டாக இருந்தாலும், தனித்தனியாக மொபைல் போனில் மூழ்கி, கடனுக்கு வாழும் கலையைக் கற்றுக் கொண்டிருக்கின்றனர்; சின்னஞ்சிறுசுகள் போன்களை தனிமையில் பயன்படுத்துகின்றன. கட்டுப்பாடற்ற மொபைல் போன் உபயோகம், அதிபயங்கர வெடிகுண்டுகளைக் காட்டிலும், சக்தி வாய்ந்தவையாக மாறி, குடும்பங்களை குறி வைத்து சிதறடிக்கின்றன என்பது, மனநல மருத்துவர்களின் எச்சரிக்கையாக உள்ளது.காரணம், பாலியல் உணர்வுகளைக் கிளப்பி, குற்றங்களில் ஈடுபடத்துாண்டும் ஆபாச இணைய தளங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. எதையோ தேடப் போனாலும், அதுவாகவே வந்து நிற்கும் அபாயங்களும் அதிகமுள்ளன. தப்பித்தவறி இளம் பிஞ்சுகளின் பார்வை ஒரு முறை அவற்றின் மீது பட்டு விட்டால், அன்றாடம் பார்க்கத் துாண்டி, அழிவின் பாதைக்கே அழைத்துச் சென்று விடும். பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை துாவி விடும். ஆகவே, தனிமையில் போனில் நேரத்தைச் செலவிடும் பிள்ளைகளின் மீதும் கொஞ்சம் கவனம் வைக்க வேண்டியது பெற்றோரின் கடமை!நவீன தொழில்நுட்ப வசதி வாய்ப்புகள், கத்தியைப் போன்றவை. அதில், காய்கறிகளையும் நறுக்கலாம்; ஆளையும், 'காலி' செய்யலாம். எப்படி, எதற்கு பயன்படுத்துகிறோம் என்பதில் தான் விஷயமே இருக்கிறது. விழிப்புணர்வு இல்லாத மனநோயாளியின் கையில் கத்தி இருந்தால் என்ன நிகழுமோ, அது தான் தற்போது, மொபைல் போன் பயன்படுத்தத் தெரியாத, 'பசங்களிடமும்' அதிகம் காணப்படுகிறது. சமீபத்தில் கோவையில் நிகழ்ந்த ஒரு சம்பவமே இதற்கு நல்ல உதாரணம். பரீட்சார்த்த முறையில் இலவச, 'வைபை' வசதியை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அறிமுகம் செய்திருந்தது, மாநகராட்சி நிர்வாகம். சில நாட்கள் கழித்து, அதன் பயன்பாட்டை ஆய்வு செய்த அதிகாரிகள், அதிர்ச்சியில் உறைந்து போயினர். காரணம், அன்றாடம் ஆபாச இணையதளங்களைப் பார்க்கவே அதிகம் பேர், அவ்வசதியை பயன்படுத்தியிருந்தனர்; அதுவும், பொதுவெளியில்!இப்படி, ஆபாச காட்சிகளின் ரசனைக்கு அடிமையாகும் ஆசாமிகள், காமத்துக்கு வடிகால் தேடும் போது, அருகிலிருப்பவர் சிறுமியா, மூதாட்டியா என பார்ப்பதில்லை. பாலியல் பலாத்காரங்களை நிகழ்த்தத் துவங்கி விடுகின்றனர். பாலுணர்ச்சி வெறியில் சிலர், விலங்குகளைக் கூட விட்டு வைப்பதில்லை என்பது தான் அதிர்ச்சித் தகவல். இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். பாலியல் பயங்கரவாதத்துக்கு துாபமிடுவதில், ஆபாச இணைய தளங்களுக்கு அதிக பங்கிருக்கிறது. சாக்கடைக் குழியில் சமூகத்தைத் தள்ளும் இந்த இணைய தளங்கள், இந்திய மண்ணில் அடியோடு இழுத்து மூடப்பட வேண்டும். எரிகிற கொள்ளியை வெளியே இழுத்தால் நெருப்பு தானாக அணைந்து விடும். இதை முதலில் செய்யுமா அரசு?
க.விஜயகுமார்,Vijayakumark@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement